By Village Missionary Movement
Saturday, 16-Apr-2022இன்றைய தியானம்(Tamil) 16-04-2022
கர்த்தருக்குப் பிரியமானது
“கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப் பாருங்கள்’’ - எபேசியர் 5:10
ஒர் இரவில் ஒரு போதகர் ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தார். ஒரு திருடன் கத்தியைக் காட்டி மிரட்டி, அவரிடமுள்ள பணத்தைத் தரும்படி கூறினான். போதகர் பணத்தை எடுக்கும்படி அவருடைய பணப்பையைத் திறந்து கொண்டிருந்த போது, அவர் ஒரு போதகர் என்பதை அறிந்து கொண்ட திருடன், “நீர் ஒரு போதகராக இருப்பதால் உம்மை விட்டுவிடுகிறேன். பணத்தை எடுக்க வேண்டாம்” என்று கூறினான். அவனுடைய இத்தகைய பக்தியை சற்றும் எதிர்பாராத போதகர் அவனுக்கு ஒர் கற்கண்டு பாளத்தைக் கொடுத்தார். அந்த வழிப்பறிக்காரனோ, ‘’உமக்கு நன்றி, நான் லெந்து நாட்களில் கற்கண்டு சாப்பிடுவதில்லை’’ என்று கூறினானாம்.
பாருங்கள்! இனிப்புகளை லெந்து காலத்தில் உண்ணாதிருப்பது கர்த்தரைப் பிரியப்படுத்தும் என்று எண்ணினான். ஆனால் அவன் வாழ்க்கையோ கர்த்தரைத் துக்கப்படுத்துவதாகவே இருந்தது. ஒரு கிறிஸ்தவன் அனுசரிக்கும் சடங்காச்சாரங்கள் அவனுக்கு கிறிஸ்துவின் மேலுள்ள அன்பைக் காட்டாது. அவனுடைய உள்ளான பரிசுத்தம், வார்த்தைகள், செயல்கள் மூலம்தான் அவன் கிறிஸ்துவின் மேலுள்ள அன்பைக் காட்ட முடியும்.உள்ளம் பரிசுத்தமாக இருந்தால் வார்த்தைகள், செயல்கள் எல்லாம் கர்த்தரைப் பிரியபடுத்தும். எனவேதான் இயேசு மத்தேயு 23:26 ல், “போஜன பான பாத்திரங்களில் வெளிப்புறம் சுத்தமாகும்படி, அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு” என்று கூறுகிறார். எனவே இந்த ஆண்டு லெந்து நாட்களை ஆசரித்ததோடு திருப்தியடைந்து விடாமல், நம்மில் சுத்த இருதயத்தை கர்த்தர் சிருஷ்டிக்கும்படிக்கும், நிலைவரமான ஆவியை நம் உள்ளத்திலே புதுபிக்கும்படிக்கும் கர்த்தரிடத்தில் வேண்டுவோம்.
இந்த லெந்து கால 40 நாட்களும் கர்த்தரைப் பிரியப்படுத்துவது எது? இன்னும் அவருக்கு பிரியமாய் வாழ்வது எப்படி? என்று நாம் கற்றுக் கொண்டவற்றை நம் வாழ்நாள் முழுவதும் கடைபிடிக்கிறவர்களாக வாழ பிரயாசப்படுவதே கர்த்தருக்குப் பிரியம். ஆம், இனிவரும் ஒவ்வொரு நாட்களிலும் கர்த்தரைப் பிரியப்படுத்தி வாழத் தீர்மானிப்போமாக!
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:
VBS ஊழியங்களுக்கு எடுக்கப்படும் முயற்சிகளை தேவன் ஆசீர்வதிக்க, கிராமங்களில் ஊழியத்திற்கு திறந்த வாசலை தேவன் கட்டளையிட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250