By Village Missionary Movement
Friday, 21-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 22-01-2022
வாலிபரின் வைராக்கியம்
“அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார்.” – யோவேல் 2:18
இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தில் கன்றுக்குட்டியை செய்து வழிபட்டார்கள். ஆகவே தேவன் அவர்களை அழித்தார். நாம் வாழ்கிற இந்த காலத்தில் எல்லாரும் சிலை வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும் என்று சட்டம் வந்தால் நாம் என்ன செய்வோம்? தேவனுக்காக வைராக்கியமாக நிற்போமா? அல்லது உலகத்திற்கு பயந்து நாம் மாறுவோமா? இப்படியொரு சூழ்நிலையில் தேவனுக்காக வைராக்கியமாக நின்ற தேவ மனிதர்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.
நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோனின் ராஜா அறுபது முழ உயரம் ஆறுமுழ அகலம் கொண்ட ஒரு பொற்சிலையை சமபூமியிலே நிறுத்தி அந்த சிலையை தேசத்திலுள்ள அனைவரும் வணங்கும்படி கட்டளையிட்டான். அனைவரும் ராஜாவின் கட்டளைக்கு பயந்து வணங்கினார்கள். காரணம், தாழ விழுந்து பணிந்து வணங்கவில்லை என்றால் அவர்கள் அந்நேரமே எரிகிற அக்கினிக்கு இரையாக்கப்படுவார்கள் என்று கூறினான். அந்த தேசத்தில் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்ற மூன்று வாலிபர்கள் இருந்தார்கள். இந்த மூன்று வாலிபர்களும் தேவனுக்காக வைராக்கியம் பாராட்டினார்கள்.
ராஜாவின் கட்டளைக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லை. அவர்கள் சிலையை வணங்கவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டு ராஜ சமுகத்தில் நிறுத்தப்பட்டார்கள். ராஜா சிலையை வணங்கச் சொன்னான். அவர்கள் தைரியமாய் ராஜாவைப் பார்த்து, “நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உத்தரவு சொல்ல அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன், எரிகிற அக்கினிச் சூளைக்கும் ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமல் போனாலும் இந்தப் பொற்சிலையை வணங்க மாட்டோம்” என்று ஆணித்தரமாக சொன்னார்கள். ராஜா கடுமையான கோபத்தில் எரிகிற சூளையை ஏழு மடங்கு அதிகமாக்கச் சொல்லி அவர்களின் கை கால்களை கட்டி அக்கினியில் போடச் சொன்னார். அவர்கள் வைராக்கியத்தை பார்த்த தேவன் அக்கினியின் நடுவில் 4வது நபராக அவர்களோடு உலாவினார். அதை ராஜா கண்டு ஆச்சரியப்பட்டு “உன்னதமான தேவனுடைய தாசர்களே” என்று அவர்களை அழைத்து வெளியே வரச் சொன்னான். அவர்களின் முடிகூட கருகவில்லை. அக்கினியின் வாசனை அவர்கள் மேல் வீசவில்லை. கர்த்தர் அவர்களை விடுவித்தார்.
இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லை. இந்த தேவனுக்கு விரோதமாய் பேசுகிறவர்கள் அழிக்கப்படுவார்கள் என்று ராஜா கட்டளையிட்டான். இந்த மூன்று வாலிபரின் வைராக்கியத்தினால் பாபிலோன் தேசத்தில் தேவநாமம் உயர்த்தப்பட்டது. அவர்களும் உயர்த்தப்பட்டார்கள். நாமும் தேவனுக்காக வைராக்கியம் பாராட்டும்போது, தேவன் நம்முடைய இந்திய தேசத்தை தமக்குச் சொந்தமாக்குவார். அல்லேலூயா!
ஜெபக்குறிப்பு:
தமிழ்நாட்டில் ஆலயம் இல்லாத ஆயிரம் கிராமங்களில் ஆலயம் கட்டுவதற்கென எடுக்கப்படும் பிரயாசங்களில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250