By Village Missionary Movement
Monday, 13-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 13-12-2021
புதையலைத் தேடி
“தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.” – 2 கொரி. 9:15
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டேவ் கிறிஸ்ப் மறைந்திருக்கும் பொக்கிஷங்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டார். நாட்டின் தென்மேற்கு பகுதியில் ஒரு ரகசிய இடத்தில் குவியலாக சேர்த்து வைக்கப்பட்டிருந்த ரோம நாணயங்களை கண்டுபிடித்தார். மறைந்திருக்கும் பொருட்களை கண்டுபிடிக்கும் கருவியைக் கொண்டு 52000 நாணயங்கள் இருந்த இந்தப் பெரிய பானையை கண்டுபிடித்தார். இந்தப் பழமையான வெள்ளி மற்றும் வெண்கல நாணயங்கள் கிறிஸ்துவுக்கு பின் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகள். அவைகள் ஏறத்தாழ 175 கிலோ எடை கொண்டதாகவும் 50 லட்சம் ரூபாய் விலை மதிப்புள்ளதாகவும் இருந்தது.
இச்சம்பவம் டேவ் கண்டுபிடித்த இந்த பொக்கிஷங்களை போன்ற விலை உயர்ந்த பொக்கிஷங்களை நாமும் பெற மாட்டோமா என்று தனிமைக் கனவு காண தூண்டுகிறது. இதை வாசிப்பவர்கள் நீங்கள் இன்னும் வித்தியாசமாக பொக்கிஷங்களை கண்டுபிடிக்க வேண்டியவர்களாக காணப்படவேண்டும். நாம் தேடுகின்ற பொக்கிஷங்கள் வெள்ளியும் பொன்னும் அல்ல. அது மாணிக்க கற்களைப் போன்றது. நீங்கள் தேடினால் கிறிஸ்துமஸ் நாட்களில் விலையேறப்பெற்ற புதையலை கண்டடைவீர்கள். ஆம், அது இயேசு கிறிஸ்துவே! பரலோகத்தின் தேவன் பூமியில் மனிதர்களுக்கு விலையேறப்பெற்ற பொக்கிஷமாக தமது சொந்தக் குமாரனையே அனுப்பித் தந்தார். இந்த பொக்கிஷம் ஒரு மனிதனுக்கு பூமிக்குரிய வாழ்வில் மட்டுமல்ல மறுமையிலும் நித்திய வாழ்க்கைக்கு சேர்த்தே கொடுக்கப்பட்டது. இச்செய்தியை வாசிக்கின்ற நீங்கள் விலையேறப்பெற்ற பொக்கிஷமாக இயேசுவை கண்டுபிடித்து விட்டீர்களா? உங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டீர்களா?
மத்தேயு சுவிசேஷத்தில் வாசிக்கும்போது சாஸ்திரிகள் இயேசுவை கண்டு வழிபடும்படி நீண்டதொரு பிரயாணத்தை செய்தார்கள். இயேசுவை இறுதியில் கண்டவுடன் தங்கள் கையிலுள்ள பொக்கிஷத்திலும் விலையேறப்பெர்ற பொக்கிஷமாக இயேசுவைப் பார்த்தார்கள். இன்று நீங்களும் இயேசுவை உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு விலையேறப்பெற்ற புதையலாக இருக்கின்றது. தேவன் அருளிய சொல்லி முடியாத ஈவுக்காக ஸ்தோத்திரம். ஆமென்.
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
ஜார்கண்டில் புதிய பணித்தளம் ஆரம்பிக்க தேவன் கிருபை செய்ய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250