By Village Missionary Movement
Wednesday, 09-Feb-2022இன்றைய தியானம்(Tamil) 09-02-2022 (God’s creation’s special)
கொக்கரக்கோ
“தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள்...” - ரோமர் 8:9
வேதாகமத்தில் முதன்முதலில் சொல்லப்பட்ட பறவை என்ற பெருமை எங்க சேவல் இனத்திற்கே உரியது. கர்த்தர் நோவாவிடம் என் இனம் அழியாமல் பூமியில் காக்கப்படும்படி பேழையில் சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடியை சேர்த்துக்கொள்ளும்படியாகக் கூறினார். உலகமே உறங்கும்போது, “நீ விழித்தெழும் நேரம் வந்து விட்டது, சீக்கிரம் எழும்பு” என்று சத்தமிட்டு எழுப்புகிறவனும் நான்தான். நான் கூப்பிடும் முன்பாக சீஷனாகிய பேதுரு இயேசுவைத் தெரியாது என்று மூன்று முறை மறுதலித்த காரியமும் வேதத்தில் உண்டு. நாங்கள் இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டாலும் எங்களில் சிலரை சண்டைக்கென்றே வளர்த்து பயிற்சிகள் கொடுத்து போட்டிகளில் பயன்படுத்துவர்.
நகைச்சுவைக்காக ஒரு காரியத்தை சொல்லுகிறேன், கேளுங்கள். ஒருமுறை சண்டைச் சேவல் ஒன்று சண்டையிடும்போது ஏற்பட்ட அதிக காயத்தினால் தொடர்ந்து அதை சண்டைக்கு பயன்படுத்த முடியவில்லை. ஆகவே அதை வளர்த்தவர் அதனை தான் அடித்து சாப்பிட விரும்பாமல், அருகிலுள்ள வாலிபர்களிடம் கொடுக்க, அவர்கள் சண்டை சேவலை வைத்து நல்லதொரு விருந்தொன்றை ஆசையுடன் சமைத்து, உண்டு ஜாலியாய் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களுக்குள் ஏற்பட்ட பேச்சு வாக்குவாதமாகி, அடிதடியில் முடிந்தது. சமைத்து சாப்பிட்டது சண்டைக் கோழி என்பதால் உடனிருந்தவனை எதிரியாய் பார்த்து ஓட ஓட விரட்டி விட்டார்களோ? சண்டைச் சேவலின் சுபாவமே அதுதானே! “உன் நண்பன் யாரென்று சொல்; அப்பொழுது நீ யாரென்று சொல்லுகிறேன்” என்று சொல்வர். யாரோடு நீங்கள் நட்பும், ஐக்கியமும் அதிகம் வைத்திருக்கிறீர்களோ அவர்களுடைய குணமும், சுபாவமும் உங்களைக் கவர்ந்திழுத்து, நீங்கள் அறியாமலே உங்களை அவர்களைப் போல மாற்றும். தேவனோடு உங்களுடைய ஐக்கியம் இருந்தால் நீங்களும் அவரைப் போலவே இருப்பீங்க. உங்கள் சுபாவமும் அன்பு நிறைந்ததாக காணப்படும். மாம்சத்தின் கிரியைகளாகிய கோபத்துக்கும், எரிச்சலுக்கும், பகைக்கும், வைராக்கியத்துக்கும் அங்கே இடமேயிருக்காது.
நாங்கள் அதிகாலமே எழுந்து ஆண்டவரைத் துதித்து மற்றவர்களையும் துதிக்க எழுப்புவதுபோல, நீங்களும் அதிகாலமே எழும்பி குடும்பமாக தேவனை துதிப்பீர்கள் என்றால், அந்த நாள் முழுவதும் சந்தோஷமாய் இருக்குமல்லவா! அப்போது மாம்ச சுபாவம் அல்ல; தேவ சுபாவமே உங்களை ஆளுகை செய்யும்.
- Bro. ஹனீஷ் சாமுவேல்
ஜெபக்குறிப்பு:
ஆந்திரா ரேகா புண்ணியகிரி ஆலயக் கட்டுமானப்பணிகளில் தேவகரம் உடனிருந்து வழிநடத்த ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250