By Village Missionary Movement
Friday, 25-Mar-2022இன்றைய தியானம்(Tamil) 25-03-2022
எதிர்பாராத குறுக்கீடுகள்
“…நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன.” - பிலிப்பியர் 4:11
நம்முடைய அன்றாட வாழ்வில் உண்டாகிற தடைகள் நம்மை மிக எளிதாக எரிச்சலடையச்செய்து விடுகின்றன. எதிர்பாராத நேரம் நமக்கு கொடுக்கப்படும் புதிய வேலையினால் நமது சொந்த வேலைகள் தடைபட்டுவிடும். ஒரு வேளை நாம் முக்கியமான குறிப்புகளை சேகரித்து தடையின்றி எழுதிக்கொண்டிருக்கும் போதோ, அவசரமாய் சமையல் செய்து கொண்டிருக்கும்போதோ, யாராவது வீட்டுக்கதவை தட்டினாலோ, ஃபோன் பெல் அடித்தாலோ நாம் எரிச்சலடைகிறோம். இப்படிப்பட்ட குறுக்கீடுகளை நாம் விரும்புவதேயில்லை.
ஆனால் இப்படிப்பட்ட தடைகளை சந்திக்கும்போது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மனமடிவு கொள்ளவில்லை . அன்றைய நாளில் பிதா அவருக்கென்று நிர்ணயித்த திட்டமாகவே எண்ணி அவற்றை ஏற்றுக்கொண்டார். இன்றைய வேதப் பகுதியிலே பார்ப்போமென்றால், இயேசு தமது சீஷர்களிடம், வனாந்தரமான ஓரிடத்திற்குச் சென்று இளைப்பாறுவோம் வாருங்கள் என்றார். ஏனெனில் ஜனக்கூட்டம் அதிகமாயிருந்தபடியால் அவர்கள் சாப்பிடக் கூட நேரமில்லாதிருந்தது. ஆகவே அவர்கள் தனிமையாய் ஒரு படகில் ஏறி வனாந்தரமான ஒரு இடத்திற்கு சென்றார்கள். அவர்கள் செல்கிறதைக் கண்ட ஜனங்கள் கால்நடையாய் அவ்விடத்திற்கு ஓடி, இயேசுவுக்கு முன் அங்கே போய் சேர்ந்தார்கள். இயேசு இந்த எதிர்பாராத குறுக்கீடுகளை கண்டபோது எரிச்சலடையவில்லை; மாறாக அவர்கள் மேல் மனதுருகினார். தான் அந்த இடத்திற்கு இளைப்பாறும்படி வந்த எண்ணத்தையும் மறந்து, அவர்கள் மத்தியில் அமர்ந்து களைப்பையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். இந்த சூழ்நிலையை நாம் சந்திப்போமேயானால் நமது மனநிலை எப்படியிருக்கும் என சிந்தித்துப் பார்ப்போம். மனதுருகியிருப்போமா? மனம் கொந்தளித்திருப்போமா? .
பிரியமானவர்களே! எவரும் நம்மை தொந்தரவு செய்யக்கூடாது, எவருக்கும் நாம் உதவி செய்யக் கூடாது, யாரும் என் வேலையில் குறுக்கிடக்கூடாது இப்படி எவரும் நம்மை சார்ந்துகொள்வதற்கு இடமளிக்காமல் தனிமையில் வாழ்வோமென்றால் அதைக் காட்டிலும் பெரியதொரு சாபம் ஒன்றுமில்லை . இவ்வித எண்ணம் நம்மிடம் காணப்படுமேயானால் அதிலிருந்து நம்மை காத்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒவ்வொரு நாள் காலையிலும் அந்த நாளைக் கர்த்தரிடம் ஒப்புவிப்போம். அன்றைய உங்கள் வேலையில் யாராவது குறுக்கிட்டால், கர்த்தரே அவரை உங்களிடம் அனுப்பினார் என்று நினைப்போம். பொறுமையாய் அவர்களுடைய தேவையை அறிந்து உதவி செய்வோம். ஒருவேளை அது நமக்கு தொல்லையான குறுக்கீடாக இருந்தாலும், அதை தேவனே நமக்கு நியமித்ததால் அதுவும் இன்றியமையாத வேலையே ஆகும்.
- Bro.வில்லியம்
ஜெபக்குறிப்புகள்
ஆந்திரா, ஒடிஸா, சட்டீஸ்கர் மாநிலங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250