By Village Missionary Movement
Friday, 04-Feb-2022இன்றைய தியானம்(Tamil) 04-02-2022 (God’s creation’s special)
பறவைகளின் வீடு
“அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது.” – மாற்கு 4:31
தாவர விதைகளைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சில விதைகளைப் பார்த்தும் இருப்பீர்கள். கடுகுவிதையை பார்க்காதவர்கள் இருக்கவே முடியாது. உங்கள் வீட்டு அஞ்சறைப் பெட்டி நானில்லாமல் இருக்காது. இன்றைய தியான செய்தியில் உங்களை சந்திக்கும்படி கடுகு விதையார் வந்திருக்கிறார். வாருங்கள், அவர் பேசுவதைக் கேட்போம். “கடுகு சிறுத்தாலும் காரம் சிறுக்காது” என்பார்கள். ஆம், அப்படித்தான் நான் உள்ளேன். என்னை வெளிப்படையாக பார்த்து குறைவாக மதிப்பிடாதீர்கள். என்னைக் குறித்து எனக்குள் மேன்மையான சிந்தனைகளும் சில உயர்வான கருத்துக்களும் உண்டு. அது என்னவென்று சொல்லுகின்றேன் தொடர்ந்து கேளுங்கள்.
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் என்னையும் உண்டாக்கினார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சுவிசேஷத்தில் என்னைக் குறித்து குறிப்பிட்டுள்ளார். அது என்னவென்றால், “கடுகு விதையளவு விசுவாசம் உங்களில் இருந்தால்” என்று தம் சீடர்களைப் பார்த்து சொன்னார். இதை வாசிக்கின்ற உங்களுக்கு கடுகு விதையாகிய என்னளவில் விசுவாசம் இருந்தால் பெரிய பெரிய அற்புதங்களை அனுதினமும் உங்கள் வாழ்க்கையில் காண்பீர்கள். பைபிள் நிறைய படிக்கிறீர்கள், அநேக விஷயங்கள் உங்களுக்கு தெரிகிறது. ஆனால் உங்களிடத்தில் விசுவாசம் இல்லையே! அதனால் தான் விசுவாச குறைவுள்ளவர்களைப் பார்த்து “அற்ப விசுவாசிகளே” என்று இயேசு கடிந்து கொள்கிறார். விசுவாசித்துப் பாருங்கள். அற்புதத்தைக் காண்பீர்கள்.
தேவனுடைய ராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது என்று இயேசுவானவர் மாற்கு 4ம் அதிகாரத்தில் குறிப்பிடுகிறார். பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிய விதையாகிய நான் நிலத்தில் விதைக்கப்படுகிறேன். பின்பு பறவைகளுக்கு வீடாகும் பெரிய விருட்சமாக வளர்ந்து பெருகுகின்றேன். நீங்களும் ஆண்டவருக்கு என்று விதைக்கப்படும்போது, அதாவது ஊழிய களத்தில் தேவனுக்காக உழைக்க உங்களை ஒப்புக்கொடுக்கும்போது, அநேக ஆயிரங்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றப்படுவீர்கள். மிஷனெரி பணித்தளமொன்றில் நடைபெற்ற வீட்டு ஜெபத்தில் இவ்வசனம் பிரசங்கிக்கப்பட்டது. கல்வியறிவில் மிகவும் குறைவான செல்லம்மாள் என்பவர் இவ்வசனத்தை கவனமாய் கேட்டு, தன்னை அர்ப்பணித்தார்கள். இன்றைக்கு அநேக சிறுவர்கள், வாலிபர்கள், பெரியவர்களைக் கொண்ட பெரியதொரு திருச்சபை உருவாக காரணமானார்கள். இதை வாசிக்கின்ற உங்களுடைய வாழ்க்கையும் ஆரம்பம் அற்பமாக இருக்கலாம். ஆனால் கிறிஸ்துவுக்குள் முடிவு சம்பூரணமாக இருக்கும் என்று விசுவாசியுங்கள். தேவனுடைய ராஜ்யத்திற்கென்று நீங்கள் பெரிய காரியங்களைச் செய்யும்படி ஆண்டவர் உங்களைப் பயன்படுத்துவார்.
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
சத்தியம் T.V, நம்பிக்கை T.V யில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகள் மூலம் அநேகர் ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250