By Village Missionary Movement
Thursday, 03-Feb-2022இன்றைய தியானம்(Tamil) 03-02-2022 (God’s creation’s special)
இன்னொரு வாய்ப்பு
“...இது இந்த வருஷமும் இருக்கட்டும்;…” – லூக்கா 13:8
நான் ஒரு செழிப்பான இடத்தில் என் தோட்டக்காரனுடைய கவனமான கண்காணிப்பில் அழகாக வளர்ந்து வந்தேன். என்னுடைய மரத்தில் பறவைகளும் விலங்கினங்களும் தங்கும். எல்லா வசதிகளும், வாய்ப்புகளும் நான் பெற்றிருந்தும் நான் உண்டாக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றாத வண்ணம் வாழ்ந்து வந்தேன். என்னைக் குறித்து எனக்கே கவலையாக இருந்தது. நான் யார் என்று நீங்கள் என்னைக் கண்டுபிடித்துவிட்டீர்களா?
நான்தான் அந்த அழகான திராட்சத்தோட்டத்தில் நாட்டப்பட்டிருந்த அத்திமரம். என்னை கவனிக்கும் தோட்டக்காரர் மிகவும் நல்லவர். எனக்குத் தேவையான தண்ணீர், உரம், சூரிய வெப்பம் எல்லாம் கிடைக்கும்படி பார்த்து கவனித்து வந்தார். நானோ கிளைகளோடு இலைகளோடு பச்சைப் பசேலென்று வளர்ந்து வந்தேன். ஆனால் என்னில் கனி ஒன்றும் உண்டாகவில்லை. என்னே பரிதாபம்! இவ்வளவு பராமரிக்கப்பட்டு வந்தும் பிரயோஜனமில்லாமல்தான் இருந்தேன். இதை வாசிக்கிற நீங்களும் ஒருவேளை இப்படித்தான் இருக்கிறீர்களோ? ஆண்டவர் உங்களுக்கு நல்ல குடும்பம், வருமானம், வீடு, நல்ல ஐக்கியம் என அனைத்து வாய்ப்புகளையும் கொடுத்து மகிழ்ச்சியுடன் வாழ வைத்திருக்கிறாரல்லவா! எல்லாவற்றையும் அனுபவிக்கிற நீங்கள் மற்றவர்களுக்கு பயனுள்ள வாழ்க்கை வாழ்கிறீர்களா? அத்திமரத்தை நாட்டிய தோட்டக்காரன் வேறு மரத்தை அந்த இடத்தில் நட்டிருந்தால்கூட அது பலன் தந்திருக்கும். வாய்ப்புகள் அதிகம் பெற்ற நான் வாய்ப்புகளை பயன்படுத்தாத ஒரு வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். என்னைப் போன்று நீங்களும் உங்களை உண்டாக்கிய ஆண்டவருக்கு பாரமாக, துக்கத்தை கொடுக்கிற வாழ்க்கை வாழ்ந்து வருகிறீர்களா?
என்னைக் கவனித்த தோட்டக்காரன் என்னிலே கனி ஒன்றும் இல்லை என்று மூன்று வருடம் காத்திருந்து பார்த்தும் அதை வெட்டுவதற்கு எஜமானன் அனுமதி கொடுத்தும் எனக்காக பரிந்து பேசினாரே! இதே போன்று உங்களுக்கும் இயேசுவானவர் பிதாவினிடத்தில் பரிந்து பேசியதின் விளைவுதான் நீங்கள் இந்த வருஷம் உயிரோடிருக்கிறீர்கள். ஏனென்றால் இந்த வருஷம் நீங்கள் ஒரு கனியுள்ள வாழ்க்கை வாழ்வீர்கள் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார். ஆவியின் கனி உங்களிடமிருந்து வெளிப்படும்போது அது உங்களை அணுகுபவர்களுக்கு இனிமையாகவும் அவர்கள் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தையோ அல்லது தாக்கத்தையோ கொடுக்கும் அல்லவா! நாங்கள் ஒருவேளை இந்த வருடம் கனி கொடுக்கவில்லையென்றால் எங்களை வெட்டி தீ-க்கு இரையாக்கிவிடுவார்கள். நாங்கள் எரிந்து சாம்பலாகிப்போவோம். ஆனால் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வாய்ப்பைத் தவற விடுவீர்களானால் ஆண்டாண்டு காலம் தேவனோடு கூட வாழும் நித்திய வாழ்வை இழந்து பரிதவிக்க கூடியவர்களாய் மாறிப்போவீர்கள். ஆகவே கனிகொடுக்க கவனமாயிருங்கள்.
- Mrs. ஜெபா டேவிட்கணேசன்
ஜெபக்குறிப்பு:
நமது ஜெபக்கூடாரம் கட்டுமானப் பணியில் ஈடுபடும் நபர்களின் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250