By Village Missionary Movement
Tuesday, 31-May-2022இன்றைய தியானம்(Tamil) 31-05-2022
கிரயம் செலுத்தும் அன்பு
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை ...தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.’’ - யோவான் 3:16
பல ஆண்டுகளுக்கு முன் பிரான்சு நாட்டில் உள்ள ஒரு பெரிய மாளிகையில் மிகப்பெரிய செல்வந்தர் ஒருவர் தனிமையாக வாழ்ந்து வந்தார். மிகவும் ஆடம்பரமாக வாழ வேண்டிய அவரோ ஒரு நடுத்தர மக்கள், உண்ணும் உணவைத்தான் உண்டார். நடுத்தர மக்கள் அணிவது போல் உள்ள ஆடைகளைத்தான் அணிவார். அவருடைய ஊரைச் சேர்ந்த மக்கள் அவருடைய எளிமையான வாழ்வை பார்த்து பரிகாசம் செய்தனர். இவ்வளவு சொத்தையும் யாருக்காக சேர்த்து வைக்கிறார் என்று இகழ்ந்தனர். காலம் சென்றது, ஒரு நாள் அவர் மரித்துப் போனார். அவர் எழுதி வைத்திருந்த உயில் ஊர் மக்கள் கையில் கிடைக்க, அவர்கள் அதைக் கண்டு அதிர்ந்து போயினர். அவருடைய சொத்து முழுவதையும் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும் அவ்வூர் மக்களுக்கு, இலவச தண்ணீர் கொடுக்க உபயோகிக்குமாறு கேட்டிருந்தார்.
இயேசு கிறிஸ்துவும் தனது பரலோக மகிமையை விட்டுவிட்டு, ஏழ்மை கோலமாய் வந்தார். நாம் ஐசுவரியவான்களாகும்படி அவர் தரித்திரர் ஆனார். அவர் நம்மிடம் எதிர்பார்க்கும் காரியம் இரண்டுதான். ஒன்று, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக என்பது (மத்.22:37) என்றார். நாம் நம்முடைய எல்லா முழுமையும் கடமைக்காக அவரிடம் தராமல் அன்புகூர்ந்து அர்ப்பணிக்கிறவர்களாக இருக்க வேண்டும். ஆபிரகாம் அப்படி அன்புகூருகிறாரா என அறியவே தேவன் ஈசாக்கை பலி செலுத்தும்படி சொல்கிறார் (ஆதி.22:2). இதில் ஈசாக்கைப் பலியிட வேண்டும் என்பது நோக்கமன்று, மாறாக ஈசாக்கை விட அதிகமாய் என்னை நேசிக்கிறானா என்பதை அறியவே தேவன் விரும்பினார். இரண்டாவதாக உன்னிடத்தில் அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்பு கூருவாயாக என்பதே (மத்.22:39). இந்த இரண்டும் தராசின் இரண்டு தட்டுகள் போல் இருக்க வேண்டும். இதற்கு தேவன் நல்ல சமாரியன் உவமையைச் சொல்கிறார். அன்பு என்று சொல்லுவது தானாக முன் வந்து தன்னுடையதை மகிழ்ச்சியாக மற்றவர்களுக்காகச் செலவிடுவதல் ஆகும். நாம் காண்கிறவர்களிடத்தில் அன்பாக இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால் நாம் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களாக இருப்போம். நல்ல சமாரியன் தன் திராட்சை ரசம், எண்ணெய், வாகனம், இரண்டு பணம் இவற்றையெல்லாம் செலவழித்தான்.
பிரியமானவர்களே! நம்முடைய அன்பு கிரயம் செலுத்துகிறதாய் இருக்கிறதா? என சிந்திப்போம். கிரயம் செலுத்தாமல் அன்புகூர முடியாது. கிரயம் செலுத்தாத அன்பு பயனுள்ளதாக இருக்காது. கிரயம் செலுத்தும் அன்பு நமக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக அமையும். அல்லேலூயா!
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
ஆந்திரா மற்றும் ஒடிஸா மாநிலங்களில் கட்டப்பட்டு வருகிற ஆலயங்கள் விரைவில் கட்டி முடிக்கப்பட; அதற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250