By Village Missionary Movement
Tuesday, 10-Aug-2021இன்றைய தியானம்(Tamil) 10-08-2021
இப்பொழுதாவது வந்தீர்களே
“... அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;” – மத்தேயு 9:37
வட இந்தியாவின் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் முதன் முறையாக ஒரு நற்செய்தி கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிந்தவுடன் 82 வயதான அம்மா ஒருவர் மேடைக்கு வந்து, “ஐயா! இப்பொழுதாவது வந்தீங்களே?” என்று ஊழியரின் கரங்களைப் பிடித்து முத்தமிட்டு 75 வருடங்கள் நான் வடித்த கண்ணீருக்கு இன்று பதில் வந்துவிட்டது என்று அழுதுகொண்டே கூறினார்கள். காரணம் கேட்டதற்கு அவர், “என்னுடைய ஐந்து வயதில் என்னுடைய பெற்றோர் திருவிழாவுக்கு அழைத்துச் சென்று என்னை தவற விட்டு விட்டனர். நான் அழுது கொண்டிருந்ததைப் பார்த்த ஒருவர் என்னைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று உணவு கொடுத்து 2 வருடங்கள் தன் பிள்ளைகளோடு என்னை வளர்த்தார். அவர் அடிக்கடி “இயேசுன்னு ஒருத்தர் இருக்காரு, அவர்தான் உன்னை நேசிப்பாருன்னு” சொல்லிக்கிட்டே இருப்பாரு. அந்த ஏழு வயசுல எனக்கு ஒன்னும் புரியல. திடீரென்று அவரும் இறந்து போனார். வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நான் பிச்சை எடுத்தும், சின்ன வேலைகளை செய்தும் வாழ்ந்து வந்தேன்.
பள்ளியில் மாணவர்கள் படிப்பதைப் பார்த்து ஆசைப்பட்டு உள்ளே போக வழியில்லாமல் வெளியில் நின்றே சத்தத்தைக் கேட்டு படிக்கவும் கற்றுக் கொண்டேன். 19 வயதில் திருமணமும் முடிந்து இரண்டு பிள்ளைகளையும் பெற்று அவர்கள் இருவரையும் ஒரே நாளில் பறிகொடுத்த நிலையும் ஏற்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை 75 வருடமாக ஒவ்வொரு நாளும் கொஞ்ச நேரமாவது கண்ணீர் வடித்து அந்த இயேசுவைப் பற்றி அறிந்து கொள்ளவும், காணவும் ஆசைப்பட்டு அழுது கொண்டே இருப்பேன். எங்க ஊருக்கு இயேசுன்னு சொல்லி யாராவது வருவாங்களா? என்று எதிர்பார்த்தேன். ஆனால் இன்று 75 வருடமாக நான் தேடின காணவிரும்பிய இயேசுவைக் கண்டு கொண்டேன். நீங்க எங்க ஊருக்கு வந்து “இயேசு நல்லவர்” என்று சொன்ன வார்த்தையைக் கேட்டவுடன் என் உள்ளம் உடைந்தது. என் கண்ணீருக்கு பதிலும் கிடைத்தது. நான் இப்போது என் இயேசுவுக்கு சொந்தம். பரலோகம் எனக்குச் சொந்தம்” என்று சந்தோஷத்துடன் சொன்னார்கள்.
2000 வருடங்களுக்கு முன்பாக இயேசு கிறிஸ்துவின் அன்பை சுமந்து வந்த தோமா இந்தியாவில் இயேசுவின் சுவிசேஷத்தை ஜனங்கள் அறிய காரணமாக இருந்தார். அதினால் நாம் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டோம். நாம் எப்படி இருக்கிறோம்? நம்மைச் சுற்றிலும் இயேசுவின் அன்பை அறியாத ஜனங்கள் உண்டு; இயேசுவைப் பற்றி கேள்வியேபடாத ஜனங்களும் உண்டே. மேற்கண்ட அந்த மூதாட்டியைப் போல இயேசுகிறிஸ்துவைப் பற்றி அறிய விரும்புவோரும் உண்டு. ஆனால் நாம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் நம் வேலை, குடும்பம் என்று ஒரு வட்டத்துக்குள்ளேயே சிக்கிக் கொண்டிருக்கிறோம். எத்தனை ஜனங்கள் கொள்ளை நோயிலும், விபத்திலும் சிக்கி இயேசுவை அறியாமல் ஒவ்வொரு நாளும் மடிந்து கொண்டிருக்கிறார்கள். தேசம் இயேசுவை அறிந்து கொள்ள அர்ப்பணிக்கப்பட்ட மனதுடனும், ஆத்தும தாகத்துடனும் இயேசுவை சுமந்து செல்ல ஆட்கள் தேவை. ஒப்புக்கொடுப்பீர்களா? “75 வருடங்களாக காத்திருந்தேன். இப்பொழுதாவது இயேசுவைப் பற்றிச் சொல்ல வந்தீங்களே” என்ற தாயின் சத்தம் நம் காதுகளில் ஒலிக்கட்டும்.
-Mrs. வசந்தி ராஜாமோகன்
ஜெபக்குறிப்பு:
இராக்லாந்து வேதாகமக் கல்லூரி மாணவர்கள் ஆவிக்குரிய வாழ்வில் இன்னும் வளர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250