By Village Missionary Movement
Thursday, 16-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 16-12-2021
வார்த்தையா- மாம்சமா?
“அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்...” – யோவான் 1:14
மார்கழி மாதக் குளிரின் நடுக்கத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் அதிகாலை பொழுதொன்றில், திடீரென்று தங்கள் பச்சிளம் குழந்தைகள் வீறிட்டு அழும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தனர் பெற்றோர்கள். பத்து வருடங்களாக கண்ணீரின் பள்ளத்தாக்கில் உருவ நடந்து அவர்களுடைய வனாந்திர வாழ்க்கையில் “இரட்டிப்பான நன்மையைத் தருவேன்” என்ற கர்த்தரின் வாக்குப்படி இரட்டைக் குழந்தைகளை ஒரு மாதத்திற்கு முன்புதான் பெற்றெடுத்திருந்தார்கள். குழந்தைகளின் அழுகுரல் கேட்டு எழுந்து அவர்களை பசியாற்ற முயற்சித்தனர். தன் பாட்டி கொடுத்த புட்டிப்பாலில் பசி அடங்கி மீண்டும் உறங்க முற்பட்டான் மூத்தவன். ஆனால் இளையவனின் கதறல் ஓயவில்லை. பாட்டி கொடுத்த புட்டிப்பாலை குடிக்க மனதில்லாமல் அழுதுகொண்டிருந்த இளையவனை அள்ளி அணைத்த அவனின் தாய், குழந்தைகள் காப்பகத்தில் இருந்தபோது எப்பொழுதும் தான் பாடின பாடலை பாடத் துவங்கினாள். பிறந்து ஒரு மாதமேயானாலும் தாயின் குரலை அடையாளம் கண்டு கொண்ட குழந்தை அழுகையை மறந்து, அமைதியாக தாயின் அரவணைப்பில் அயர்ந்து உறங்கத் தொடங்கியது. மூத்தவனோ பசியாறினால் போதுமென்று திருப்தியடைந்து விட்டான். ஆனால் இளையவனோ தாயின் பாச வார்த்தையிலும் அரவணைப்பிலும் மட்டுமே திருப்தியடைந்தான்.
வேதாகமத்திலே ஏசா, யாக்கோபு என்ற இரட்டைச் சகோதரர்கள் தன்னுடைய தகப்பனாரின் ஆசீர்வாதத்தைப் பெற விரும்பினர். இளையவனாகிய யாக்கோபு தன் மூத்த சகோதரனைப் போல வேடமிட்டு, ஏமாற்றி தந்தையின் ஆசீர்வாதத்தை “வார்த்தையாக” பெற்றுக்கொண்டான். ஏசாவோ தன் தகப்பனின் திரளான ஆஸ்திகளுக்கு உரியவனாகி அவைகளை தன் வாழ்நாளில் முழுவதும் அனுபவித்தான். தகப்பனிடமிருந்து வார்த்தையாக ஆசீர்வாதத்தை பெற்றுக் கொண்ட யாக்கோபு, ஒன்றுமில்லாத சூழ்நிலையில் கோலும் கையுமாக புறப்பட்டாலும், அவன் தகப்பனிடமிருந்து பெற்ற வார்த்தையின் ஆசீர்வாதம் அவனை இஸ்ரவேல் ஜனத்திற்கே தகப்பனாக மாற்றியது. தலைமுறை தலைமுறையாய் ஆசீர்வாதம் தொடர்ந்தது.
அதேபோல நம் வாழ்வில் நாம் அனேக வாக்குத்தத்தங்களைப் பெற்றிருந்தாலும் அவைகளால் மகிழ்வுற்று, உறுதியாகப் பற்றிக்கொண்டு, விசுவாசித்து ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ள வேண்டும். வாக்குத்தத்தங்கள் ஒருபோதும் பொய்யாகாது. வார்த்தையாகிய இயேசு கிறிஸ்து வாக்கு மாறாதவர். யாக்கோபு தன்னைத் தன் மூத்த சகோதரனாகிய ஏசாவின் பெயர்சொல்லி தகப்பனின் முன் காணப்பட்டு ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டது போல, நாமும் நம் மூத்த சகோதரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பிதாவின் ஆசீர்வாதத்தை சுதந்தரிப்பது அதிக நிச்சயம்.
- Mrs. வசந்தி ராஜமோகன்
ஜெபக்குறிப்பு:
ஆந்திரா பணித்தளம் ரேகா புண்யகிரி மலைக்கிராம ஆலயக் கட்டுமானப் பணிகள் விரைவில் பூர்த்தி செய்யப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250