By Village Missionary Movement
Wednesday, 29-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 29-12-2021
இப்படியும் ஒரு சவாலா?
“உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.” – யோவான் 1:9
ஸ்டீபன், சாம் என்ற இரண்டு வாலிபர்கள் வருஷ துவக்கத்தில் தங்களுக்குள் ஒரு சவாலை வைத்தனர். என்ன சவால் என்றால் ஒரு வருடத்தில் 100பெண்களை நண்பர்களாக்கி அவர்களுடைய போன் நம்பரை வாங்க வேண்டும் என்பதே. ஸ்டீபன் இயேசுவை நேசித்த வாலிபன்தான். அவர்மேல் அன்பு வைக்கும் வாலிபன். ஆனால் இந்த இளையகுமாரனை போல இயேசுவை விட்டு பிரிந்து இந்த சவாலை ஏற்றுக்கொண்டான். போதாக்குறைக்கு அவன் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா? “பாருங்க இந்த சவாலில் நான்தான் ஜெயிப்பேன்” என்று! இதற்காக நிறைய காரியங்களும், செயல்களும் செய்ய ஆரம்பித்தான். அவனது Hair style, dress, character எல்லாம் பெண்களைப் பார்க்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாற ஆரம்பித்தது. கிட்டத்தட்ட அந்நாட்களிலிருந்து இயேசுவை மறந்தே போய்விட்டான். ஆனால் இயேசுவோ அவனை மறக்கவில்லை. ஏனென்றால் (லூக்கா 15:20) இந்த வசனத்தின்படி இயேசு உண்மையுள்ளவராய் இருந்தார். ஸ்டீபன் 7 மாதத்தில் கிட்டத்தட்ட 76 பெண்களிடம் பழகி நண்பனாக மாறி இருந்தான். இதுவே இவனுடைய குறிக்கோளாக இருந்தது. இந்த விஷயத்தில் இவன் திறமையுள்ளவனாக மாறினான்.
இதே டிசம்பர் 29ம் தேதி ஸ்டீபனோடு தேவன் இடைபட்டார். அந்த இரவு நேரத்தில் தேவன் அவனிடம் பேசினார், “உனக்காக நான் மரித்தேனே, எனக்காக நீ என்ன செய்திருக்கிறாய்? உன்மேல் பெரிய திட்டமும் நோக்கமும் வைத்திருக்கிறேன். நீ செய்யும்படி ஊழியத்தையும் வைத்திருக்கிறேன். எனக்காக நீ என்ன செய்யப்போகிறாய்?” என்று திட்டமும் தெளிவுமாய் பேசினார். ஆண்டவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து தன் மொபைலில் இருந்த சிம்-ஐ உடைத்துப்போட்டான். அன்றைய இரவே தேவனுடைய கரத்தில் தன்னை ஒப்புக்கொடுத்தான். நம்முடைய தேவன் சவுலை பவுலாக மாற்றின தேவன். நிருபங்களை கிழிக்க வந்தவனை நிருபங்களை எழுத வைத்த தேவன். ஆண்டவரை மறந்து பெண்களைத் தேடிசென்ற வாலிபனை, அவரே தேடிவந்து அவனுடன் இடைபட்டு அவன் வாழ்க்கையை முற்றிலுமாய் மாற்றினார். உளையான சேற்றிலிருந்து அவனை தூக்கி எடுத்தார். இப்போது VMM ஊழியத்தில் முழுநேர ஊழியராக ஊழியம் செய்துகொண்டு இருக்கிறான்.
நண்பர்களே! எந்த மனுஷனையும் அவர் பிரகாசிக்கச் செய்யமுடியும், மாற்றவும் முடியும். ஆம், எந்த மனுஷனையும் நம் இயேசு வெறுப்பதில்லை. அவனிடம் இருக்கின்ற அந்த பாவத்தையே அவர் வெறுக்கிறார். ஆகவே எப்பேர்பட்ட பின்மாற்ற நிலையிலிருந்தாலும் ஆண்டவரை நோக்கிப் பாருங்கள். அவர் உன்னை விடுவிப்பார்.
- Sis. ரோஸ்லின்
ஜெபக்குறிப்பு:
7000 ஊழியர்கள் மூலம் 1 இலட்சம் கிராமங்கள் சந்திக்கப்படும் திட்டத்தில் அர்ப்பணிக்கப்பட்ட ஊழியர்கள் நம்முடன் இணைய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250