By Village Missionary Movement
Monday, 24-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 24-01-2022
கர்த்தரின் சித்தம் செய்யுங்கள்
“எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ்செய்யுங்கள்; அப்படிச் செய்வதே... தேவனுடைய சித்தமாயிருக்கிறது.” – 1தெச. 5:18
தாய்மார்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் உணவுகளில் சில உணவுகள் சத்து மிகுந்ததாக இருக்கும். ஆனால் சுவையாக இருக்காது. ஒரு சிறுவன் ஒரு நாள் தன் தாயிடம், “சுவையாக இல்லாத உணவை நீங்கள் எனக்குக் கொடுக்கும் போது நான் ஏன் தேவனுக்கு நன்றி சொல்லி உண்ண வேண்டும்?” என்றானாம். அதைப்போலத்தான் நாமும் நமக்கு விருப்பமில்லாத காரியங்களை தேவன் நம் வாழ்வில் அனுமதிக்கும்போது, நாம் ஏன் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற மனநிலையில்தான் இருக்கிறோம்.
ஆனால் பவுலையும், சீலாவையும் பாருங்கள். சிறைச்சாலையில் கால்கள் தொழுமரத்தில் மாட்டப்பட்டிருந்த நிலையில் கர்த்தரைத் துதித்துப் பாடினார்கள். காரணம், கர்த்தர் அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்க விரும்பினாரோ அப்படியே இருந்தார்கள். சிறைச்சாலைக் கதவுகளோ, தொழுமரத்தின் கட்டுகளோ அவர்களின் சந்தோஷம் நிறைந்த துதிப்பாடலை, தடுத்து நிறுத்த முடியவில்லை. அது மட்டுமல்ல, அப்போஸ்தலர்கள் அவருக்குச் செய்யும் திருப்பணியால் வரும் கஷ்டங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் நினைத்து சந்தோஷப்பட்டார்கள். அதாவது, எல்லா சூழ்நிலைகளிலும், கர்த்தரை நம்பி அவருக்கு ஸ்தோத்திரம் செய்பவர்களாக இருந்தார்கள்.
நைட்டிங்கேல் என்ற பறவை இரவில் பாடும் பறவை, இருள் அதன் இனிய பாடலைத் தடை செய்வதில்லை. காரணம், அது எப்பொழுது பாட வேண்டும் என்ற நோக்கத்தோடு கர்த்தர் அதைப் படைத்தாரோ அந்த நோக்கத்தை அது நிறைவேற்றுகிறது. கர்த்தரோடு நடப்பவர்கள் கர்த்தர் எதைச் செய்யவேண்டுமென்று விரும்புகிறாரோ அதைச் செய்வதில்தான் மகிழ்ச்சியடைகின்றனர். அவர்கள் சூழ்நிலைகளால் சோர்வு அடைவதில்லை. அவருடைய பிள்ளைகளாகிய நாமும் எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செலுத்த வேண்டுமென்று கர்த்தர் விரும்புகிறார். நம்மால் செய்ய முடியாததை நாம் செய்யும்படி கர்த்தர் எதிர்பார்க்கமாட்டார். எனவே இப்புதிய ஆண்டிலே எல்லாவற்றிலும் ஸ்தோத்திரம் செய்து கர்த்தரின் சித்தத்தை நிறைவேற்றுவோமாக!
வியாதி, வறுமை, கவலை, துக்கம், சோதனை இக்கட்டான சூழ்நிலை என எப்பேர்ப்பட்ட துன்பங்கள் நம்மைச் சூழ்ந்தாலும் அவருடைய பிள்ளைகளாகிய நாம் எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரம் செலுத்த வேண்டுமென்று தேவன் விரும்புகிறார். ஏனெனில் இவைகள் எல்லாவற்றிலேயும் தாங்கவும், சகிக்கவும் தப்புவிக்கவும் அவர் பெலன் தருகிறார்.
- Mrs. கீதா ரிச்சர்ட்
ஜெபக்குறிப்பு:
கெத்செமனே வளாகத்தில் துவக்கியுள்ள மருத்துவ சேவைப் பணிகள் இப்புதிய வருடத்தில் விரிவாக்கம் செய்யப்பட. இதற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்கள் நம்முடன் வந்து இணைய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250