By Village Missionary Movement
Tuesday, 08-Feb-2022இன்றைய தியானம்(Tamil) 08-02-2022 (God’s creation’s special)
திரும்பத் திரும்ப
“உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய்.” – உபாகமம் 32:18
சீன் வனாந்தரத்திலே இஸ்ரவேலின் இலட்சோபலட்ச ஜனங்கள் தங்கள் பிள்ளைகளோடும், இனஜன பந்துக்களோடும், தங்கள் மிருக ஜீவன்களுடனும் பயணப்பட்ட சமயத்தில் ஒருநாள் தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாமல் போனது. பிள்ளைகள் தாகத்தால் கதற, முதியோர்கள் மயக்கமடைய, ஆடுமாடுகளும் துவள, செய்வதறியாமல் திகைத்த ஜனங்கள் தங்களை வழிநடத்தும் தலைவனாகிய மோசேயைக் கண்டு கோபம் தலைக்கேற வார்த்தைகளால் அவரை காயப்படுத்தினர். வழியொன்றும் புலப்படாமல் தேவ சமூகத்தில் விழுந்து கிடந்தார் தன்னலமற்ற தலைவனாகிய மோசே.
தேவ வார்த்தையைப் பெற்றுக்கொண்டு, தைரியமாய் முன்னேறிச் சென்று தன் கையிலுள்ள கோலால் கன்மலையாகிய என்னருகில் வந்து ஓங்கி இரண்டு தடவை அடித்தார். அடித்ததும் தண்ணீரைக் கொடுத்தேன்; அனைவரின் தாகத்தையும் தீர்த்தேன். ஆனால் எனக்குள்ளோ தாங்க முடியாத வேதனை. நான் எத்தனை நம்பிக்கையும், எதிர்பார்ப்பையும் மோசேயிடம் வைத்திருந்தேன். ஆனால் என்னிடம் பேசும்படி தேவன் சொன்னதைச் செய்யாமல் முன்செய்த செயலின்படியே என்னை அடித்துவிட்டாரே! சுற்றிலும் ஜனங்கள் சூழ்ந்திருக்க, அவர்களால் ஏற்பட்ட கோபக்கணலில் சிக்குண்ட மோசே சூழ்நிலையின் சூழ்ச்சியில் சிக்கி தேவ வார்த்தையை மீறினார். ஆனாலும் அத்தனை ஜனங்கள் முன்னிலையில் அவரை அவமானப்படுத்த விரும்பாமல் என்னை அடித்தாலும், தேவ வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போனாலும், வேதனையைச் சகித்துக் கொண்டு விரும்பினதை கொடுத்தேன். ஆனால் என் இதயத்தின் வேதனை யாருக்கு தெரியும்? முகமுகமாய் தேவனை தரிசித்தவர், தேவனுடைய மகிமையைக் கண்டவர், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவர், தேவனுடைய திட்டங்களையும், தரிசனங்களையும் சரியாகப் புரிந்து கொண்டு கீழ்ப்படிதலோடு அதை செயல்படுத்தினவர், ஒரு கோபத்தால் கானானை இழந்துவிட்டாரே என அங்கலாய்த்தேன்.
இன்று நீங்களும்கூட அநேக வேளைகளில் கன்மலையாகிய கிறிஸ்துவை அலட்சியப்படுத்தி, பேச்சில், செயலில் அவரை வேதனைப்படுத்தக்கூடிய காரியங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறீர்களோ? இல்லை அவர் உங்கள் மேல் வைத்த நம்பிக்கைக்கும் எதிர்பார்ப்புக்கும் பாத்திரமாக நடந்து கொள்ளுகிறீர்களா? இல்லாவிட்டால் அனுதினமும் கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து கொண்டிருக்கிறீர்களா? எத்தனை முறை அடிப்பீர்கள்? ஒரே ஒரு மீறுதலால் மோசே கானானுக்குள் பிரவேசிக்க முடியாமல் போயிற்று. பரம கானானை நோக்கி சென்று கொண்டிருக்கக்கூடிய நீங்கள் தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, தேவ திட்டத்தை நிறைவேற்றி தேவனுடைய ராஜ்ஜியத்திற்கு பங்குள்ளவர்களாக காணப்படுங்கள்.
- Sis. வசந்தி ராஜ்மோகன்
ஜெபக்குறிப்பு:
மீடியா ஊழியங்களில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.
Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250