By Village Missionary Movement
Saturday, 05-Mar-2022இன்றைய தியானம்(Tamil) 05-03-2022
தேவபயத்தின் மேன்மை
“கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.” – சங்கீதம் 128:1
இவ்வுலகில் பெரும்பான்மையோர் மனுஷருக்குப் பயந்து வாழ்கிறவர்களே! இவர்கள் தங்களுக்கு மேலுள்ள அதிகாரிகளைப் பார்க்கும்போது நல்லவர்களைப்போலவும், கீழ்ப்படிகிறவர்களைப் போலவும் காணப்படுவர். ஆனால் தன்னை யாரும் பார்க்கவில்லை என்கிறபோது முற்றிலும் மாறுபட்ட வாழ்வே வாழ்வார்கள். ஆனால் கர்த்தருக்குப் பயந்து வாழ்கிறவர்கள் இவ்வுலகில் மிகச்சிலரே! இவர்கள் யாரும் பார்த்தாலும், பார்க்காவிட்டாலும் கர்த்தர் தன்னைப் பார்க்கிறார் என்ற உணர்வினால், அவருக்குப் பயந்து அவருடைய வழியில் நடப்பவர்கள். ஆம், இவர்களே பாக்கியவான்கள் என்று வேதம் சொல்லுகிறது.
“நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்” (ஆதி. 42:18) என்று தன்னைக் குறித்து ஒரு மனிதன் திட்டமான சாட்சி கூறுகிறார். அவர் யார் என்று யூகித்திருப்பீர்கள். ஆம்! நம்ம யோசேப்புதான்! அவர் சொல்லும் இவ்வார்த்தைகள்படி வாழ்ந்தும் காட்டினார். வேற்று தேசம், நல்லவனாய் வாழ்ந்தால் பாராட்டவோ, தவறு செய்தால் தண்டிக்கவோ பெற்றோர் உற்றார் உறவினர் யாருமில்லாத இடம். அன்பிற்காக ஏங்கும் வயது, அழைப்பு பெரிய இடத்திலிருந்து வேறு வருகிறது. இருப்பினும் “நோ” சொல்லிவிட்டு ஓட்டம் பிடித்தார். விசேஷ அபிஷேகத்தைப் பெற்றிருந்த சிம்சோனும், தாவீதும்கூட விழுந்த இவ்விபச்சார காரியத்திலே, சாதாரண வாலிபனான யோசேப்பு ஜெயித்து விட்டார். தவறான காரியத்திற்கு அழைத்தவர் ராஜா என்றவுடன், உரியாவின் மனைவி கூட மெளனமாகி விட்டாள். ஆனால் யோசேப்போ எஜமாட்டியானால் என்ன? ஆதாரத்திற்கு சட்டை சிக்கி நான் மனிதர் முன்பு மாட்டிக்கொண்டாலும் என்ன? தவறு செய்ய அறையில் இருப்பதைவிட, தவறே செய்யாமல் சிறையில் இருப்பதுமேல்! என்னைப் பார்க்கும் தேவனுக்கு முன்பாக என் இருதயமும் சரீரமும் தூய்மையாக இருந்தால் போதும் என்ற முடிவெடுத்தார். கர்த்தருக்குப் பயந்ததினால் பாவத்திற்கு விலகி, இன்றும் பாக்கியவானாய் நம் மனக்கண் முன் வந்து நிற்கும் யோசேப்புக்கு ஒரு சல்யூட் அடிப்போமா?
பிரியமானவர்களே! மனிதருக்கு அல்ல, கர்த்தருக்கே பயந்து வாழ்கிற மனுஷன் பூமியில் பாக்கியவானாய் இருப்பான். 128ம் சங்கீதத்தில் சொல்லப்பட்டபடி அவன் கையின் பிரயாசம் ஆசீர்வதிக்கப்படும். அவனது வாழ்க்கைத் துணை திராட்சைக் கொடியைப் போலவும், பிள்ளைகள் ஒலிவமரக் கன்றுகளைப் போலவும் செழிப்பாய், கனிதருகிறவர்களாக இருப்பார்கள். உச்சிதமான, உன்னதமான ஆசீர்வாதம் அவர்களுக்கு அருளப்படும். இப்படிப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை உங்களுக்கு வேண்டுமா? எந்த சூழ்நிலையிலும் கர்த்தருக்குப் பயந்து வாழுங்கள், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
- Mrs. எபன் சந்தோஷ்
ஜெபக்குறிப்பு:
சகோ. டேவிட் கணேசன் அவர்கள் பிரயாணங்களில் தேவன் பாதுகாப்பைக் கட்டளையிட ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250