By Village Missionary Movement
Wednesday, 22-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 22-12-2021
பயப்படாதே!
“...பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது;…” – லூக்கா 1:13
கிறிஸ்துமஸ் காலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்ற மகிழ்ச்சி நம் உள்ளத்திலே பெருமளவில் இருந்தாலும், வாழ்வில் எப்பொழுதுமே நம்மை நெருக்கிக் கொண்டிருக்கும் சில காரியங்களைக் குறித்த பயமும் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கத்தான் செய்கிறது. இன்றைய நாளிலே கிறிஸ்துமஸ் சம்பவத்திலே “பயப்படாதே” என்று தேவன் கூறும் கட்டளையை தியானிப்பது பொருத்தமாயிருக்கும்.
“சகரியாவே பயப்படாதே உன் வேண்டுதல் கேட்கப்பட்டது” (லூக்கா 1:13). பல ஆண்டுகளாக தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டுமென்று சகரியா ஜெபித்திருப்பார். ஆனால் இயேசுகிறிஸ்து பிறப்பதற்கு 6 மாதத்திற்கு முன்தான் யோவான்ஸ்நானன் பிறந்து, கிறிஸ்துவுக்கு வழியை ஆயத்தப்படுத்த வேண்டுமென்பது பிதாவின் சித்தமாயிருந்தது. ஆகவே தாமதமாய் பதில் கொடுக்கப்பட்டது. இன்றும் உங்கள் ஜெபங்கள் சிலவற்றிற்கு பதில் வர தாமதிப்பதால், உங்கள் முழங்கால்கள் ஒரு வேளை தளர்ந்திருக்கலாம். பிரியமானவர்களே பயப்படாதிருங்கள்! தேவனது தாமதமானது “இல்லை” என்று பொருள்படாது. அவர் தாமதித்தாலும் தரமானதைத் தருவார்.
“மரியாளே பயப்படாதே நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய்” (லூக்கா 1:30) கிருபையை யார் பெற்றுக் கொள்ள முடியும்? தாழ்மையுள்ளவர்கள் மட்டுமே! எவ்வளவு விலை கொடுத்தாலும் எங்கும் வாங்க முடியாத கிருபையை மரியாள் இலவசமாய் பெற்றிருந்தாள். சாதாரண தச்சருக்கு மரியாள் நியமிக்கப்பட்டிருப்பாளானால், அவர் ஒரு எளிய குடும்பத்தை சேர்ந்தவளே! உலக இரட்சகர் தோன்ற தேவன் அவளைத் தெரிந்துகொள்ள காரணம்தான் என்ன? பல்லாயிரக்கணக்கான யூத கன்னியர்கள் நடுவே, மரியாளின் இருதயத்தில் மறைந்திருந்த தாழ்மை, தேவனின் பார்வையை அவள் பக்கம் திருப்பியது. இன்றும் உங்கள் தாழ்ந்த, எளிய நிலையைக் குறித்து துக்கப்படுகிறீர்களா? மரியாளைப் போல தாழ்மையாயிருங்கள், உங்களுக்கு உயர்வு மிகச் சமீபம்.
“மேய்ப்பர்களே பயப்படாதீர்கள்.... மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்” (லூக்கா 2:10). தேவதூதர்களின் இந்த வார்த்தைகளை, மேய்ப்பர்கள் கேட்டபோது இரவு வேளை! இரவு என்பது செயல்பட முடியாத நேரம்! அந்த நேரத்தில் நற்செய்தி சொல்லப்படுகிறது. இன்றும் உங்கள் வாழ்வு இருண்டு காணப்படுகிறதா? எப்பக்கம் அடிவைத்து முன்னேறுவது என்று குழம்பி நிற்கிறீர்களா? பயப்படாதிருங்கள். உங்கள் வாழ்வை வெளிச்சமாக்க இயேசுகிறிஸ்து இருக்கிறார். ஒவ்வொருநாளும் அவரது முகதரிசனத்தை நாடுவீர்களானால் உங்கள் முகம் பிரகாசமடையும்.
“பயப்படாதே! நான் உனக்குத் துணை நிற்கிறேன்” (ஏசாயா 41:14)
- S. ஜெயக்குமாரி
ஜெபக்குறிப்பு:
ஒரு கிராமத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஊழியங்கள் நடத்த ரூ. 5000 தேவைப்படுகிறது உதவும் உள்ளங்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250