By Village Missionary Movement
Tuesday, 19-Jan-2021இன்றைய தியானம்(Tamil) 19-01-2021
தெரிந்துகொள்ளுதல்
“...நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம் பண்ணுவாயாக என்றார்.” – 1 சாமுவேல் 16:3
தெரிந்துகொள்ளுதல் என்பது மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. அதிலும் குறிப்பாக தேவன் தெரிந்துகொள்ளும் விதம் வேறு, மனிதனுடையது வேறு! போலீஸ் மற்றும் இராணுவ பணிக்கு ஆட்கள் சேர்க்கும்போது அவர்களின் சரீர வளர்ச்சி மற்றும் எழுத்து தேர்வின் அடிப்படையிலும் தெரிந்து கொள்ளப்படுகின்றனர். இது உலகத்தின் பார்வை! ஆனால், நம்முடைய ஆண்டவரின் தெரிந்து கொள்ளுதலோ மிகவும் அற்புதமானது. மனித மூளைக்கு அப்பாற்பட்டது. மனித எண்ணங்களுக்கும் மேலானது.
கர்த்தர் சாமுவேலிடம் ஈசாயின் வீட்டிற்குப் போ. அவன் குமாரரில் ஒருவரை இஸ்ரவேலின் ராஜாவாகத் தெரிந்து கொள்ள போகிறேன் என்றார். சாமுவேலும் கர்த்தர் சொன்னபடியே பெத்லெகேமுக்குப் போனான். அப்பொழுது சாமுவேல் யுத்தவீரனும் வாட்டசாட்டமுமான எலியாப் என்னும் ஈசாயின் மூத்த மகனை அபிஷேகம் செய்யப் போகிறார். ஆனால், கர்த்தர் சாமுவேலிடம், “இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீர வளர்ச்சியையும் பார்க்க வேண்டாம், நான் இவனைப் புறக்கணித்தேன். மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்றார். இப்படியாக ஈசாய் தன் குமாரர் ஏழுபேரையும் சாமுவேல் முன்பாக கடந்துபோகப் பண்ணினார். ஆனால் இவர்களில் ஒருவனையும் கர்த்தர் தெரிந்து கொள்ளவில்லை. பின்பு சாமுவேல் உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று கேட்டான். அப்போது ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கும் தாவீது அழைத்துவரப்படுகிறான். கர்த்தர் சாமுவேலிடம் நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார். பாருங்கள், தேவனுடைய தெரிந்துகொள்ளுதல் எவ்வளவு வித்தியாசமானது! வீட்டாராலும், தன்னுடைய எல்லா சகோதரராலும் மறக்கப்பட்ட தாவீதையே கர்த்தர் ராஜாவாக தெரிந்து கொண்டார்.
அன்பான ஊழியர்களே! தாவீதைப் போலத்தான் உலகத்தினால் புறக்கணிக்கப்பட்ட நம்மை, தேவன் தெரிந்துகொண்டு அவருடைய புண்ணியங்களை அறிவிக்கும் உன்னத பணிக்காக நம்மை அபிஷேகித்துள்ளார். உலகமோ ஒருவனிடம் பொறுப்பை கொடுக்க வேண்டுமானால், அவனின் வெளித்தோற்றம், பேச்சு, அலங்கரிப்பு, நடை-உடை, பாவனை அனைத்தையும் பார்க்கும். ஆனால் கர்த்தரோ அவனுடைய இருதயத்தைப் பார்க்கிறார். அது அவருக்கு உகந்ததாய் இருக்கவேண்டும். தாவீதைப்போல நம் இருதயம் அவருக்கு பிரியமுள்ளதாய் மாறட்டும். அவர் நம்மேல் வைத்த கிருபையை உணர்ந்தவர்களாக சாட்சியாய் வாழ்ந்து, கனிகொடுத்து, உத்தமமாய் ஊழியத்தை நிறைவேற்றுவோம்.
-Mrs. சக்தி சங்கர்ராஜன்
ஜெபக்குறிப்பு:
7000 மிஷனெரிகளை உருவாக்கி ஒரு லட்சம் கிராமங்களை சந்திக்க எடுக்கும் முயற்சியில் தேவ கரம் உடனிருக்க ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250