By Village Missionary Movement
Friday, 10-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 10-12-2021
பரலோக பொக்கிஷங்கள்
“...பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.” - மத்தேயு 2:11
இயேசு கிறிஸ்து பெத்லகேமில் பாலகனாய் பிறந்த போது கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் வந்து அவரைப் பணிந்து கொண்டு, விலையேறப்பெற்ற பொருட்களை இயேசுவுக்குக் கொடுத்து தங்களுடைய அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினார்கள். அவைகள் எல்லாம் பூமியிலே விலையேறப்பெற்ற பொருட்களும் இராஜாக்களும் உயர்குடி மக்களும் பயன்படுத்தும் பொருட்களாகும். அவைகள் பூமியிலே மிகவும் விலையேறப் பெற்றதாயிருந்தாலும் பரலோகத்தின் பார்வை வேறுபட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.
அழிந்து போகிற பொன்னும் அழியாத விசுவாசமும்: நாம் பூமிக்கென்று சேர்த்துவைக்கிற எந்தப் பொருளும் நிச்சயம் அழிந்துபோகும். ஆனால் தேவன் நம் இருதயத்தில் கொடுத்திருக்கும் விசுவாசத்தின் கிரியைகளானது பூமியிலும் நமக்கு சிறந்த பலனளிக்கிறதுமில்லாமல் பரலோகத்திற்கும் நம்மை கொண்டு சேர்க்கும் வல்லமையுல்ளது. அந்த நம்பிக்கையானது நம்மை நிச்சயமாகவே வெட்கப்படுத்தாது.
தூபவர்க்கமாகிய ஜெபம்: வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய தேவன் என்னுடைய ஜெபத்தின் மூலம் கிரியை செய்ய விரும்புகிறார் என்பது எவ்வளவு பெரிய மேன்மையான ஆசீர்வாதம்! ஆனால் இன்றைய நாட்களில் பூமியிலுள்ள மனிதர்களிடமோ அல்லது பொருட்களிடமோ (செல்போன்) விரயம் செய்யும் நேரம்கூட தேவனிடம் நேரம் செலவழிக்க பெரும்பாலானோருக்கு விருப்பம் இல்லையென்பது மிக மிக வருத்தமான காரியம்.
வெள்ளைப்போளம்: வெள்ளைபோளம் என்பது ஒவ்வொரு கிறிஸ்தவனும் தன்னுடைய கையில் எடுக்க வேண்டிய சிலுவையைக் காண்பிக்கிறது. அதுமட்டுமல்ல உலகத்தின் ஐசுவரியத்துக்கு மயங்காமல் பரலோகத்தின் பிரசன்னத்திற்கு கீழ்ப்படிந்து கிறிஸ்துவின் வாசனையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதே ஆகும்.
பிரியமானவர்களே! மேலே நாம் கண்ட விசுவாசம், ஜெபம், சிலுவை வாழ்வு என்பது பரலோகத்தின் சிறந்த பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது. எனவே இந்த கிறிஸ்துமஸ்நாட்களில் இப்படிப்பட்ட குணாதிசயங்களை பெற முயற்சி செய்வோம். பின்பு பரலோகம் கொண்டாடும் பொக்கிஷமாக நாமும் மாற முடியும். ஆமென்.
- S. மனோஜ்குமார்
ஜெபக்குறிப்பு:
ஒடிஸா பணித்தள கிராமங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மூலம் விசுவாசிகளின் உறவினர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250