By Village Missionary Movement
Friday, 12-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 12-11-2021
சீர்கேடு
“உன் கால் நடையைச் சீர்தூக்கிப் பார்... உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.” - நீதி.4: 26, 27
பிரான்ஸ் தேசத்தில் பெரும் புரட்சியை உண்டுபண்ணின நெப்போலியனுக்கு பெருந்தீனி என்ற ஒரு சீர்கேடு இருந்தது. முக்கியமான யுத்தமாகிய “வாட்டர்லூ” என்ற இடத்திலே ஆங்கிலேயப் படைகளை சந்திக்கப் போகும்முன்பு அவருக்கு முன்பாக மாட்டு இறைச்சியையும், உருளைக்கிழங்கையும் வைத்திருந்தார்கள். கட்டுப்பாடின்றி சாப்பிடத் தொடங்கினவர் சுறுசுறுப்பாக செயல்பட முடியாமல், யுத்தத்தில் தோல்வியடைந்தார். செயின்ட் செலினா என்ற இடத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சீர்கேடு என்பதற்கு ஒழுங்கீனம், நிலைகுலைவு என்பது பொருளாகும். எச்சரிப்பே இல்லாமல் மனம் போன போக்கில் ஏனோதானோ வென்று வாழ்கின்றவர்களை இந்த சீர்கேடு திடீரென்று பிடிக்கின்றது. சிலருக்கு குடி, சிலருக்கு டெலிவிஷன் முன்பாக உட்கார்ந்து நேரத்தை வீணடிப்பது, இப்படி ஏனோதானோவென்று இருந்தால் முடிவிலே இது கண்ணீருக்குள் நம்மை நடத்திச் சென்றுவிடும். தேவனுடைய அன்பை விட்டு நம்மை பிரித்துவிடும்.
ஆதியாகமம் 3-ம் அதிகாரத்தில் ஏவாளின் சீர்கேடு முழு மனித குலத்திற்கும் அழிவைக் கொண்டு வந்தது. நோவாவின் காலத்தில் உலகத்திலிருந்த சீர்கேட்டினிமித்தம் அழிவு உண்டானது. ஆனால் அன்று வாழ்ந்த ஜனங்களுக்குள்ளே நோவா நீதிமானாக, உத்தமனாகக் காணப்பட்டார். தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நோவா செய்துமுடித்தான் என்று வேதம் கூறுகிறது.
பிரியமானவர்களே! “நான் உங்கள் சீர்கேட்டைக் குணமாகுவேன்” என்று (ஓசியா14:4) கர்த்தர் நமக்கு வாக்குத்தத்தம் தந்துள்ளார். தேவசமுகத்தில் அமர்ந்து ஆராய்ந்து பார்த்தால் நம்மிடம் காணப்படும் சீர்கேடுகளைக் கர்த்தர் வெளிப்படுத்துவார். நம்முடைய பாவத்தையும், அக்கிரமத்தையும் தம்முடைய இரத்தத்தாலே கழுவி சுத்திகரிக்கிறார். அவரண்டை திரளான இரக்கங்கள் உண்டு. அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார். ஒரு நிமிடம் உங்களை சீர்தூக்கிப் பார்ப்பீர்களா? சீர்கேடுகளைத் தீர்மானமாய் அகற்றுவீர்களா? இன்றைக்கு உங்களை சீர்படுத்திக் கொண்டால் கர்த்தர் ஆசீர்வாதமான வாழ்க்கையை உங்களுக்குத் தருவார்.
- Mrs. ஜெபக்கனி சேகர்
ஜெபக்குறிப்பு:
பணித்தளங்களில் ஊழியம் செய்யும் தோழமை ஊழியர்களுக்கு இரு சக்கர வாகனம் தேவையாக உள்ளது. உதவும் உள்ளங்கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250