By Village Missionary Movement
Friday, 28-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 28-01-2022
அவர் வரும் வரை...
“செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்;…” – பிரசங்கி 9:10
நாம் அனைவருமே அனுதினமும் கல்லறையை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கிறோம். யார் முதலில் போய்ச் சேர்வார்கள்? பிந்தி வருபவர்கள் யார்? கடைசியில் போகப்போகிறவர்கள் யார், யார் என்பதை தேவனே முடிவு செய்கிறார். நாம் நெடுநாட்கள் இந்தப் பூமியில் வாழப்போவதுமில்லை. வியாதிகளும், இயற்கையும் இணைந்தே பல மரணங்களைக் கொண்டு வருகின்றன. தற்போது கொள்ளை நோய் கொரோனா வைரஸ் மூலம் மரணம் பற்பல வழிகளிலும், இயற்கைப் பேரழிவுகளான நிலநடுக்கம், நிலச் சரிவு, பெருமழை, புயல்காற்றுகள், கொலைகள், தற்கொலைகள் என மரணங்களைக் கொண்டு வரும் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.
நாம் உயிரோடு இருக்கும் வரைதான் பல நல்ல காரியங்களைச் செய்ய முடியும். அதற்காகவே தேவன் நமக்கு ஞானத்தையும், அறிவையும், பல அற்புதமான தாலந்துகளையும் கொடுத்துள்ளார். நாம் அவைகளைச் சரியாகவும், முழுமையாகவும் பயன்படுத்துகிறோமா? இல்லை சோம்பலாக நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறோமா? ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கிற ஞானத்தின் மூலம் தேவனைப் பிரியப்படுத்தும் மகிமைப்படுத்தும் காரியங்களைச் செய்ய முடியும். அதைத்தான் சாலொமோன் கூறுகிறார், “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்” என்று. நம்மால் நம் வீட்டில் உள்ளவர்களுக்கு உதவியோ, பணிவிடையோ செய்ய முடியும். வழக்கமாகச் செய்யும் கடமைகளுக்கு அப்பால், அதிகமாகவும் நாம் செயல்பட முடியும். வயதான பெற்றோரை, மாமனாரை-மாமியாரை நன்றாகப் பராமரிக்க முடியும். பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாய் வளர்த்து, நல்ல பாதையில் வழிநடத்த முடியும். நம்மைச் சுற்றியிருப்போருக்குத் தேவையான நேரம், பண உதவியோ, மற்ற உதவிகளோ செய்து அவர்களை மகிழ்விக்க முடியும். ஒரு கிறிஸ்தவனுடைய சாட்சியானது தன்னுடைய குடும்பத்தில் தொடங்க வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். பள்ளியில் படிக்கிறவர்கள், தன் உடன் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தாம் கற்று அறிந்தவற்றை அவர்களுக்கும் கூறி அவர்களையும் உற்சாகப்படுத்தி, கல்வி அறிவில் உயர்த்தலாம். நற்கிரியைகள் செய்வதில் சோர்ந்து போகாமல் இருக்க வேண்டும். ஏனெனில் கர்த்தர்தாம் தம் தூதர்களுடன் வானத்தில் வரும்போது, அவரவர் கிரியைக்கு ஏற்ற பலனை கொண்டுவருவேன் என்று கூறியிருக்கிறார்.
ஆம், காலத்தை சரியாக பயன்படுத்தி, நம் கைக்கு நேரிடுவதை முழு பெலத்துடன் செய்வோம். ஒரு வேளை இவைகளை நாம் செய்யும்போது, பூமியில் நமக்கு கஷ்டங்களும், நஷ்டங்களும், இழப்புகளும் நாம் எதிர்பார்த்த அன்பு நமக்கு கிடைக்காமல் கூட போகலாம். ஆனால் சோர்ந்து போகாமல் இன்னும் உற்சாகமாய் செய்வோம். அவர் வரும்போது ஜீவகிரீடத்தை நமக்குத் தர அவர் ஆசையாய் இருக்கிறார். இதை நினைத்து இன்னும் நம்முடைய நற்கிரியைகளை அவர் வரும்வரை அதிக உற்சாகத்துடன் செய்வோம்.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
நமது Peace Centre –க்கு வரும் நபர்கள் சரீரத்திலும், ஆவி-ஆத்துமாவிலும் விடுதலை பெற்று இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250