By Village Missionary Movement
Sunday, 13-Feb-2022இன்றைய தியானம்(Tamil) 13-02-2022 (Kid’s special)
இரண்டு கிளிகள்
“கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்பட வேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.” – எபேசியர் 4:29
வேடனொருவன் மரப்பொந்திலிருந்து இரண்டு கிளிக்குஞ்சுகளை கண்டெடுத்தான். ஒன்றை ஆசிரமத்திலிருந்த சாதுவிற்கு கொடுத்துவிட்டு, மற்றொன்றை தன் வீட்டிலே வளர்த்தான். நீங்களும் கிளி வளர்த்திருக்கிறீர்களா? ம்...ம் அழகாக பேசும் இல்லையா? ஆமா “சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை” என்று பழமொழிகூட சொல்லுவாங்கதானே! என்ன குட்டீஸ் உங்களுக்கு கிளி என்றால் ரொம்பப் பிடிக்குமா? எனக்கும் ரொம்பப் பிடிக்கும் சரி கதை கேட்போமா?
ஒரு மனிதன் காட்டுவழியாக ஒத்தையடிப் பாதையில் நடந்து சென்றான். மிகவும் களைப்பாக இருந்ததால் வேடன் வீட்டு திண்ணையில் படுத்து கொஞ்ச நேரம் கண் அயர நினைத்தான். ஜன்னலிலிருந்து கெட்ட வார்த்தை வசை மாரிப் பொழியும் சத்தம் கேட்டு யாரென்று பார்க்க எழுந்து உட்கார்ந்தான். முட்டாள், அறிவு கெட்டவன், உதவாக்கரை என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தது அந்தக் கிளி. “ச்சே இது என்ன கிளிதானா!” என்று சலிப்போடு எழுந்து நடக்க ஆரம்பித்தான். கொஞ்ச தூரம் சென்றதும் சாது தங்கியிருந்த ஆசிரமம் இருந்தது. சரி, இங்கே போய் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்து சாதுவின் வீட்டு வாசற்படியில் அமர்ந்தான். “வாருங்கள் ஐயா! நலமா? உட்கார்ந்து சற்று இளைப்பாறுங்கள்” என்று அந்தக் கிளி பணிவாகவும், அன்போடும் இனிமையாகவும் பேசிக் கொண்டே இருந்தது. இந்த வார்த்தைகளைக் கேட்ட இந்த மனிதனின் இருதயம் மகிழ்ச்சியால் நிரம்பியது. உற்சாகத்தோடு தன் பயணத்தை தொடங்கினான்.
இரண்டு கிளிகளும் ஒரே இடத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான். ஆனால் வெவ்வேறு இடங்களில் வளர்ந்தன. வேடன் வீட்டில் வளர்ந்த கிளி அவர்கள் பேசும் கெட்ட வார்த்தைகளைக் கேட்டு அதையே பேசினது. சாது வீட்டில் வளர்ந்த கிளி அவர் பேசும் நல்ல வார்த்தைகளைக் கேட்டு நல்லதையே பேசியது. இதைப் போலத்தான் நாம் யாரோடு பழகுகிறோமோ, அவர்கள் குணம் நம்மிடம் ஒட்டிக்கொள்ளும். நல்ல நண்பர்களோடு நட்போடு ஐக்கியமாய் இருக்க வேண்டும். அதே வேளையில் கெட்ட நண்பர்களை வெறுக்காமல், அவர்களிடமுள்ள கெட்ட செயல்களை வெறுக்க கவனமாய் இருக்க வேண்டும்.
குட்டி செல்லங்களே! நல்ல வார்த்தைகளை பேசி, நல்ல நண்பர்களை சம்பாதித்துக் கொள்ளுங்கள். கெட்ட வார்த்தைகளை பேசி இயேசப்பாவை துக்கப்படுத்தாதபடி தீர்மானம் எடுக்க வேண்டும். என்ன குட்டீஸ் செய்வீங்கதானே.
- Mrs. ஜீவா விஜய்
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250