By Village Missionary Movement
Saturday, 31-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 31-07-2021 (Bible Characters Special)
நெகேமியா
“இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது,… மன்றாடி பரலோகத்தின் தேவனை நோக்கி:” – நெகேமியா 1:4
இஸ்ரவேலர் தேவபார்வைக்கு பொல்லாப்பானதை மீண்டும் மீண்டும் செய்து வந்ததால், தேவன் அவர்களை புறஜாதியாரின் கைகளில் ஒப்புக்கொடுத்தார். அவர்கள் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள். சிறையிருப்பில் மீந்திருந்தவர்களும் மகா தீங்கை அனுபவித்தார்கள். எருசலேமின் அலங்கம் இடிக்கப்பட்டுக்கிடந்தது. அந்நாட்களிலே யூத கோத்திரத்தை சேர்ந்த நெகேமியா என்ற வாலிபனும் சிறைபிடிக்கப்பட்டு பெர்சிய ராஜாவாகிய அர்தசஷ்டாவின் சூசான் அரண்மனையிலே பானபாத்திரக்காரனாக இருந்தான். அப்பொழுது யூதாவிலிருந்து வந்த மனிதர்களிடம் நெகேமியா யூதர்களின் நிலைமையைக் குறித்தும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தான். அவர்கள் யூதர்கள் அனுபவித்து வரும் பெரிய தீங்கைக் குறித்தும் அலங்கம் இடிக்கப்பட்டு தீக்கிரையானதைக் குறித்தும் கூறினார்கள். இதைக்கேட்ட நெகேமியா உட்கார்ந்து அழுது சில நாளாய் துக்கித்து, உபவாசித்து மன்றாடி ஜெபிக்கிறார். இராஜாவிடம் தன் வேண்டுதலை தெரிவித்து அவரிடம் உத்தரவு பெற்று எருசலேம் அலங்கத்தை பல தடைகளையும் தாண்டி 52 நாட்களில் கட்டி எழுப்பினார்.
கடந்த நாட்களில் நமது தமிழகத்தின் நிலை கேள்விக்குறியாய் இருந்தது. நீதி நியாயங்கள் தீக்கிரையாக்கப்பட்டது போல் காணப்பட்டது. மர்மங்கள் தொடர்ந்தன. உண்மைக்கு முரணான செய்திகளையே கேட்டோமேயன்றி நிஜத்தை அறியமுடியவில்லை. ஆனாலும் நிலைமையை விசாரித்துக்கொண்டேயிருந்தோம். செய்தித்தாள், தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் மூலம் அப்போதைக்கு அப்போதே மக்களின் உணர்வுகளையும் அதிகாரத்திலுள்ளவர்களின் ஆதிக்கத்தையும் கண்சிமிட்டாமல் பார்த்துக்கொண்டே இருந்தோம். இப்படி அனைத்து செய்திகளையும் அறிந்தும் நம்மில் எத்தனை பேர் நெகேமியாவின் இருதயத்தோடு ஜெபித்தோம்? தேவன் நமது ஜனத்திற்கு ஷேமத்தை கொடுக்கும்படி நமது பாவங்களை எல்லாம் அறிக்கையிட்டு தேவனிடம் மன்றாடினோமா?
பிரியமானவர்களே! ஆசீர்வாதமான தமிழ்நாடு உருவாக அதற்கு தேவபிள்ளைகளின் பங்கு மிகவும் அவசியம். பாதுகாப்பு என்னும் அலங்கம் கட்டப்படவேண்டுமாயின் நாம் துரிதமாய் செயல்பட வேண்டும். தேவ ஜனத்திற்கு வரும் தீங்கிற்காக எஸ்தரைப்போல உபவாசித்து ஜெபிக்க வேண்டும். ஆம், இப்படிப்பட்ட காலத்திற்கு உதவியாயிருக்கும்படியே தேவன் நம்மை வைத்திருக்கிறார். ஆகவே நாம் எப்பொழுதும் ஸ்தோத்திரத்தோடே கூடிய விண்ணப்பத்தை தேவசமூகத்தில் ஏறெடுத்துக்கொண்டே இருப்போம். நம் ஒரே நோக்கம் ஆண்டவரின் இரண்டாம் வருகைக்கு நாம் வாழும் தமிழகத்தையும் ஆயத்தப்படுத்த வேண்டுமென்பதே! இந்த பாரம் நமக்கிருந்தால் தேசத்தின் நிலைக்காக கருத்தாய் ஜெபிக்காமல் இருக்கவே முடியாது.
- J. பவுல்ராஜ்
ஜெபக்குறிப்பு:
மோட்சப் பயணம் தின தியான இதழை அச்சடிப்பதற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250