By Village Missionary Movement
Monday, 27-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 27-12-2021
மூலைக்குத் தலைக்கல்
“...வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று…” – மத்தேயு 21:42
வீடு கட்டுவதற்கு பலவிதமான அளவுகளில் கற்கள் தேவைப்படும். அவைகளைச் சரியான அளவில் வெட்டி வைத்திருப்பார்கள். வீடு கட்டுபவர்களுக்குத்தான் எந்தக் கல், எந்த இடத்தில் வைத்தால் அது சிறப்பாக, பிரயோஜனமாக இருக்குமென்பது தெரியும். அதுபோல் நம்மைப் படைத்த ஆண்டவருக்குத்தான் நம்மை எந்த இடத்தில் எந்த சூழ்நிலையில் வைக்க வேண்டும்; எப்படி நடத்த வேண்டும் என்பது தெரியும். அதுபோல மூலைக்கல்லாக அமையும் கல்லானது, சுவரின் இரண்டு பக்கங்களையும் தாங்கிப் பிடிப்பதாக அமைகின்றது. அதுபோலத்தான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, தேவனையும், மனுக்குலத்தையும் இணைக்கிற தலைக்கல்லாக பாலமாக இருக்கிறார்.
பிரதான ஆசாரியர், வேதபாரகர், பரிசேயர், சதுசேயரால் தள்ளப்பட்ட அவமதிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவே, இரட்சிப்பின் அதிபதியாக உலகமக்கள் அனைவரின் பாவங்களைப் போக்க பலியானார். யூதர்களால் வேண்டாமென்று தள்ளப்பட்ட கல்லைப்போல இருந்த அவரே, மூலைக்கல்லாகி உயர்ந்து நின்றார். இது தேவன் அவருடைய தாழ்மைக்கும், கீழ்ப்படிதலுக்கும் கொடுத்த பரிசு.
அன்பு சகோதர-சகோதரிகளே, நீங்களும் உங்கள் குடும்பங்களிலோ, பணியிடங்களிலோ ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று தள்ளப்பட்ட கல்லைப்போல் இருக்கிறீர்களா? இவர்கள் பிரயோஜனமற்றவர்கள் அல்லது எந்த வேலைக்கும் லாயக்கில்லாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டுள்ளீர்களா? கவலையை விடுங்கள். யூத ஜனங்களாலும், மற்றவர்களாலும் தள்ளப்பட்ட கல்லைப்போல் இருந்த இயேசுவைத் தேவன் எல்லா ஜனத்திற்கும் மேலாக உயர்த்தினாரே. உங்களையும் உங்கள் குடும்பத்திற்கும் மற்ற அனைவருக்கும் மேலாய் உயர்த்த வல்லவராயிருக்கிறார்.
யாக்கோபின் முதல் மனைவியான லேயாள், கணவன் யாக்கோபாலும், அவள் சகோதரி ராகேலாலும் அற்பமாய் எண்ணப்பட்டாள். புருஷனின் அன்பும் கிடைக்கவில்லை; உடன்பிறந்த சகோதரியும் அவளைப் பகைத்தாள். கர்த்தரோ அவளை அற்பமாய் நினைக்கவில்லை. அவளுக்கு கர்ப்பத்தின் கனிகளைக் கொடுத்து மகிழச் செய்தார். அவர் பெற்ற மகன் யூதாவின் வம்சத்தில்தான் இயேசு கிறிஸ்து பிறந்தார். ஆம், தள்ளப்பட்ட ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் இருக்கும் எல்லாரையும் உயர்த்த கர்த்தராலே கூடும். எனவே நாம் தள்ளப்பட்ட நிலையில் இருந்தால், கர்த்தரை நோக்கிப் பார்ப்போம். அவர் நம்மை உயர்த்தி ஆசீர்வதிப்பார். ஆமென். அல்லேலூயா!
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு கிறிஸ்தவரும் சுவிசேஷம் அறிவிக்கிறவர்களாக மாற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250