By Village Missionary Movement
Wednesday, 26-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 26-01-2022
இடறலாயிராதிருங்கள்
“என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ,… சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.” – மத்தேயு 18:6
தென் ஆப்பிரிக்காவில் டிரான்ஸ்வால் என்னும் நகரிலுள்ள கதீட்ரல் ஆலயத்தில் பிரசித்திப்பெற்ற போதகர் செய்யப்போகும் பிரசங்கத்தைக் கேட்க, நமது தேசத்தந்தை காந்தியடிகள் தனது நண்பருடன் சென்றிருந்தார். ஆராதனை தொடங்குவதற்கு முன்பே சென்று கடைசி வரிசையில் அமர்ந்திருந்தார். அங்கிருந்த ஆலய பணியாளர் காந்தியடிகளிடம் வந்து, “ஆசியா கண்டத்துவாசிகள் ஆராதனைக்கு வரும் ஆலயம் இதுவல்ல, அவர்கள் ஆங்கிலேயர்களுடன் உட்கார்ந்து ஆராதிக்கும் வழக்கம் இங்கில்லை. உங்களுக்கென தனி ஆலயம் உள்ளது. ஆகையால் தயவுசெய்து வெளியே போய்விடுங்கள்” என்றார்.
அதற்கு காந்தியடிகள் தன் நண்பரைப் பார்த்து, “இந்த ஆலயத்தில் இயேசு கிறிஸ்துவுக்கு இடமில்லை என்று சொல்வது எனக்கு வியப்பாக உள்ளது” என்றார். உடனே ஆலயப்பணியாளர் கோபத்துடன், “இது கத்தீட்ரல் (பேராலயம்) இங்கு இயேசுகிறிஸ்து இல்லையென்று எப்படி சொல்லுகிறீர்கள்?” என்றார். அதற்கு காந்தியடிகள், “ஆம் இயேசு கிறிஸ்துவும் ஆசியாக் கண்டத்தில் பிறந்தவர்தானே! இந்த ஆலயத்தில் ஆசியாக் கண்டவாசிகளுக்கு இடமில்லை என்று நீர்தானே சொன்னீர்?” என்றார். பணியாள் வெட்கத்துடன் தலைகுனிந்தார்.
காந்தியடிகள் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். இந்தியாவிற்கு அது எவ்வளவு பெரிய ஆசீர்வாதமாய் அமைந்திருக்கும். ஆனால் கிறிஸ்தவர்கள் என்ற பெயரிலே ஜாதி உணர்வோடு வாழ்ந்த ஒரு சில கூட்டத்தார் அவர் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள இடறலாக்கிவிட்டார்கள். இன்றும் அநேகர் கிறிஸ்துவுக்கென்று வைராக்கியமாய் எழும்புவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாயிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் சிலரது உள்ளத்தில் நஞ்சு போலக் காணப்படும் ஜாதி உணர்வினால் ஐயோ! எத்தனை எத்தனை பேர் கிறிஸ்துவண்டை வராமலேயே போய்விடுகிறார்கள். ஜாதிக்கொரு ஆலயம் என்ற நிலை நம் இந்தியாவில் மாறும்வரை எழுப்புதல் தாமதிக்கத்தான் செய்யும்.
இதை வாசிக்கும் வாலிபனே! உன்னைக் குறித்து என்ன? உன் உள்ளத்திலும் ஜாதி உணர்வினால் உண்டாகும் ஏற்றத்தாழ்வுகள் உண்டா? உனது ஒவ்வொரு செயலும் மற்றவர்களை உருவாக்கும் அல்லது உடைக்கும். உடைந்து போனவர்களை உருவாக்கியிருக்கிறாயா! அல்லது கிறிஸ்துவுக்கு உருவாகி வருபவர்களை உடைத்திருக்கிறாயா? நாம் பிறரை படிப்பை வைத்தோ, அந்தஸ்தை வைத்தோ, ஜாதியை வைத்தோ குறைத்து மதிப்பிடுவோமானால் அவர்களை உண்டாக்கிய ஆண்டவரை நாம் அலட்சியப்படுத்துகிறோம் என்பதே உண்மை. நாம் பார்க்கும் ஒவ்வொருவரும் தேவசாயலால் உருவாக்கப்பட்டவர்கள் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதிருப்போம். நம் எல்லோருக்காகவும் சிந்தப்பட்ட ஒரே இரத்தத்தை நினைவுகூர்ந்து ஒருமித்து மகிழ்வாய் வாழ்வோம்.
- J. சந்தோஷ்
ஜெபக்குறிப்பு:
தேவன் நமக்கு தந்த தரிசனத்தை நிறைவேற்ற ஒவ்வொரு மாநிலத்திலும் இருந்து 12 மிஷனெரிகள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250