By Village Missionary Movement
Monday, 08-Nov-2021இன்றைய தியானம்(Tamil) 08-11-2021
உண்மையுள்ள மனுஷன்
“உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்;…” - நீதி. 28:20
கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! நாம் கிறிஸ்துவுக்கும், தேவன் நமக்குக் கொடுத்த குடும்பத்திற்கும் நாம் வகிக்கும் பொறுப்பிலும் உண்மையுள்ளவர்களாய் இருக்க அழைக்கப்படுகின்றோம். உதாரணமாக ஆபிரகாம் தேவனுக்கு முன்பாக உண்மையாக இருந்து அனைத்து ஆசீர்வாதங்களையும் பெற்றுக் கொண்டார்.
அதுபோல மோசேயைக் குறித்து தேவனே எண். 12:7-ல் சாட்சி கொடுக்கிறார். இன்று மோசே எந்தெந்த காரியத்திலெல்லாம் உண்மையாய் இருந்தார் என்பதைப் பார்ப்போமா?
முதலாவதாக, குடும்பத்தில் உண்மை உள்ளவராக இருந்தார். யாத்.4:18-ல் தேவன் மோசேயை இஸ்ரவேல் ஜனங்களை அழைத்துச் செல்லக் கூறியபோது, மோசே தன் வீட்டிற்கு சென்று தன் மாமனிடம் உண்மையைக் கூறி விடைபெற்றுச் செல்கிறார். தன்னுடைய மனைவி, பிள்ளைகளிடமும் உண்மையாக இருந்தார். இன்றைக்கு எத்தனையோ குடும்பத்தில் உண்மை இல்லாமல் இருக்கிறது. கணவன்-மனைவி இடையே உண்மை இல்லை. நம்முடைய வாழ்வில் நாம் பரிபூரண ஆசீர்வாதத்தைப் பெற விரும்பினால் முதலாவது குடும்பத்தில் உண்மையாய் இருப்போம்.
இரண்டாவதாக, வேலையில் உண்மையுள்ளவராக இருந்தார். மோசே, தேவன் தனக்கு கொடுத்த அழைப்பில் கடைசி மட்டும் உண்மையாய் இருந்தார். இஸ்ரவேல் ஜனங்களுக்காக, ஜீவ புஸ்தகத்தில் இருந்து தன்னுடைய பெயரை கிறுக்கிப் போடச் சொன்னார். ஆம், தேவன் நமக்குக் கொடுத்த வேலை எதுவாக இருந்தாலும் உண்மையாக இருப்போம். ஒரு வேளை நமக்குப் பிடிக்காத, நாம் எதிர்பார்க்காத வேலையாகக்கூட இருக்கலாம். ஆனால் அந்த வேலையை நமக்கு கொடுத்தவர் தேவனே! ஆதலால் அந்த பணியில் நாம் உண்மையாய் இருப்போம்.
பிரியமானவர்களே! உண்மையுள்ளவன் என்று எண்ணி கனமான ஊழியத்தை ஆண்டவர் மோசேக்கு கொடுத்தார். அதை மோசேயும் அப்படியே காத்துக்கொண்டார். நம்முடைய வாழ்வு எப்படி இருக்கிறது? உலகத்தில் நமக்கு கொடுக்கப்பட்ட சிறு சிறு காரியங்களில் நாம் உண்மையோடிருக்கிறோமா? சிந்தித்து பார்ப்போம். கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களுக்கே அநேகத்தின் மேல் அதிகாரியாகும்படி பொறுப்பு கொடுக்கப்படுகிறது. நாமும் தேவன் சாட்சி கூறும் வண்ணம் நம் ஜீவிய காலமெல்லாம் உண்மையாய் இருப்போம்.
- D. திவ்யா அலெக்ஸ்
ஜெபக்குறிப்பு:
மோட்சப் பயணம் மாத இதழ் அச்சடிக்க தேவையான பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250