By Village Missionary Movement
Tuesday, 15-Feb-2022இன்றைய தியானம்(Tamil) 15-02-2022 (God’s creation’s special)
ஏவுகணை
“...பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு,… புதிய மனுஷனைத் தரித்துக் கொண்டிருக்கிறீர்களே.” – கொலோசெயர் 3: 9-10
நண்பர்களே! நான் யார் என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம். நான் ஆற்றங்கரையில் இருப்பேன். வழுவழுப்பான என் மேனியை பார்த்து என்னை கையில் எடுக்காதவர்களே இருக்கமாட்டார்கள். உங்கள் வீட்டு மீன் தொட்டியிலும் இருப்பேன். முக்கியமாக பைபிளில் இருக்கிறேன். Wow correct கூழாங்கல்தான் நான்.
என் கதையை சொல்லட்டுமா? நான் கூழாங்கல்லாகவே பிறந்ததில்லை. பெரிய பாறையாக ஒரு மலையில் இருந்தேன். ஒருநாள் வந்த பயங்கர இடி மழையால் உடைந்து, உருண்டு மலைகளிலும் மரங்களிலும் மோதி படாதபாடுபட்டு குற்றுயிராய் ஆற்றங்கரையில் வந்து கிடந்தேன். ஒழுங்கின்மையும் அலங்கோலமாகவும் இருந்த நான் பலருடைய காலைக் குத்திக் கிழித்து இருக்கிறேன். என் அருகில் வந்த அனேகரை காயப்படுத்தி இருக்கிறேன். ஒருநாள் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து என்னை அடித்துச் சென்றது. நான் “ஐயோ” என்று அலறினேன். தண்ணீரில் மூழ்கினேன். காடு மேடு பள்ளம் என பல இடங்களுக்கும் அடித்துச் செல்லப்பட்டேன். முடிவாக ஆற்றுத் தண்ணீர் என்னை ஒரு ஓரத்திற்கு தள்ளியது. “அப்பாடா” என்று பெருமூச்சு விட்டு என்னை பார்த்தேன். ஆச்சரியம்! என்னுடைய கூர்மையான பகுதிகள் எல்லாம் மழுங்கடிக்கப்பட்டு பளபளவென்று தோற்றமளித்தேன்.
அப்போது தூரத்தில் ஒரு அழகிய வாலிபன் வருவதைக் கண்டேன். அவன் என்னை மகிழ்ச்சியுடன் எடுத்து தன்னுடைய பையில் போட்டுக் கொண்டான். நான் எங்கு போகிறேன் என்று யூகிக்க முடியவில்லை. கொஞ்ச நேரத்தில் பயங்கர சத்தம் கேட்டது. இந்த வாலிபன் வேகமாக என்னை எடுத்து கவணில் வைத்து சுழற்றி அடித்தான். நான் எதிரியின் நெற்றியைப் பதம் பார்த்தேன். பெரிய ஆரவாரம்! பின்தான் இவன் தாவீது என்றும், கீழே விழுந்த எதிரி கோலியாத் என்றும் தெரிந்து கொண்டேன். நான் சிறிய கல்தான். ஆனால் கோலியாத்திற்கோ ஏவுகணையாய் தெரிந்தேன். சிறிய கல்லாகிய என்னை பயன்படுத்தி தேவன் இஸ்ரவேலருக்கு இரட்சிப்பை தந்ததை எண்ணி தேவனை துதித்தேன்.
என் கதையை கேட்டுக்கொண்டிருக்கும் தோழா! உன்னை தேவன் பயன்படுத்த வேண்டும் என்று விரும்புகிறாயா? உன்னுடைய sharp corners எல்லாம் அதாவது பெருமை, கோபம், எரிச்சல், கசப்பு, வைராக்கியம் போன்ற கூர்மையான முனைகள் உடைய உன்னை தேவகரத்தில் ஒப்புக்கொடு. அவர் உன்னை பல சூழ்நிலையின் வழியே நடத்தி, உன்னை உடைத்து, உருமாற்றி அவருக்கு பயன்படும் நபராய் மாற்றிவிடுவார். என்னையே பயன்படுத்துவார் என்றால், உன்னை பயன்படுத்துவது எவ்வளவு நிச்சயம்.
- Mrs. எபன் சந்தோஷ்
ஜெபக்குறிப்பு:
ஒடிஸா மாநிலம் வண்ணா கிராமத்தில் கட்டப்படும் ஆலயக் கட்டுமானப் பணிகளுக்காக, தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250