By Village Missionary Movement
Monday, 28-Mar-2022இன்றைய தியானம்(Tamil) 28-03-2022
கிறிஸ்துவின் சிநேகிதராக விருப்பமா ?
“…நான் உங்களைச் சிநேகிதர் என்றேன்…” - யோவான் 15:15
ஒரு காட்டுப் பகுதியிலிருந்து ஒரு மனிதருடைய அபயக்குரல் கேட்டது. “என்னைக் காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள் இந்தக் குழியிலிருந்து என்னைத் தூக்கிவிட யாருமே இல்லையா? நான் இதிலேதான் சாகவேண்டுமா?’’ என்று கதறும் சத்தம் நாலுதிசைகளிலும் எதிரொலித்தது. அந்த வழியே வந்த ஒரு நல்ல மனிதர் இவரின் அழுகையின் சத்தத்தைக் கேட்டு தன் உயிரையும் பொருட்படுத்தாமல் அந்த ஆழக்குழியிலிருந்து அவரைத் தூக்கிவிடுகிறார். அன்றிலிருந்து இருவரும் சிநேகிதரானார்கள்.
இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொள்வார்கள். ஆனாலும் குழியிலிருந்து தூக்கிவிடப்பட்ட அந்த மனிதரால், உதவி செய்தவரோடு தொடர்ந்து சிநேகிதம் பாராட்ட முடியவில்லை. ஏனென்றால் அவருடைய சிந்தனைகள், செயல்பாடுகள், பேச்சுகள் அந்த நல்ல மனிதரின் செயல்பாடுகளோடு ஒத்துப்போகவில்லை. இதனால் அந்த மனிதர் ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டார். பரிசுத்த வேதாகமத்தில், ராஜாவாகிய சவுல், தொடர்ந்து சாமுவேல் தீர்க்கதரிசியோடு நல்ல உறவைத் தொடர முடியவில்லை. காரணம், சாமுவேலின் இருதயம் தேவசத்தத்திற்கு கீழ்ப்படிவதாயும் சவுலின் செயல் மனிதர்களை பிரியப்படுத்துவதாயும் இருந்தது. ஆகவே சாமுவேல் தீர்க்கதரிசி சவுலைவிட்டு பிரிந்தார்.
ஆம், பிரியமானவர்களே! நல்ல நண்பர்களாக இருக்க வேண்டுமென்றால், இருவரும் ஒத்த இருதயமுடையவர்களாயிருக்க வேண்டும். இல்லாவிடில் அந்த ஐக்கியம் நீடிப்பது சந்தேகமே. நாமும் கூட பாவத்தில், அக்கிரமத்தில், வியாதியில், பிசாசின்பிடியில் அகப்பட்டுக் கிடந்தோம். விடுதலையின்றி, சமாதானமின்றி, தவித்துக்கொண்டிருந்தோம். தன்னுயிரையும் பொருட்படுத்தாத இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தினால், நாம் இதிலிருந்து காப்பாற்றப்பட்டோம். அதனால் அவரோடு சிநேகிதர்களானோம். அந்த சிநேகிதம் நல்ல முறையில் தொடர வேண்டுமென்று விரும்பினால், அவருடைய இருதயத்தோடு நம்முடைய இருதயம் ஒத்துப்போக வேண்டும். அவரோடு சிநேகிதத்தில் தொடர்ந்து நிலைத்திருக்க விரும்பினால் அவருக்குப் பிரியமில்லாத சிந்தனைகள், செயல்களை நம்மை விட்டு அகற்றப்பட வேண்டும். இயேசு கிறிஸ்துவின் சிநேகத்தில் எல்லா நாளும் திளைத்திருப்போம். ஆமென்!
- A சிமியோன்
ஜெபக்குறிப்பு:
பொதுத் தேர்வு எழுத ஆயத்தப்படும் மாணவக் கண்மணிகளை தேவன் விசேஷித்த ஞானத்தினால் நிரப்ப ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250