By Village Missionary Movement
Thursday, 14-Jan-2021இன்றைய தியானம்(Tamil) 14-01-2021
விசுவாச பரீட்சை
“...அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும்.” – 1பேதுரு 1:7
1831ம் ஆண்டு மார்ச் 7ஆம் நாள் ஜார்ஜ் முல்லர் வாழ்வில் மிக சோதனையான நாள்! அன்று அவருடைய ஆசிரமத்திற்கு ஒரு பெரிய அவசியமான தேவை இருந்தது. அந்த தேவையைக் குறித்த கலக்கம் அவர் இருதயத்தை நிரப்பியது. அந்த gapல் நுழைந்த சாத்தான் ஜார்ஜ் முல்லரை நோக்கி, “இப்பொழுது நீ என்ன செய்யப் போகிறாய், இது எப்படி முடியும்?” என்று கிண்டலாய் கேட்டானாம். அப்பொழுது எல்லாவற்றையும் தேவனுடைய சமூகத்தில் வைத்துவிட்டு தேவன் என் தேவையை சந்திப்பார் என்ற விசுவாசத்தோடு ஜெபத்தை முடித்து எழுந்தார். மனதில் பெரிய சமாதானத்தை உணர்ந்தார். அன்றைய தினம் பொழுது போகும்முன் ஆண்டவரால் ஏவப்பட்ட ஒரு செல்வந்தர் தங்க நாணயங்களை கொண்டு வந்து கொடுத்தார். அந்தத் தேவையை சந்திக்க அது போதுமானதாக இருந்தது. இது எப்படி முடியும் என சவால் விட்ட சாத்தானை துரத்தி அடிக்க அவர் மேற்கொண்ட ஆயுதம் விசுவாசமே!
பரிசுத்த வேதத்தில் நாம் பார்க்கும்போது, ஊத்ஸ் தேசத்தில் வாழ்ந்த
யோபு – உத்தமன், சன்மார்க்கன், தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவன் என்று தேவனால் நற்சாட்சி பெற்றவன். அந்த யோபுவின் விசுவாசத்தை பரீட்சை பார்க்க சாத்தான் அவனுடைய பிள்ளைகள், சொத்துக்கள், ஆடுமாடுகள், கழுதைகள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டான். இந்த நிலையிலும் யோபு கர்த்தர் மேல் வைத்த விசுவாசத்தை விடாமல் கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்று கூறி தன்னுடைய விசுவாசத்தை அறிக்கையிட்டார். இதன் விளைவாகத்தான் இழந்த எல்லாவற்றையும் யோபு இரண்டத்தனையாய் பெற்றுக்கொண்டார்.
பிரியமானவர்களே! நம்முடைய வாழ்விலும் சாத்தான் அநேக நேரங்களில் பலவித சோதனைகளை கொடுக்கும் போது அந்த சோதனைகளை நாம் எப்படி மேற்கொள்கிறோம்? விசுவாச வார்த்தைகளைக் கொண்டு மேற்கொள்கிறோமா? இல்லையென்றால் சோர்ந்து விடுகிறோமா? நம் பிரச்சனை எவ்வளவு பெரியது என்று தேவனிடத்தில் சொல்வதைவிட, நம் தேவன் எவ்வளவு பெரியவர் என்று பிரச்சனையிடம் சொல்லுங்கள். ஆபிரகாமைப் போல, யோபுவைப் போல, ஜார்ஜ் முல்லரைப் போல விசுவாச வீரர்களாகுங்கள். விசுவாசத்தால் ஜெயமெடுப்போம். அப்போது பிரச்சனை பின்னிட்டு ஓடும்.
- Mrs. எஸ்தர் காந்திராஜன்
ஜெபக்குறிப்பு:
நம்முடைய ஊழியத்தின் மூலம் சந்திக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் இப்புதிய ஆண்டில் தேவனுக்கென்று எடுத்த தீர்மானத்தில் தங்களை புதுப்பித்துக் கொள்ள ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250