By Village Missionary Movement
Tuesday, 16-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 16-11-2021
முன்னுரிமை
“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” - மத்தேயு 6:33
ஸ்காட்லாந்தை சேர்ந்த எரிக்லிடல் என்னும் வாலிபர் தன்னை சீனாவுக்கு மிஷனெரியாக செல்ல அர்ப்பணித்திருந்தார். இவர் கால்பந்து வீரனாகவும், ஓட்டப்பந்தய வீரனாகவும் சிறந்து விளங்கினார். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எரிக் நிகழ்த்திய சாதனையை இங்கிலாந்தில் 35 வருடங்களுக்கு யாராலும் முறியடிக்க முடியவில்லை. 1924-ம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இவருக்கு கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஓட்டப்பந்தயத்திற்கான தேர்வு ஓட்டம் ஒரு ஞாயிற்றுக் கிழமைக்கு குறிக்கப்பட்டிருந்தது. எரிக் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைக்கு செல்ல வேண்டும் என்பதால் ஓட மறுத்து விட்டார். உலகின் புகழை சம்பாதிப்பதைவிட தேவனுக்கு கீழ்ப்படிவதே சாலச் சிறந்தது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். இவருடைய இந்த செயலை தேவன் கனம் பண்ணினார். எப்படியெனில், மூன்று நாட்களுக்குப் பின் நடந்த அந்த ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் சிறப்பாக வெற்றி பெற்று உலக சாதனை நிகழ்த்தினார்.
இயேசு கிறிஸ்து தன்னுடைய மலை பிரசங்கத்தில் முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் என்று சொல்கிறார். நாம் இயேசுவுக்கு கீழ்ப்படிந்து அவருடைய ராஜ்யத்தை முதலாவது தேடுவதற்கு நம்மை ஒப்புக்கொடுத்து வாழ கற்றுக்கொள்வோம் என்றால் அவர் நமது வாழ்க்கைப்பாதை சீரடையத் தேவையான எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வார்.
இதை வாசிக்கிற நாம் நம் தேவனுக்கு எப்படி முதலிடம் கொடுக்கிறோம்? எத்தனை நாட்கள் சிறு சிறு காரியங்களை சாக்குப்போக்காகக் காட்டி சபை ஆராதனைகளை புறக்கணித்திருக்கிறோம்! சிலரது வாழ்க்கையில் இடறல்கள், போராட்டங்கள், பாடுகள், துன்பங்கள் வந்தாலொழிய மற்ற எவ்விதத்திலும் தேவனை தேடுகிற உணர்வே அவர்களுக்கு வருவதில்லை. அவர்கள் முதலிடம் கொடுப்பது சமுதாய அந்தஸ்திற்கும் ஐசுவரிய வாழ்விற்குமே! நாம் தேவனுக்கு முதலிடம் கொடுத்து வாழ்வோம். தம்மை கனம் பண்ணுகிறவர்களை கனம்பண்ணும் தேவன் நம்மையும் கனப்படுத்துவார்!
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
நமது கெத்செமனே வளாகத்தில் நடைபெறும் கட்டுமானப் பணிக்கான பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250