By Village Missionary Movement
Monday, 09-Aug-2021இன்றைய தியானம்: 09-08-2021
மாறாத அழைப்பு
“தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.” - ரோமர் 11:29
அமெரிக்காவின் நியூஜெர்சியில் 1270-ம் ஆண்டு பாய்மரக்கப்பல் ஒன்று கடற்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் அநேகர் மாண்டனர். உயிர்தப்பிய ஒரு சிலரில் மரே என்ற குருவானவர் ஒருவர். இதில் அவரது மனைவி, பிள்ளைகள் எல்லாரும் மரித்துவிட்டார்கள். ஒரு புதிய தீவில் கரை சேர்ந்த அவரால் அந்த துயர சம்பவத்தை தாங்கமுடியவில்லை. நான் அனாதை ஆவதற்கு ஆண்டவர்தான் காரணம் என்று ஆண்டவரை மறுதலித்து, அப்புதிய தீவில் வாழ்நாளை கழிக்கவும், மனம் போல் வாழவும் தீர்மானித்தார்.
மறுநாள் மனதில் மிகவும் கலக்கம் நிறைந்தவராய் தெருவில் சென்றபோது ஒரு மனிதன் எதிர்ப்பட்டான். அவன் அவரை நோக்கி, “உமக்காகத் தான் காத்துக்கொண்டிருக்கிறேன்” என்றான். “என்னை உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார். “ஐயா, இயேசுவைப் பற்றி நான் சிறிது அறிந்து வைத்துள்ளேன். என் மனைவி வேத வசனங்களை வாசித்து எனக்கு சொல்லுவாள். எனது வீட்டில்தான் சபையாக கூடி ஆண்டவரை ஆராதிக்கிறோம். ஆனால் வேதத்தைப் பற்றி போதிக்கவோ, பிரசங்கிக்கவோ யாரும் கிடையாது. ஆகையால் எங்களோடு நிலையாக தங்கி இருந்து ஊழியம் செய்யும் போதகரை தாரும் என நீண்ட நாட்களாக ஜெபித்து வந்தோம். இரண்டு நாட்களுக்கு முன்பு எங்கள் சபையில் ஒருவருடைய தரிசனத்தில் கப்பற்சேதத்தில் தப்பி பிழைக்கும் குருவானவர் ஒருவரை உங்களுக்கு ஊழியராக அனுப்பியுள்ளேன் என இயேசு கிறிஸ்து வெளிப்படுத்தினார். அதேபோன்று நீங்கள் வந்துள்ளீர்கள்” என்றான். மரே கர்த்தருடைய வழிநடத்துதலை அறிந்து அங்கேயே தங்கி பணிசெய்தார். தனக்கு வந்த பாடுகள், பிரச்சனைகளின் காரணத்தை இந்த தேவமனிதரால் அந்த பாடுகளின் நேரத்தில் அறிந்து கொள்ளமுடியவில்லை. ஆனால் அவற்றின் மத்தியிலும் தேவன் அவரை அழைத்த அழைப்பில் உறுதியாயிருந்து தேவனுடைய ஊழியத்தை நிறைவேற்றினார்.
இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! நம் வாழ்விலும் இயேசுவை ஏற்றுக்கொண்ட பின்பு சில பாடுகள், தீங்கான காரியம், இழப்புகள், சேதங்கள் ஏற்படலாம். ஆனால் அவைகள் எதுவும் தேவனுக்குத் தெரியாமல் வருவதில்லை. கிருபையின்படியே நம் ஒவ்வொருவரையும் தேவன்தான் தெரிந்தெடுத்து அழைத்துள்ளார். இருப்பினும் நம் வாழ்வில் நமக்குள்ள சூழ்நிலைகளைக் கண்டு பின்வாங்கலாம், ஆனால் நம்மை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். அவருடைய அன்பு ஒன்றே மாறாது. அவருடைய அழைப்பில் நிலைத்திருப்போம். சகலத்தையும் அவர் நன்மைக்கு ஏதுவாக நடத்துவார்.
-Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
Lockdown காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் வீடுகளில் இருக்கும் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250