By Village Missionary Movement
Saturday, 02-Jan-2021இன்றைய தியானம்(Tamil) 02-01-2021
நீங்கள் யார்?
“உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; ….நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.” – யோவான் 14: 1-3
“If you” என்ற ஆங்கில கவிதைகளடங்கிய புத்தகத்தில் பரலோகத்தில் நடைபெறும் சம்பாஷணைகள் எழுதப்பட்டிருக்கும். அதில் ஒருவர் தான் கண்ட கனவில் வெளிச்சம் நிறைந்ததும் பளிங்கு போன்ற தண்ணீர்கள் சலசலவென்று ஓடுவது போன்ற ஓரிடத்தில் அமர்ந்திருப்பதாக கண்டார். அப்பொழுது அவருடைய முதுகுக்குப் பின்னால் ஒருவர், “சகோதரனே கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்றார். “நீங்கள் யார்? உங்களை நான் பார்த்ததாக ஞாபகம் இல்லையே” என்றார் முதல் நபர். “இல்லை, ஒருமுறை என்னை பார்த்திருக்கிறீர்கள். எங்கள் தெருவில் நீங்கள் வந்து கொடுத்த சுவிசேஷப் பிரதியை வாசித்ததினாலேதான் இயேசுவை அறிந்து கொண்டு இரட்சிக்கப்பட்டேன். இன்றைக்கு நான் பரலோகில் இருப்பதற்கு முக்கிய காரணம் நீங்கள்தான்” என்றாராம். இதேபோல் அடுத்தடுத்ததாக ஒவ்வொருவராய் வந்து நாங்கள் பரலோகில் இருப்பதற்கு காரணமே நீங்கள்தான் எனக் கூறினார்களாம்.
ஆம், அப்போஸ்தலனாகிய பவுலும் கொரிந்து சபைக்கு எழுதும்போது, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, கர்த்தருடைய கிரியையிலே எப்போதும் பெருகுகிறவர்களாயிருங்கள் (1கொரி.15:58) என்கிறார். நாம் ஆண்டவரின் ராஜ்ய விருத்திக்காக செய்யும் வேலை சிறியதோ, பெரியதோ எதுவும் வீணாவதில்லை, நிச்சயம் பலன் உண்டு. நாம் பரலோகத்திற்கு செல்லும்போது மேற்கண்ட அனுபவத்தை நாம் ஒவ்வொருவரும் சந்திக்கப்போகிறோம் என்பதை விசுவாசியுங்கள். ஆகவே நீங்கள் செய்யும் ஊழியமாக இருக்கட்டும் அல்லது ஆண்டவருக்காகச் செய்யும் எந்தவொரு காரியமாக இருக்கட்டும் அதில் நீங்கள் சலிப்படைய வேண்டாம். நீங்கள் யாருக்கெல்லாம் இயேசுகிறிஸ்துவின் அன்பைப் பற்றி சொன்னீர்களோ, மருத்துவமனை சென்று சுவிசேஷம் கூறி ஜெபித்தீர்களோ அவர்களையெல்லாம் ஒரே நாளில் பரலோகத்தில் சந்திக்கப்போகிறீர்கள் என்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.
நல்லது உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே என எஜமான் நம்மை கனப்படுத்தி நம் சிரசில் கிரீடம் சூட்டும் நாள் வெகு அருகில் உள்ளது. நமக்கு கொடுக்கப்படும் கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு முத்துக்களும் ஒவ்வொரு ஆத்துமாக்களைக் குறிக்கிறது. உங்களுக்கு முகமறியாதவர்களும், நீங்கள் மறந்துபோன அநேக ஆத்துமாக்களும் உங்களை சந்திக்கப் போகிறார்கள். ஒவ்வொருவரிடமும் நீங்கள் யார்? என்று கேட்கும்போது உங்கள் ஊழியத்தின் பிரயாசத்தின் பலனாகிய ஆத்தும கனிகள் என்பார்கள். அந்த நாள் வெகு சமீபமே! அல்லேலூயா!
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
புதிய மிஷனெரிகளை உருவாக்கும் ஆண்டாக அனுசரிக்கப்படும் இவ்வருடத்தில் அநேக ஊழியர்கள் உருவாக்கப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250