By Village Missionary Movement
Thursday, 05-Aug-2021இன்றைய தியானம்(Tamil) 05-08-2021
காத்துக்கொள்
“எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.” – நீதிமொழிகள் 4:23
அநேக ஆண்டுகளுக்கு முன் ஒரு நாடக நடிகர் ஒருவர் அமெரிக்க தேசத்திற்கு சென்றார். சில மாதங்கள் அங்கு தங்கியிருந்து தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். விரைவிலேயே அவருக்கு பெயரும், புகழும், சம்பாத்தியமும் கிடைத்தது. கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் வரை சம்பாதித்துவிட்டார். இந்தப் பணத்தை பத்திரப்படுத்த வேண்டும் என்று நினைத்து ஒரு வைரத்தை வாங்கினார். அந்த வைரத்தை தன்னுடைய பையில் கவனமாக வைத்துக் கொண்டார். விமானமில்லாத அக்காலத்தில் கப்பலில் தான் பயணம் செய்யமுடியும். இந்தியாவிற்கு வர குறைந்தது இரண்டு மாதங்களாவது ஆகும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கும்போது அவருக்கு ஒரு யோசனை வந்தது. இந்தக் கப்பலில் 250 பேர் பிரயாணம் பண்ணுகிறார்கள். இப்பொழுது இவர்கள் மத்தியிலும் நம் நடிப்பு வித்தையைக் காட்டி பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்தார்.
ஒவ்வொரு நாளும் மாலை வேளையிலே மக்கள் பொழுதுபோக்கிற்காக கப்பலின் மேல்தளத்தில் அமர்ந்திருப்பதுண்டு. அவர்களிடத்தில், “நான் உங்களிடத்தில் என்னுடைய நடிப்புத் திறமையைக் காண்பிக்கப் போகிறேன்” என்று சொல்லி, தன்னிடத்தில் இருந்த வைரத்தைக் கையிலெடுத்தார். அதைத் தூக்கிப்போட்டு வித்தைகளைக் காண்பிக்க ஆரம்பித்தார். இந்த வைரத்தைப் பார்த்தவர்கள், “இது அழகாக இருக்கிறது, நன்றாக ஒளி வீசுகிறது” என்று சொல்லி பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அதை மிக உயரத்தில் தூக்கி எறிந்தான். திடீரென்று ஒரு பெரிய காற்று அடித்தது, கப்பல் ஆட ஆரம்பித்தது. வைரத்தைப் பிடிக்க முயற்சி செய்தபோது அந்த வைரம் கடலில் விழுந்துவிட்டது. நன்றாக சிரித்துக்கொண்டிருந்த அந்த நடிகர் தன்னுடைய அறைக்குள் போய் சுருண்டு படுத்துக் கொண்டார். என்ன செய்வதென்று தெரியவில்லை, சிலமாத கால உழைப்பின் பலனை இழந்து போனார். சிம்சோனுக்கு ஆண்டவர் வல்லமை கொடுத்திருந்தார். இஸ்ரவேல் ஜனங்களை ஆளுகை செய்யும் அதிகாரத்தைக் கொடுத்திருந்தார். அவனோ விபசாரியின் மடியிலே தேவன் கொடுத்த வல்லமை எல்லாம் இழந்துவிட்டான். வேதம் சொல்லுகிறது, “பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள்” என்று!
இன்றும் அநேகர் ஆண்டவர் கொடுத்திருக்கிற விலையேறப்பெற்ற இரட்சிப்பை அசட்டையாக எண்ணி பாவத்திலே விழுந்து விடுகின்றனர். இரட்சிப்பு என்பது ஒரு விலையேறப்பெற்ற பொக்கிஷம். இரட்சிப்பை இழந்தால் பரலோகத்தையும் இழந்து விடுவோம். வேதம் சொல்லுகிறது, “அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான்.” இன்றைக்கும் நம்முடைய இரட்சிப்பை இழந்து நரகத்திற்கு போய்விடாதபடி கவனமாயிருப்போம். பரலோகராஜ்யத்தை சுதந்தரிப்போம்.
- P. V. வில்லியம்ஸ்
ஜெபக்குறிப்பு:
நம்முடைய ஊழியத்தை ஜெபத்தாலும், காணிக்கையாலும் தாங்கும் பங்காளர் குடும்பங்களை தேவன் ஆசீர்வதிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250