By Village Missionary Movement
Friday, 31-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 31-12-2021
நன்றி சொல்லும் நேரமிது
“என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.” – சங்கீதம் 103:2
2021ம் ஆண்டின் இறுதி நாளுக்குள் வந்திருக்கும் நாம், நம் தேவனுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். 2020 மார்ச் மாதம் நம்மை பயமுறுத்தி நம்மில் அநேகரை பலியாக்கி 2021-லும் தொடர்ந்தது கொரோனா என்ற கொள்ளை நோய். ஆனால் நீங்களும் நானும் இன்னும் உயிருடனும், சுகத்துடனும் வாழத் தேவன் கிருபை செய்துள்ளார். நன்றியறிதல் கிறிஸ்தவ வாழ்க்கைக்கு மிகவும் அடிப்படையானது. இத்தருணத்தில் எனது சாட்சியை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மிகுந்த சந்தோஷம்.
என் Teen Age பருவத்தில் என் பெற்றோரை இழந்து என் தம்பி, தங்கைகளுடன் தவித்த எங்களை தேவன் நடத்தின விதத்தை ஒவ்வொருநாளும் நன்றியுடன் நினைக்கிறேன். தனிமையான எனக்கு, 37வது வயதில் வீடு வாசலை ஏற்படுத்தி கணவனைத் தந்து, ஊழியமும் செய்ய கிருபை செய்தார். 2 வருட குழந்தையில்லாமைக்குப் பிறகு 40 வயதில் ஒரு பெண் குழந்தையையும் 42 வது வயதில் ஆண்குழந்தையும் தந்து வளர்த்து ஆளாக்க கிருபை செய்த என் தேவனை ஒவ்வொரு நொடியும் நன்றியுடன் துதித்துக் கொண்டேயிருக்கிறேன். நாம் நிர்மூலமாகாதிருப்பது கர்த்தருடைய கிருபையே.
என் உபத்திரவங்கள், துன்பங்களின் வாயிலாக தேவன் எனக்கு ஏராளமான ஆசீர்வாதங்களையும் நன்மைகளையும் கொடுத்து, நான் பிறருக்காக ஜெபிக்கக் கற்றுக் கொடுத்துள்ளார். பெற்றோரில்லாத பிள்ளைகள், திருமணமாகாத வாலிபப் பிள்ளைகள், குழந்தையை எதிர்பார்க்கும் பெற்றோர் என்று துயரப்படுகிற யாவருக்காகவும் பாரத்தோடு ஜெபிக்கும் ஜெப ஆவியை என்னில் அதிகமாக ஊற்றி ஜெபிக்க வைக்கிறார். நாம் இந்நாள்வரை எத்தனையோ துன்பம், வேதனை, இழப்பு போன்றவற்றை அனுபவித்திருக்கலாம். ஆனால் நாம் நிர்மூலமாகாமல் நம்மைக் காக்கும் தேவனுக்கு நன்றி சொல்ல வேண்டாமா? எல்லா நேரத்திலும் நாம் எதிர்பார்ப்பது போல நடக்காவிட்டாலும் அவர் நம்மைத் தாங்கி, ஏந்தி, சுமந்து தப்புவித்து நடத்தி வருகிறார். எனவே எப்பொழுதும் எல்லாவற்றிற்கும் நன்றியுள்ள இருதயத்துடன் வாழுவோம். என்ன நோக்கத்திற்காக இந்த ஆண்டை முடித்து, புதிய ஆண்டிற்குள் பிரவேசிக்க செய்கிறாரோ அந்நோக்கம் நிறைவேற அர்ப்பணித்து ஜெபிப்போம். தேவ சமாதானத்துடன் புத்தாண்டிற்குள் பிரவேசிக்க தேவன் கிருபை செய்வாராக! ஆமென்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
வருகிற 2022ம் ஆண்டிலும் தொடர்ந்து தேவகிருபை நம்மைத் தாங்கி, தேவன் தந்துள்ள திட்டங்களை நாம் நிறைவேற்ற கிருபையருள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250