By Village Missionary Movement
Thursday, 10-Mar-2022இன்றைய தியானம்(Tamil) 10-03-2022
ஆரோக்கியமான நாவு
“ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; …” – நீதிமொழிகள் 15:4
ராமு சோமு இருவரும் நண்பர்கள். சோமு ராமுவிடம் என்ன இப்ப தினமும் வாக்கிங் போற, மெடிக்கல்ல அடிக்கடி பார்க்க முடிகிறது என்றான். உடனே ராமு நான் ஒரு சர்க்கரை நோயாளி, அதான் தினமும் மாத்திரை போட வேண்டியுள்ளது என்றான். உடனே சோமு உன்னை நீயே நோயாளியாக அடையாளப்படுத்திக் கொள்ளாதே. அது இன்னும் உன்னைப் பெலவீனப்படுத்தும், உன் உடலில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது உண்மைதான். ஆனாலும் இந்த நிலை மாறும். இதற்காய் சோர்ந்து போக வேண்டியதில்லை. விசுவாசத்தோடு அறிக்கை செய்து நம்பிக்கையோடு வாழலாம் என்றார்.
ஆம், இதைப் போலத்தான் நாமும் பல நேரங்களில் இந்நிலை மாறாது, நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். நான் இப்படியே இருக்க வேண்டியதுதான் என்பது போன்ற வார்த்தைகளை சொல்லி, அந்த சூழலில் தேவையான மன தைரியத்தை இழக்கிறோம். வேதம் கூறுகிறது, “மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் உள்ளது. ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்” எனவும் கூறுகிறது. எனவே வாயின் வார்த்தையில் கவனமுள்ளவர்களாக இருக்க வேண்டும். கானான் தேசத்தை சுற்றிப்பார்க்க சென்ற பன்னிரண்டு பேர்களில் காலேப், யோசுவா இருவர் மட்டும், “கானான் தேசத்தை நாம் சுதந்தரிப்போம்; அது வளமையான தேசம்” என்றனர். மற்ற பத்து நபர்களும் குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள் பலமான கோட்டையுள்ள பட்டணம், பெரிய பட்டணம் இதனை சுதந்தரிக்க முடியாது என்றனர். இதனைக் கேட்டதும் ஜனங்கள் எல்லோரும் முறுமுறுத்து அழுது புலம்புகின்றனர். அப்போதும் காலேப், யோசுவா இருவரும் அவர்களை அமைதிப்படுத்தி நாம் அந்தப் பட்டணத்தை எளிதாய் ஜெயிக்கலாம் என்றனர். ஆனால் ஜனங்கள் தேவன் செய்த அற்புதங்களை மறந்து, மீண்டும் புலம்பினார்கள். அதேபோல புலம்பியவர்கள் இந்த வளமையான கானான் தேசத்தை சுதந்தரிக்கவில்லை. நம்மால் சுதந்தரிக்க முடியும், எளிதில் ஜெயிக்கலாம் என்ற யோசுவாவும், காலேப்பும் கானானை சுதந்தரித்தனர்.
இதனை வாசிக்கும் அன்பரே, உங்களுக்குள்ள எல்லா சூழ்நிலைகளையும் நேர்மறையான கண்ணோட்டத்துடன் காணுங்கள். நல்ல ஆரோக்கியமான வார்த்தைகளை பேசுவோம் ஜெயமெடுப்போம். யோசுவா காலேப் கானானை சுதந்தரித்தது போல நாமும் நித்திய கானானை சுதந்தரிக்கும் வரை நன்மையான ஆரோக்கியமான காரியங்களைப் பேசுவோம், நலமுடன் வாழ்வோம்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
வேதாகமக் கல்லூரி மாணவர்கள் ஒவ்வொருவரும் கடைசிக்கால எழுப்புதலின் ஆயுதங்களாக பயன்பட ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250