By Village Missionary Movement
Monday, 25-Jan-2021இன்றைய தியானம்(Tamil) 25-01-2021
தூக்கு நூல்
“...இதோ இஸ்ரவேலென்னும் என் ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்;…” - ஆமோஸ் 7:8
கட்டிட வேலை செய்யும் ஒரு தொழிலாளி, ஒரு சுவரை கட்டும்போது, அந்த சுவர் நேராகவும் சீராகவும் இருக்கிறதா என்பதை சரிபார்க்க பயன்படுத்தும் சிறிய கருவி தூக்கு நூல், 3 அல்லது 4 செங்கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்து கட்டியதும், இந்த தூக்கு நூலை பிடித்து அத்தனை வரிசைகளும் சீராக இருக்கிறதா? என்பதை சரி பார்ப்பார். சீராக இல்லையென்றால், கோணலான இடங்களில் செங்கற்களை தட்டி நேராக்கி, சுவர் சீராக இருப்பதை உறுதி செய்வார்.
நமக்கு நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கை வேதத்தில் ஒரு கட்டிடத்திற்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது (எபே. 2:19-22). இந்த கட்டிடமும் நேர்த்தியாய் கட்டப்பட ஒரு தூக்கு நூல் தேவை. ஆண்டவர் நமக்கு கொடுத்த வேதபுத்தகமே அந்த தூக்கு நூல். மனுஷனாக வெறும் கண்ணால் சுவரை காணும்போது அது நமக்கு சரியாகத் தான் தோன்றும், ஆனால் தூக்கு நூலே அதன் குறைவை காட்டும். அதுபோலவே நாம் செய்யும் காரியங்கள், திட்டமிடும் செயல்கள் நமக்கு சரியாகத் தோன்றினாலும், தேவனுடைய வார்த்தையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போதே நம் குறைவுகளை கண்டு கொள்ள முடியும். ஆகவே இஸ்ரவேல் ஜனங்களின் வாழ்க்கையை கர்த்தர் இந்த தூக்கு நூலைக் கொண்டு சோதித்து பார்க்கிறார். ஏனெனில் இந்த தூக்கு நூல் பொய் சொல்வதில்லை. இஸ்ரவேல் ஜனங்கள், தவறிய சிறுசிறு காரியங்களை காட்டிக் கொடுத்தது. அவர்களின் தவறுகள் கர்த்தருடைய பார்வைக்கு விரோதமாக பொல்லாப்பு நிறைந்ததாகவும், அவரது கட்டளைக்கும் நியாயப்பிரமாணத்திற்கும் முரண்பாடாகவும் இருந்தது. அதனால், கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை சிறைபிடித்து கொண்டு போக ஒப்புக் கொடுக்கிறதை நாம் இன்றைய வேதபகுதியில் வாசிக்கிறோம்.
பிரியமானவர்களே! தூக்கு நூலாகிய வேதத்தை தினமும் வாசிப்போம். சரி செய்ய வேண்டிய காரியங்களை சரி செய்தால் தான் உங்கள் வாழ்க்கை என்ற கட்டிடம் சீராகக் கர்த்தருக்கு பிரியமானதாக இருக்கும். சரி செய்யவில்லையென்றால் உங்கள் வாழ்க்கை கர்த்தரின் பார்வையில் கோணலானதாக இருக்கும். தேவனுடைய தண்டனைக்கு வழிவகுக்கும் தூக்கு நூலால் சோதித்து பார்க்கும் போது உன் வாழ்க்கையின் நிலை என்ன? சிந்தித்துப் பார்ப்போம்! சீர்ப்படுத்துவோம்.
- Mrs. எஸ்தர் காந்திராஜன்
ஜெபக்குறிப்பு:
நமது ஊழியத்தை ஜெபத்தினாலும், காணிக்கையினாலும் தாங்கும் பங்காளர் குடும்பங்களை தேவன் அபரிவிதமாய் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250