By Village Missionary Movement
Wednesday, 08-Dec-2021இன்றைய தியானம்(Tamil) 08-12-2021
இப்படியிருக்க முடியுமா?
“அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப் பண்ணவுமாட்டார்.” - ஏசாயா 42:2
சென்னையில் உள்ள புகழ்பெற்ற தெரசா மருத்துவமனையில் ஒரு தன்னார்வ குழுவும் உண்டு. அது எதிர்பாராத ஆபத்துக்களில், விபத்துக்களில் ஜனங்கள் சிக்கித் தவிக்கும் வேளையில் அவர்களுக்கு உதவிசெய்யும்படியாக சுயநலமின்றி எந்தவித பிரதிபலனும் எதிர்பாராமல் தாமாகவே முன்வந்து உதவி செய்யக்கூடியது. இதில் இருந்த தன்னார்வத் தொண்டர்கள் பதிவேட்டில் F.M.P.B யின் ஸ்தாபகர் அண்ணன் பேட்ரிக் ஜோஸ்வா அவர்களும் மனமுவந்து தன் பெயரை பதிவு செய்து வைத்திருந்தார்கள்.
திடீரென்று ஒரு நாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒருவர் மயங்கி கிடப்பதாகவும், அவருக்கு உதவி தேவை என்றும் ஒரு தகவல் வந்தது. அதைக் கேள்விப்பட்ட சில வினாடிகளிலேயே தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சென்னை ரயில் நிலையத்திற்கு சென்றவர், ஏற்கனவே அங்கு இருந்த மூன்று நபர்களுடன் சேர்ந்து மயங்கி கிடந்த நபருக்கு முதலுதவி செய்து அவரை மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்தார். சரியான நேரத்தில் உதவி தேவைப்பட்டோருக்கு உதவ முடிந்ததே என்ற மனதிருப்தியுடன் அருகிலிருந்த மூவரில் ஒருவரிடம் “Sir, நீங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?” எனக் கேட்டார். அதற்கு அவர், “நான் இந்த District Collector” என்றாராம்.
இயேசு கிறிஸ்துவும் கூட பரலோகத்தின் மேன்மையை துறந்து பூலோகத்திலே தாழ்மையின் வடிவமாய் அடிமையின் ரூபமெடுத்து மாட்டுக் கொட்டகையில் எந்தவித அதிகாரமும், ஆர்ப்பாட்டமும், ஆடம்பர வசதியும் இல்லாமல் மனுக்குலத்தை மீட்கும்படியாக வந்தார். ராஜாதி ராஜாவாம் இயேசு கிறிஸ்து அரண்மனையிலும் ஏசி அறையிலும் கட்டிலிலும் மெத்தையிலும் படுத்துறங்கவில்லை. நாம் நம்மைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம். மாட்டுத்தீவன தொட்டிலிலே படுத்துறங்கிய ராஜாதி ராஜாவுக்கு முன்பாக, தெருவிலே கிடந்த மனிதனை பாகுபாடு கருதாமல் தூக்கி மருத்துவமனையில் கொண்டு சேர்க்க உதவிய மாவட்ட கலெக்டருக்கு முன்பாக நாம் எப்படி இருக்கிறோம்? படிப்பையும் அந்தஸ்தையும் அதிகாரத்தையும் மனதில் கொண்டு பெருமையுடன் காணப்படுகிறோமா? இல்லை, மண்ணுலகில் வந்துதித்த இரட்சகரைப் போல தாழ்மையாய் காணப்படுகிறோமா? அது மட்டுமல்ல இயேசு கிறிஸ்து நன்மை செய்கிறவராய் சுற்றித்திரிந்தார் (அப். 10:38). வழியில் குற்றுயிராய் இருந்த வழிப்போக்கனைக் கண்டு விலகிச் சென்ற ஆசாரியனையும் லேவியனையும் போல் அல்லாமல் நல்ல சமாரியனாய் மனமுவந்து உதவி செய்ய மனதுள்ளவர்களாய் இயேசுவைப் போல் நாம் காணப்பட பிரயாசப்படுவோம்.
- Mrs. ஜாஸ்மின் பால்
ஜெபக்குறிப்பு:
வேதாகமக் கல்லூரி மாணவர்கள் தங்க கட்டப்படும் அறைகள் விரைவாக கட்டி முடிக்கப்பட; தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250