By Village Missionary Movement
Wednesday, 02-Mar-2022இன்றைய தியானம்(Tamil) 03-03-2022
நீங்கள் பாக்கியவான்கள்
“மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது;… காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று;…” – சங்கீதம் 103:15, 16
நீங்கள் பாக்கியவான்கள்! ஏன் தெரியுமா? இன்று உயிரோடிருப்பதினால்....
எதிர்பாராத வேளையில் மாரடைப்பால் மரணமடைந்தார் ஒருவர். உயிர் பிரிந்த மறுவினாடியே அந்த ஆவிக்கு தான் செல்ல வேண்டிய இடம் நரகம் என்பது தெரிந்துவிட்டது. தான் பிரிந்து வந்த அந்த சரீரத்தைப் பார்த்து, “ஐயோ நான் இத்தனை ஆண்டுகளாய் இந்த உடம்பிலா இருந்தேன். தேவனே மீண்டும் ஒரு தடவை மாத்திரம் என்னை இந்த சரீரத்திற்குள் அனுப்பும். என் பாவங்களை, அக்கிரமங்களையெல்லாம் உம்மிடம் அறிக்கை செய்து விடுகிறேன். நான் யார் யாருக்கெல்லாம் விரோதமாய் குற்றம் செய்தேனோ அவர்களின் கை, காலில் விழுந்தாவது மன்னிப்பு கேட்டு விடுகிறேன். தயவாய் என்னை மீண்டும் இந்த சரீரத்திற்குள் அனுப்பும்” என்று கதறிக் கதறி கெஞ்சியதாம். இயேசு கிறிஸ்து கண்ணீரோடு, “இனி வாய்ப்பே இல்லை, எல்லாம் முடிந்துவிட்டது” என்றார்.
ஆம், இதை வாசித்துக் கொண்டிருக்கிற நீங்களும் நானும் பாக்கியவான்கள். நம் உயிர் நமக்குள் இருக்கும்வரை நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நம் பாவங்களுக்காக மனங்கசந்து அழுது இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தால் பரிசுத்தமாக்கப்படலாம். எந்த மனிதரிடத்திலும் போய் மன்னிப்பு கேட்கலாம். செய்த தீமைக்குப் பதிலாய் நன்மை செய்யலாம். மனக்கசப்போடு இருக்கும் சகோதரனிடம் நல்மனம் பொருந்தலாம். ஏமாற்றிய பணத்தையோ, நிலத்தையோ திருப்பி ஒப்படைக்கலாம். இப்படி தேவனுக்கும், மனிதனுக்கும் விரோதமாய் செய்த எத்தனை, எத்தனையோ காரியங்களை நிச்சயமாய் சரிசெய்யலாம். ஆனால் காலம் கடந்துவிட்டதேயானால்... ஆம், நாம் உயிரோடிருக்கும் காலங்கள் கிருபையின் நாட்கள் என்பதை ஒரு நிமிடம்கூட மறவாதிருப்போம்.
ஒரு மனிதன் தெரிந்து வைத்துக் கொள்ள முடியாத இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று தனது மரண நாள்! மற்றொன்று இயேசுவின் வருகையின் நாள்! ஆம், இவற்றை நாம் அறியாதிருப்பதினால் எப்பொழுதும் இவ்விரண்டு நாளையும் சந்திக்க ஆயத்தமுள்ளவர்களாய் இருக்க வேண்டும். நம் உயிர் பிரிந்து விட்டாலோ அல்லது அவரது வருகை வந்துவிட்டாலோ எல்லாம் முடிந்துவிடும். கெஞ்சினாலும் கதறினாலும் ஒன்றும் நடக்காது. தேவன் finished என்று சொல்லி விடுவார். ஆகவே தேவதயவு நாம் குணப்படும்படி ஏவுகிறதென்பதை அறிந்து, இன்றே மனந்திரும்புவோம்.
- Mrs. ஜெபா டேவிட்கணேசன்
ஜெபக்குறிப்பு:
“60 மிஷனெரி வீடுகள்” கட்டிக்கொடுக்கும் 60 சூனேமியாள்கள் எழும்ப ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250