By Village Missionary Movement
Wednesday, 02-Mar-2022இன்றைய தியானம்(Tamil) 02-03-2022
கிறிஸ்து எனக்கு ஜீவன்
“கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.” – பிலிப்பியர் 1:21
ஈரானில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட சகோதரர் “மெஹ்தி திபாஜ்” தேசத்துரோக குற்றம் இழைத்ததாக சிறையில் அடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். நீதிமன்றத்தில் அவர் அளித்த வாக்குமூலமே மரணவாக்குமூலம் தான். “ஒருவர் தான் பின்பற்றும் மதத்தை தானே தெரிந்துகொள்கிறார். கிறிஸ்தவன் என்றால் கிறிஸ்துவை உடையவன் என்று பொருள் ஆகும். கிறிஸ்துவின் மேல் உள்ள விசுவாசத்தை விடுவதைக் காட்டிலும் சுவாசத்தை விடுவது சிறந்தது. ஏனென்றால் கிறிஸ்துவை பின்பற்றுபவனுக்கு சாவு ஆதாயமே! கிறிஸ்துவும் தமது மரணத்தினால் அநேக மக்களை ஆதாயப்படுத்தினார். மரணத்திலும் குருவை தொடர்பவனே சிறந்த சீடன் ஆவான்.
கர்த்தராகிய இயேசு என்னை 45 வருடங்களாக கிருபையாய் வழிநடத்தி வருகிறார். இவ்வுலகில் கோடி ஜனம் கொடும் வெறியோடு என்னை எதிர்த்தாலும் நானே வெற்றியாளன். ஏனென்றால் மரணத்தை ஜெயித்தவர் எனது பட்சமாய் இருக்கிறார். எனது வாழ்வு அவரது கரத்தில் இருக்கிறது. அவரிடம் சரணடைந்து விட்ட எனக்கு, “வாழ்வு என்பது இயேசுவுக்காக வாழும் வாய்ப்பு, சாவு என்பது இயேசுவோடு வாழும் வாய்ப்பு.” ஆகவே கிறிஸ்துவின் மீதுள்ள என் நம்பிக்கையை ஒருபோதும் மறுதலியேன் என்று தீர்க்கமாய் முழங்கினார். இதினிமித்தம் சில நாட்களில் மரணத்தையும் ஜெயமாய் சந்தித்தார்.
அப்.பவுல், பிலிப்பியர் 1:21ல் இவ்விதமாய் எழுதுகிறார், “கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.” கொரிந்தியர் நிருபத்தில் குறிப்பிடும்பொழுது “அனுதினமும் சாகிறேன்” என்று கூறுகிறார். இந்த உலகத்தில் எப்படி சிறப்பாக வாழலாம் என்பதைவிட, கிறிஸ்துவுக்காக கோதுமை மணியாக மரிப்பது தேவனுக்கு முன்பாக மகிமையாய் இருக்கும் என்று பவுல் விசுவாசித்து இருந்தார். இந்த செய்தியை வாசிக்கின்ற அநேகர் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் மிகவும் மனம் தளர்ந்துபோய் விடுகின்றோம். சில நேரங்களில் கிறிஸ்துவை விட்டு பின்மாற்றமாயும் போகிறோம். அற்ப விஷயங்களுக்கெல்லாம் நம் ஆண்டவரை துணிகரமாக மறுதலிக்கிறோம். இன்று தேவ ஆவியானவர் நமக்கு வைராக்கிய வாஞ்சையைத் தர விரும்புகிறார். வாழ்வு என்பது ஒருமுறைதான். அதை இயேசுவுக்காக வாழலாம். நம் ஜீவனை நஷ்டமென்று எண்ணி தேவனுக்காக வாழ்ந்து ஜீவகிரீடத்தை சுதந்தரித்துக் கொள்வோம். ஆமென்!
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
கெத்செமனே வளாகத்தில் நடைபெறும் கட்டிடப் பணிகளுக்காக ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250