By Village Missionary Movement
Monday, 10-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 10-01-2022
சும்மா இருக்காதீர்கள்
“பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்ய வேண்டும்;…” – யோவான் 9:4
சென்னை, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் Manpower Agency (மேன்பவர் ஏஜென்ஸி) நடத்துபவர்கள் அதிகரித்து விட்டார்கள். இவர்களின் வேலை என்னவென்றால், எந்தெந்த கம்பெனிகள் மற்றும் நிறுவனங்கள் தங்களுக்கு பகல் நேரம் முழுவதும் வேலை செய்ய ஆட்கள் வேண்டுமென்று சொல்லுகிறார்களோ, அவர்களுக்கு உடனடியாக ஆட்களை அனுப்பி வைப்பார்கள். யாரையும் சும்மா இருக்க விடவே மாட்டார்கள். படித்தவர்கள், படிக்காதவர் செய்யும் வேலை என எவ்வித ஆட்களைக் கூப்பிட்டாலும் உடனே அனுப்பி வைத்து விடுவார்கள். இதன் மூலம் கம்பெனிகளின் தரம் உயர்கிறது, வேலைகளும் சரியான நேரத்தில் முடிகிறது.
பரிசுத்த வேதாகமத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறிய உவமை மிகவும் ஆச்சரியமானது. ஒரு வீட்டின் எஜமான் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அனுப்பினான். அப்போது அதிகாலையில் புறப்பட்டு மூன்றாம் மணி வேளை, ஆறாம், ஒன்பதாம், பதினோராம் மணி வேளைவரை வேலையாட்களைத் தேடுகிறான். பதினோராம் மணி வேளையில் சும்மா நிற்கிறவர்களைப்பார்த்து, “நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன” என்று கேட்டான். என்னே ஒரு உதாரணம்! பின்பு அவன் அவர்களை கூட்டிச் சென்றான். அவர்களுக்கு நியாயமானபடி கூலி கொடுத்தான். இவ்விதமாக அந்த வேலைக்காரர்கள் சும்மா இருப்பதை விட்டுவிட்டு, எஜமானின் வார்த்தையைக் கேட்டு குறைந்தது ஒருமணி நேரமாவது வேலை செய்ததினாலே தங்களுக்குரிய பலனைப் பெற்றுக்கொண்டு சந்தோஷத்துடன் திரும்பிச் சென்றனர்.
நண்பர்களே! நம்முடைய தேவனின் இருதய சிந்தனைகளைப் பார்த்தீர்களா? நாம் பகல் நேரத்தில் சும்மா இருப்பதை தேவன் விரும்பவேமாட்டார். ஏதாகிலும் தேவனுக்காக செய்துகொண்டே இருக்க வேண்டும். நம்முடைய திறமை எதுவோ, நமக்கு எது தெரியுமோ, அதை தேவனுடைய ராஜ்யத்திற்காக செய்து கொண்டே இருக்கவேண்டும். பிறந்திருக்கிற இந்தப் புதிய ஆண்டில் ஒரு தீர்மானம் எடுப்போம். நம்மால் முடிந்த அளவிற்கு தேவனுக்கென்று எழுதுவோம், பாடுவோம், உழைப்போம், கொடுப்போம், பிறருக்குச் சொல்லுவோம்! சும்மா இருக்கவே கூடாது என்று தீர்மானம் எடுப்போம்! ஊழியர்களுக்கு கைகொடுப்போம்! தேவனுடைய ராஜ்ஜியம் வளரட்டும்! நீங்கள் எந்த வேலையைச் செய்கிறவர்களாக இருந்தாலும் குறைந்தது ஒருமணி நேரம் ஒதுக்கி தேசத்திற்காக ஜெபிக்கலாமே!
- T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மூலம் சந்திக்கப்பட்ட ஆத்துமாக்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250