By Village Missionary Movement
Tuesday, 14-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 14-12-2021
எங்கே பாதுகாப்பு?
“ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள்.” – மத்தேயு 2:3
இயேசுகிறிஸ்துவின் பிறப்பின் சரித்திரத்தில் ஏரோது ராஜாவைக் குறித்து வாசிக்கிறோம். இவர் ரோமப்பேரரசால் இஸ்ரவேல் நாட்டை ஆளும்படி நியமிக்கப்பட்ட அரசன். இவர் காலத்தில் அநேக கோவில்கள், நினைவுச் சின்னங்கள் கட்டப்பட்டன. எல்லாவற்றிற்கும் மேலாக எருசலேம் தேவாலயத்தை பிரம்மாண்டமாய் புதுப்பித்தார். இவையெல்லாம் பக்தியின் வெளிப்பாடு அல்ல; ஒரு அரசியல்வாதியைப் போல மக்களைக் கவர செய்யப்பட்டவை. இந்த ஏரோது ராஜா இயேசுகிறிஸ்துவின் பிறப்பை கேள்விப்பட்டபோது கலங்கினார். அதோடு இரண்டு வயதிற்குட்பட்ட பிள்ளைகளையெல்லாம் கொன்றார் என்றும் வாசிக்கின்றோம். ஏன் ஒரு குழந்தையைக் கண்டு பயப்படவேண்டும்? அவர் கணக்குப்படி அக்குழந்தை ஆட்சிக்கு வரவேண்டுமானாலும் இன்னும் 20 ஆண்டுகள் ஆகுமே!
ஏரோதின் சரித்திரத்தை இன்னும் ஆராய்ந்து பார்த்தால் அவர் குழந்தைகளை மட்டுமல்ல, தன்னுடைய ஒரு மனைவியையும் தன் சொந்தப் பிள்ளைகள் இரண்டுபேரையும், மாமியார் மற்றும் தனது ஒரு மாமாவையும் கொன்றிருக்கிறார் என்று அந்தப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. (பார்க்க: www.britannica.com/biography/herod-king-of-Judaea) இந்த கொலைகளுக்கெல்லாம் அடிப்படை காரணமென்ன? அவருக்கிருந்த பாதுகாப்பற்ற உணர்வே!
தேசத்தின் அரசனாய், அரண்மனையிலே போர்ச்சேவகர்கள் சூழ இருந்தாலும் பயம் நிறைந்தவராய் ஏரோது வாழ்வைப் பார்க்கிறோம். ஆனால் தாவீது ராஜாவின் வாழ்வை கவனிப்போமென்றால், தன் சொந்த மகனே இவரை கொலை செய்ய விரட்டிய சூழ்நிலையிலும் அவர் எப்படிப்பட்ட மனநிலையோடு இருந்தார் என்பதை சங்கீதம் 3ல் வாசிக்கிறோம். தனக்கு எதிரே ஒரு படையே வந்தாலும் நான் பயப்படேன் என்று சொன்னதோடு, தான் படுத்து நிம்மதியாய் உறங்கி எழும்புவதாகவும் வெற்றி முழக்கமிடுகிறார். ஒரு பக்கம் அரண்மனைக்குள் பயந்து நடுங்கும் ஏரோது, இன்னொரு பக்கம் பயப்பட வேண்டிய சூழ்நிலையிலும் தைரியமாயிருந்த தாவீது! இது எப்படி?
இந்த இரகசியத்தை சங். 3:3ல் வாசிக்கிறோம். தாவீது கர்த்தரையே தன் வாழ்வின் நம்பிக்கையாக கொண்டிருந்ததே! ஆம், நமக்கு வாழ்வில் பாதுகாப்பு உணர்வு தருவது பணமோ, பதவியோ, அந்தஸ்தோ அல்ல; கர்த்தர் மேல் எவ்வளவு விசுவாசம் வைத்திருக்கிறோமோ அவ்வளவு பாதுகாப்பு உணர்வோடு வாழ்வோம். பணமே பாதுகாப்பு என்று சேர்த்து சேர்த்து வைத்தவர்களின் பதற்றத்தை கடந்த சில வாரங்களாக நம் தேசத்திலே பார்த்துக்கொண்டிருக்கிறோம். இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் கர்த்தரையே நம்பி வாழ நம்மை அர்ப்பணிப்போம். பயமின்றி பாதுகாப்பு உணர்வோடும், இளைப்பாறுதலோடும் வாழ்வோம்.
- J. சந்தோஷ்
ஜெபக்குறிப்பு:
ஆயிரம்பேர் அமர்ந்து ஆராதிக்க கட்டும் ஜெபக்கூடாரப் பணிகளில் தேவகரம் உடனிருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250