By Village Missionary Movement
Wednesday, 15-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 15-12-2021
மனதுருக்கம்
“துன்மார்க்கன் தன் வழியை…விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்;…” – ஏசாயா 55:7
இரட்சண்ய சேனை (Salvation Army) யின் நிறுவனர் வில்லியம் பூத்தின் அடக்கம் இராஜ மரியாதையோடு நடைபெற்றது. எல்லோரும் சவப்பெட்டிக்குள் மலரைப்போடும் வேளையில், கசங்கிய சாதாரண உடையோடு ஒரு பெண் நின்று கொண்டிருக்கிறதை கவனித்த இராணி, “இவரை எப்படி உனக்குத் தெரியும்?” என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண், “அவர் என் போன்றோர் மீது மிகுந்த மனதுருக்கம் உள்ளவர்” என்று பதிலளித்தாள். “மனதுருக்கம் என்பது பிறருடைய வேதனையை நம் வேதனையைப் போல் இருதயத்தில் ஏற்றுக் கொள்வதே” என்று ஜார்ஜ் வொயிட்ஃபீல்ட் என்ற தேவமனிதர் கூறுகிறார்.
உலகத்தில் பிறந்த மனிதர்கள் படும் வேதனைகள் பலவிதம். ஒவ்வொருவரும் தன்தன் பாவங்களில் சிக்குண்டு வேதனை அடைகிறார்கள். இன்னும் நோயினால் வேதனைப்படுவோருண்டு, கடன்பிரச்சனையால் வேதனைப்படுவோருண்டு, குடும்பத்திலே பிள்ளைகளாலோ, உறவினர்களாலோ சமாதானக் குறைவு ஏற்படும்போதோ, அவரவர்களின் கொடூர பாவங்களினாலோ, மீறுதல்களினாலோ, சுய இச்சைகளை நிறைவேற்றியதாலோ வேதனைப்படுகிறவர்கள் உண்டு.
இவர்கள் எல்லாருடைய வேதனைகளையும் தன் வேதனையைப் போல் ஏற்றுக்கொண்டவர்தான் நம் இரட்சகர் இயேசு கிறிஸ்து. சிந்தையில் செய்த பாவங்களுக்காக முள்முடி ஏற்றார். இருதயத்தில் நினைத்த பாவங்களுக்காக ஈட்டியால் குத்தப்பட்டார். கைகள், கால்கள் செய்த பாவங்களுக்கு ஆணிகளால் கடாவப்பட்டார். வேதனைகளில், பாவங்களில் உழன்ற நம்மை அதிலிருந்து மீட்கும்பொருட்டாக இந்த உலகத்தில் மனுவுருவாய்ப் பிறந்த இரட்சகரின் மனதுருக்கத்தை எண்ணிப்பாருங்கள்.
ஆம், ஆண்டவரின் மனதுருக்கத்தால்தான் நாம் மன்னிக்கப்பட்டிருக்கிறோம், இரட்சிக்கப்பட்டிருக்கிறோம், நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். அதேப்போல நாமும் பிறரிடம் மனதுருக்கத்தோடு நடந்துகொள்வோம். பிறரது குறைவுகளை குற்றங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்துவின் சுபாவத்தை வெளிப்படுத்துவோம்.
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:
சத்தியம், நம்பிக்கை டி.வி. மற்றும் சமூக வலைதளங்களிலும் சகோ. டேவிட் கணேசன் அவர்கள் அளிக்கும் தேவ செய்தியை கேட்கும் ஒவ்வொருவரும் விடுதலை பெற்று இரட்சிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250