By Village Missionary Movement
Wednesday, 10-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 10-11-2021
இரு கோட்டுக்கு இடையில்
“...பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்.” – பிலிப்பியர் 3:14
பென்னி ஷெப்பர்ட் தனது 13-வயதில் முதுகுத்தண்டு முறிந்து சிறிது நேரம் கூட நிற்கவும், நடக்கவும் முடியாமல் தீராத வலியினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் திருமணமும் முடிந்து இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தாயான நிலையிலும் தன்னுடைய வேலையைத் தானே செய்ய முடியாதபடிக்கு பிறருடைய உதவியை எதிர்பார்த்து வாழவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் மிகுந்த வேதனையுடன் ஜெபித்த வேளையில், “அற்புதத்தைத் தேடி ஓடு” என்று தன்னோடு பேசுகிற சத்தத்தைக் கேட்டாள். திட்டவட்டமாக இது தேவனின் குரல் என்பதை அறிந்துகொண்டு, அதற்கு கீழ்ப்படிய முடிவு செய்தாள். அவள் ஒரு ஓட்டப்பந்தய வீராங்கனையாக இல்லாதபோதிலும் 26.2 மைல் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்ள தீர்மானித்தாள். ஆனால் அவளுக்கிருந்த வலியில் நடப்பதே கஷ்டம்; ஓடுவது எப்படி சாத்தியமாகும்? ஆனாலும் தேவனின் அற்புதத்தை அவள் பெற விரும்பி மருத்துவரே பயிற்சியாளராகவும் மாறினதால் 6 மாதம் கடினமாக பயிற்சி மேற்கொண்டாள்.
24,000 பேர் கலந்து கொண்ட அந்த போட்டியில் துவக்க கோட்டில் வந்து நின்ற பொழுது 28 வருடமாக அவளுக்கு இருந்த முதுகுத்தண்டு வலி அவளை விட்டு நீங்கியது. 7 மணிநேர ஓட்டப்பந்தயத்தில் ஓடும்போது மிகுந்த சோர்வுற்று களைப்படைந்த வேளையிலும் இறுதிக்கோட்டை எப்படியாகிலும் தொட வேண்டும் என்ற வாஞ்சையுடன் தன் கைகளில் தன்னை உற்சாகப்படுத்த தன்னுடைய பிள்ளைகள் எழுதியிருந்த வேதவாக்கியங்களை வாசித்தார். “அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள்; நடந்தாலும் சோர்வடையார்கள்” என்ற வார்த்தை அவரை பெலப்படுத்தியது. இறுதியில் ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டபொழுது அவருடைய இரண்டு பெண் பிள்ளைகள் தோள்கொடுத்து உதவ முன்வர, இறுதிக்கோட்டை கண்டு, முன்னேறி, அவைகளில் தன் கால்களை பதிக்கும்போது தேவ வல்லமையால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டாள். பரிபூரண சுகத்தையும் பெற்றுக்கொண்டாள். விசுவாசம், கீழ்ப்படிதல், விடாமுயற்சி இவைதான் அற்புதத்தை கொண்டுவந்தது. இறுதிக்கோட்டில் அல்ல, தேவனுக்கு கீழ்ப்படிந்து துவக்ககோட்டில் கால் வைத்த பொழுதே அற்புதத்தை பெற்றுக் கொண்டவளாக ஓடத் துவங்கினாள்.
சூசானில் ராஜாவின் பானபாத்திரனாயிருந்த நெகேமியா தன் சொந்த தேச மக்களின் வேதனைகளைக் கேட்டும், எருசலேமின் அலங்கமும், மதிலும் இடிந்து பாழான நிலையைக் கேட்டும் செய்வதறியாமல் கலங்கி தவிக்கிறவனாக காணப்படாமல், தேவ தரிசனங்களையும் திட்டங்களையும் பெற்றுக் கொள்கிறவனாகவும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ராஜாவிடம் அனுமதியையும், உதவியையும் வாங்கிக்கொண்டு எதிர்ப்புகளின் மத்தியிலும் முன்வைத்த காலை பின் வைக்காமல் அலங்கத்தை கட்டி முடிக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்தோடு ஜனங்களையும் இசைவாய் கூட்டிச் சேர்த்து, குறிக்கப்பட்ட 52 நாளில் தேவ தரிசனத்தையும் தேவ திட்டத்தையும் நிறைவேற்றி முடித்தவனாகவும் காணப்பட்டான்.
சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும், மனிதர்களும் எதிராக காணப்பட்டாலும் நாம் இலக்கை நோக்கி அடைந்தே தீர வேண்டும் என்ற லட்சியத்தோடு தேவ ஒத்தாசையோடும், விடா முயற்சியோடும் தைரியமாக முன்னேறிச் செல்லும்போது, இலக்கை அடைந்தவர்களாக வெற்றியின் கனியை ருசிபார்க்க முடியும்.
- Mrs. வசந்தி ராஜமோகன்
ஜெபக்குறிப்பு:
தோழமை ஊழியர்கள் பணிசெய்யும் ஆலயமில்லாத கிராமங்களில் ஆலயம் கட்டப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250