By Village Missionary Movement
Friday, 17-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 17-12-2021
கிறிஸ்து பிறப்பின் இரகசியம்
“அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்...” – மத்தேயு 1:21
இயேசு கிறிஸ்து இவ்வுலகில் பிறந்த போது, யூதர்கள் என்ன நினைத்தார்கள் என்றால், தங்களை ஆளும் ரோம ராஜ்யத்தினின்று இவர் தங்களை விடுதலை செய்து, ஒரு தனி ராஜ்யத்தை ஸ்தாபிப்பார் என எண்ணினார்கள். ஆகவேதான், “ஆண்டவரே இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்கு திரும்பக் கொடுப்பீர்?” (அப். 1:6) என்று கேட்டார்கள்.
ஆம், இயேசு வாழ்ந்த காலத்தில் யூதர்கள் ரோமர்களுக்கு அடிமையாய் இருந்தது உண்மைதான். ஆனால் கிறிஸ்து இவ்வுலகத்திற்கு வந்ததின் நோக்கம், அவர்களை இவ்வுலக அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க அல்ல; அதைப் பார்க்கிலும் கொடிதான பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கவே வந்தார். இந்த பாவ அடிமைத்தனம், அந்த அடிமைத்தனத்தைப் பார்க்கிலும் அதிக கேடானது எனக் கண்டு, முதலாவது பாவத்திலிருந்து விடுதலை செய்ய சித்தம் கொண்டார். ஆனால் யூதர்களுக்கு அதை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை. இன்னும் மேசியாவின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஐயோ பரிதாபம்! ஆனால் நாமோ கிறிஸ்து பிறப்பின் இரகசியத்தை அறிந்து கொண்டு விட்டோம்; ஆனால் பாவத்திலிருந்து மெய்யான விடுதலையைப் பெற்றுக்கொண்டுள்ளோமா?
ஓ கிறிஸ்தவமே! குடிவெறி, வீண்பக்தி, விபச்சாரம், உலக ஆசை முதலிய எல்லா பாவத்திலிருந்தும் விடுதலையாக்க வந்தவரின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோமே, நாம் மெய்யான விடுதலையைப் பெற்றிருக்கிறோமா? ஐயோ! இன்னும் ஏராளமான கிறிஸ்தவர்கள், அவருடைய பிறப்பைக் கொண்டாடியும் அவர் பிறப்பின் இரகசியத்தை அறியாமல் பாவத்திற்கு அடிமைகளாயிருக்கிறார்களே! இதிலிருந்து விடுதலையைப் பெறாவிட்டால் நாம் கிறிஸ்தவர்களாய் இருப்பதினால் என்ன பலன்? அவர் பிறந்த நாளை வருஷா வருஷம் கொண்டாடுவதினால் என்ன பிரயோஜனம்? யோசிப்போம். எல்லாவித பாவங்களினின்றும் மெய்யான விடுதலை, இரட்சிப்பைப் பெற்று அவருக்குச் சாட்சியாய் வாழ்வது கடினமோ? அவர் தம்மை நமக்காகத் தந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அடிமைகளாயிருக்க வேண்டியதென்ன?
பிரியமான சகோதரரே, சகோதரியே, பல்லாயிரம் தடவை கிறிஸ்து பெத்லகேமில் பிறந்தாலும் உங்கள் உள்ளத்தில் அவர் உருவாகாவிட்டால் என்ன பிரயோஜனம்? இன்றே அதை உணர்ந்துகொள்வோம். காலதாமதம் செய்ய வேண்டாம். இருக்கிறபிரகாரமாய் உங்களை முற்றிலும் அவருக்கு ஒப்புக்கொடுத்து, உண்மையான மகிழ்ச்சியோடு கிறிஸ்துமஸை கொண்டாடுவோம்.
- Bro. சாமுவேல் ஜெபரத்தினம்
ஜெபக்குறிப்பு:
ஆந்திர மாநிலத்தில் பாடேரு, அரக்குவேளி மண்டலங்களில் புதிதாகப் பணித்தளங்கள் ஆரம்பிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250