By Village Missionary Movement
Saturday, 01-Jan-2022இன்றைய தியானம்(Tamil) 01-01-2022
மகிழ்ச்சியான துவக்கம்
“...உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்.” – யோசுவா 3:5
1870-1871 ஆகிய வருடங்களில் ஜெர்மன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையே யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அச்சமயம் ஒரு மனுஷன் வெடிக்காத இரண்டு வெடிகுண்டுகளை இன்னதென்று அறியாமல் தன் வீட்டில் நெருப்பு மூட்டி குளிர் காயும் இடத்தினருகே வைத்திருந்தான். பல நாட்களுக்குப் பின்னர் அந்த மனுஷனுடைய நண்பரும் வெடிபொருள் வல்லுநருமான ஒருவர் அவர் வீட்டிற்கு தற்செயலாய் வந்திருந்தார். வெடிக்காத இரண்டு வெடி குண்டுகள் நண்பனுடைய வீட்டில் இருப்பதை கண்டவர் மிகவும் அதிர்ந்து போனார். தன் நண்பருக்கு அதைக் குறித்தும், அதின் விளைவுகளைக் குறித்தும் சொல்லி அக்குண்டுகளை அப்புறப்படுத்தினார்.
சில நேரங்களில் நாமும் நம்மிடம் உள்ளவைகளைப் பற்றி அறியாதிருக்கின்றோம். நம்மை பாழ்க்கடிக்கிற சில கிரியைகளை நம்மை விட்டு அப்புறப்படுத்தும்போது நமக்கு சுகமும், சமாதானமும் கிடைக்கிறது. வனாந்தர பிரயாணத்தில் யாக்கோபு தன்னோடு இருந்தவர்களிடம், உங்களிடம் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப் போட்டு வஸ்திரத்தை மாற்றி சுத்தம் பண்ணிக் கொள்ளுங்கள் என்கிறார் (ஆதி. 35:1-4). இதைப் போன்று 1சாமு. 7ம் அதிகாரத்திலும் சாமுவேல் மூலம் இஸ்ரவேலரை சீர்ப்படுத்தி பரிசுத்தத்தில் வழிநடத்தப்படுகிறதை வாசிக்கின்றோம். நம்மிடம் உள்ள ஆண்டவருக்கு பிரியமில்லாத செயல்களை விட்டு பரிசுத்தத்திற்கு நேராய் திரும்புவோமென்றால் எத்தனை அற்புதங்கள்.
இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்தும் பொறுப்பை புதிதாய் பெற்றிருந்த யோசுவாவிடம், "உங்களுக்கு அற்புதம் வேண்டுமானால், உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள்" என ஆண்டவர் கூறுகிறார். இந்த வருடம் உங்களுக்கு சிறப்பானதாக இருக்க வேண்டுமானால் வேறெந்த மந்திரமும் இல்லை. பரிசுத்தம் ஒன்றுதான் நாம் அற்புதங்களை பெற்றுக்கொள்ளும் வழி என வேதாகமம் கூறுகின்றது. பிறரை பார்க்க வேண்டாம். தற்பரிசோதனையில் அதிக கவனம் செலுத்துங்கள். வெடிகுண்டு போன்று வெடித்து என்னை அழிக்கக்கூடிய பாவங்கள் எவையெல்லாம் உள்ளன என ஆராய்ந்து அவற்றையெல்லாம் அப்புறப்படுத்துங்கள்.
சிற்றின்பங்கள், பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை வீணடித்தல், எதிர்பாலரோடு பழகுதல், ஆகாத சம்பாஷணைகள் என இதைப்போன்று இன்னும் நிறைய சொல்லலாம். நம் தேவன் பரிசுத்தத்தை விரும்புகிறவர். ஆகவே பரிசுத்தத்தை விரும்புங்கள், நேசியுங்கள் உங்களிடமிருந்து விலக்க வேண்டியதை உடனே விலக்குங்கள். தினமும் உங்கள் எல்லைகளில் தேவனுடைய அற்புதங்களைக் காண்பீர்கள். இவ்வருடத்தை பரிசுத்தத்தில் வளரும் ஆண்டாக அனுசரிக்க உள்ளோம். அனுதினமும் நாம் பரிசுத்தத்தில் பெருகி ஆசீர்வதிக்கப்படுவோம்.
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
இப்புதிய வருடத்தில் தேவன் இவ்வூழியத்தை நேர்த்தியாய் வழிநடத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250