Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்P(Tamil) 19-08-2021
Share:

By Village Missionary Movement

Thursday, 19-Aug-2021

இன்றைய தியானம்(Tamil) 19-08-2021

 

பரம குயவனின் விருப்பம் 

 

“கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்;…” - ஏசாயா 40:31

 

களிமண் குவிந்திருந்தது குயவனின் கண்முன்! ஒவ்வொருமுறை குயவன் நெடுநாளாய் அதைக் காணும்போது அவன் சிந்தையில் தோன்றுவது, “இதைக் கொண்டு நான் வனையும் பாத்திரம் இதுவரை என் கரங்களினால் வனையப்பட்ட பாத்திரங்களை விட இதில் புதிய விதமான வர்ணங்களையும், புதிய வடிவங்களையும் அமைத்து இதுவரையிலும் யாரும் கண்டிராததும், உபயோகித்திராததுமான வினோதமான தரமுள்ள ஒரு பாத்திரமாய் உருவாக்க வேண்டும்” என்று தனக்குள் சிந்திப்பான்.     

 

ஆனால் குயவனின் திட்டமறியாமல், மறுபுறம் களிமண் எண்ணியது, “நான் நெடுநாளாய் இவ்விடத்திலே குவிந்து கிடக்கிறேன். அடிக்கொருமுறை குயவன் என்னைக் கண்டும் காணாதவர் போல செல்கிறதென்ன? என்னை ஒரு செம்பு வடிவில் செய்து மற்றவர்களிடம் கொடுத்தால் கூட நான் தண்ணீர் குடிப்பதற்காவது பயனாய் மாறுவேன். நீண்ட காலமாய் இந்த இடத்திலே கிடந்து நான் சோர்ந்து போனேனே. நான் இவ்விடத்திற்கு வந்து அநேக நாளாகியும் கூட எனக்கு பின் வந்த அநேக புதிய களிமண் குவியல்கள் வனையப்பட்டு பயனடைந்துகொண்டிருக்கிறதே! ஏன் எனக்கு மட்டும் இந்நிலைமை! எப்போது என் நிலைமை மாறும்? இவ்விடத்தை விட்டு என்று நான் வேறு இடத்திற்குச் செல்வேன்? என் எதிர்காலம் எப்படி இருக்கும்? இவ்விடத்திலே கிடந்து என் வாழ்க்கை முடிந்து விடுமோ?” என்று ஒவ்வொரு நொடிப்பொழுதும் எண்ணியது. 

 

ஆம், நீங்களும் “தாமதம்” என்ற காரணத்தால் தளர்ந்து போயிருக்கிறீர்களா? களிமண் குவியலைப்போல ஆண்டவரிடம் மன்றாடும் அனுபவத்தில் இருக்கிறீர்களா? எதிர்பார்த்த காலம் முடிந்துபோனது போல தோன்றுகிறதா? உடனிருந்த அநேகர் இடம்மாறி வேறு மேன்மையில் சென்றுவிட்டார்களா? கவலை வேண்டாம், உங்களுக்கு ஒரு நல்ல வார்த்தை, “நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம் போல் இருக்கும்” (நீதி. 13:12). களிமண் குவியலானது தனக்குத்தானே ஒரு எல்லையை வைத்துக்கொண்டு அதன்படி தன்னை வனையும்படி விருப்பம் கொண்டது, மற்ற களிமண் குவியல்கள் கடந்துபோன வழியிலே தானும் போக வேண்டும் என்று நினைத்து சோர்வுக்குள்ளானது. ஆனால் குயவனின் எண்ணத்தையும், விருப்பத்தையும் பார்த்தீர்களா? அது மேன்மையாக இருந்தது. இந்த மேன்மையான எண்ணங்களை களிமண்ணால் புரிந்துகொள்ள முடியவில்லை. 

 

இதேபோலத்தான் நம்முடைய பரம குயவனாகிய ஆண்டவர் நம்மையும் பத்தில் ஒன்று பதினொன்றாக இருக்க அல்ல, என் மகன், மகள் மற்றவர்களைவிட மேன்மையாக, வித்தியாசமாக, வேறுபட்டவர்களாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். ஒரு வேளை இந்தத் தாமதம், காத்திருப்பு என்ற பாதை உங்களை இளைக்கச்செய்திருக்கலாம். ஆனால் வேதம் சொல்லுகிறது, “கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்;” ஆகவே என் விருப்பம் அல்ல, உம் விருப்பம் என் வாழ்வில் நிறைவேறட்டும் என்று சொல்லி அவருக்காய், அவருடைய வேலைக்காய், அவருடைய நேரத்திற்காய் காத்திருங்கள். நிச்சயமாகவே முடிவு உண்டு அதிவிரைவில்!

- Bro. ஜெபின்  

 

ஜெபக்குறிப்பு: 

நாம் கிராமங்களில் சந்தித்து வழிநடத்தின சிறுவர்கள், வாலிபர்கள் கர்த்தருக்குள் நிலைத்திருக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al