By Village Missionary Movement
Thursday, 25-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 25-11-2021
காத்திருக்கும் களிமண்
“...கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர்,…” – ஏசாயா 64:8
கலைத்திறமை மிக்க குயவன் ஒருவன் அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த மண்ணாலான பொருட்களை மிக நுட்பமாக செய்து கொண்டிருந்தான். களிமண்ணை காலால் மிதித்து, பிசைந்து, பக்குவப்படுத்தி திருகையில் வைத்து வடிவம் கொடுக்கும்போது, தான் விரும்பிய வடிவம் கிடைக்காதபடியினால், மீண்டும் மீண்டும் அதை சரிப்படுத்தி தான் விரும்புகிற வடிவம் வருகிறவரை முயற்சி செய்து கொண்டே இருந்தான். ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பகுதி வளைந்தும், நெளிந்தும், கோணலாகவும் காணப்பட்டது. ஆனாலும் சற்றும் மனம் தளராமல் முயற்சியையும் கைவிடாமல் உறுதியாக இருந்தான். அவன் சிறிது நேரம் இளைப்பாறச் சென்றிருந்தபோது அவனால் செய்யப்பட்ட பிற பாத்திரங்களும், குடுவைகளும், பூந்தொட்டிகளும் ஏளனமாக திருகையில் உள்ள மண் வடிவத்தைப் பார்த்து சிரித்தன. அதுமட்டுமல்ல அவைகள், “நாங்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள், எவ்வளவு விரைவில் மிக அழகிய பயனுள்ள பாத்திரமாக நாங்கள் வனையப்பட்டு விட்டோம். ஆனால் நீயோ பலமுறை முயற்சி செய்தும் ஒன்றுக்கும் பிரயோஜனம் இல்லாமல் இருக்கிறாயே” என்று கேலி செய்தன.
திருகையில் உள்ள மண்ணிற்கு வருத்தம் ஏற்பட்டாலும் “நான் என் எஜமானன் கையில் இருக்கிறேன்; அவர் விரும்புகிறபடி வனைய என்னை ஒப்புக் கொடுக்கிறேன்” என்று அமைதியாக இருந்தது. மீண்டும் அந்த குயவன் வந்து தன்னுடைய மனதில் நியமித்த உருவம் வருகிற வரை வனையத் தொடங்கி, அழகிய வேலைப்பாடுகளை அதில் செய்து, கண்களை கவரக்கூடிய அழகிய குடுவையாக வனைந்தான். அரண்மனை வேலையாட்கள் சில பொருட்களை குயவனிடமிருந்து வாங்கி, அரண்மனை தோட்டத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்தனர். அந்நேரம் அரண்மனை உப்பரிகையில் உலாவிக் கொண்டிருந்த மன்னர் அந்த அழகிய குடுவையைக் கண்டு, தன்னுடைய அறையில் தான் மட்டும் பயன்படுத்தும்படி கொண்டு வரச்சொன்னார். ஏளனம் செய்த மற்ற பாத்திரங்கள் இதை பிரமிப்புடன் கண்டன.
இதேப்போலத்தான் யோசேப்பு பார்வோனுக்கடுத்த ஸ்தானத்திலும், எகிப்து தேசம் முழுமைக்கும் அதிகாரியாவதற்கு முன்பாக அவன் கடந்து வந்த பாதைகளும், உருவாக்கப்பட்ட விதமும் வித்தியாசமானது. வேதனையில் உழன்ற காலங்கள் எத்தனையோ! ஆனாலும் தேவன்மேல் வைத்த நம்பிக்கையில் தான் உருவாக்கப்படும் விதமாக தன்னை அவர் கரங்களில் ஒப்புக்கொடுத்து, அனைவருக்கும் பிரயோஜனமான பாத்திரமாக மாறினானே! நாமும்கூட நம் வாழ்க்கையை பரம குயவனாகிய இயேசுவிடம் ஒப்படைக்கும்போது நம்மைக் குறித்த அவரின் திட்டம் நிறைவேற நம்மை வனைந்து, பயனுள்ள பாத்திரமாக நம்மை மாற்றுவார்.
- Mrs. வசந்தி ராஜமோகன்
ஜெபக்குறிப்பு:
பள்ளிகளுக்கு செல்லும் மிஷனெரிகளின் பிள்ளைகளை தேவன் எந்த வைரஸ் தாக்குதலும் ஏற்படாத வண்ணம் பாதுகாக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250