Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25-07-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 25-Jul-2021

இன்றைய தியானம்(Tamil) 25-07-2021 (Kids Special)

 

மிரியாமின் ஞானம் 

 

“...ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக் கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.” - நீதிமொழிகள் 11:30

 

குவா...குவா... என்ற சத்தத்தோடு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை கைகளை ஆட்டிக்கொண்டும், கால்களை உதைத்துக்கொண்டும் இருந்தது. ஆனால் அந்த வீட்டில் எல்லாரும் சோகமாக இருந்தார்கள். தாய் தன் குழந்தையை அழாதபடி அணைத்துக்கொண்டாள். மகிழ்ச்சியாய் இருக்க வேண்டிய தாய் கவலையோடும், பயத்தோடும் இருந்தார்கள். ஏன் தெரியுமா? எகிப்து தேசத்திலே இஸ்ரவேலர்கள் அடிமைகளாய் இருந்தார்கள். அந்த தேசத்திலே இஸ்ரவேலர்கள் அதிகமாக பெருகிவிட்ட காரணத்தால், “அவர்களுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகளை கொன்றுபோடுங்கள்” என்று கொடூரமான கட்டளையிட்டார் அந்த நாட்டு ராஜா. இப்ப சொல்லுங்க, அவர்களால் சந்தோஷமா இருக்கமுடியுமா? முடியாதுதனே. அந்த குழந்தைக்கு ஆரோன் என்ற அண்ணனும், மிரியாம் என்ற அக்காவும் இருந்தார்கள். தம்பி பிறந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல், இரகசியமாய் வைத்துக் கொண்டார்கள். 

 

குழந்தை வளர வளர அதிகம் சத்தம் போட்டது. அண்ணனையும், அக்காவையும் பார்த்து சிரிக்க ஆரம்பித்தது. இனிமேல் இந்த குழந்தையை மறைத்து வைக்க முடியாது என அம்மா நினைத்தார்கள். உடனே மிரியாமை அழைத்து, “ஆற்றங்கரைக்கு போய் நாணல் குச்சிகளை ஒடித்துவா, ஆரோன், நீ ஒட்டுகிற கீல் கொஞ்சம் கொண்டுவா” என்றார்கள் அம்மா. இதையெல்லாம் வைத்து அம்மா என்ன செய்யப் போறாங்க என்று யோசித்துக்கொண்டே இருவரும் அம்மா சொன்ன வேலையை செய்து முடித்தார்கள். அம்மா நாணல் குச்சிகளால் விரைவாக ஒரு கூடை செய்தார்கள். அதற்குள் தண்ணீர் உட்புகாமல் இருக்க கீல் பூசினார்கள். குழந்தையை கூடைக்குள் வைத்தார்கள். மிரியாமுக்கும், ஆரோனுக்கும் அழுகையாய் வந்தது. வேறு வழி இல்லை. நைல் நதிக்குக் கொண்டுபோய் கூடையை மிதக்க விட்டார்கள். மிரியாம் நதிக்கரையில் நின்று தம்பிக்கு என்ன ஆகுமோ? என்று பார்த்துக்கொண்டிருந்தாள். கொஞ்ச நேரத்தில் இளவரசி அந்த வழியே வந்தார்கள். என்ன இது கூடை என்று திறந்து பார்த்தால் அழகான குழந்தை பசியால் அழுதது. தூரத்தில் நின்ற மிரியாம் ஓடிவந்து, “நான் போய் உதவிக்கு யாரையாவது கூட்டிக்கொண்டு வரட்டுமா இளவரசி” என ஞானமாய் பேசினாள். சரி என்றவுடன் ஓடிப்போய் தன் அம்மாவையே கூட்டிக்கொண்டு வந்தாள். “இந்த குழந்தை பெரியவனாகிறவரை இவனை வளர்த்து என்னிடம் தா” என்று உத்தரவிட்டாள் இளவரசி. தன் குழந்தையை காப்பாற்றித் தந்த தேவனுக்கு நன்றி சொல்லிக் கொண்டே மிரியாமும் அம்மாவும் வீட்டை நோக்கி நடந்தார்கள்.

 

குட்டீஸ், மிரியாம் தன் தம்பியை காப்பாற்றுவதில் எவ்வளவு ஞானமாய் செயல்பட்டாள் பார்த்தியா? சரி நீயும் மிரியாம் மாதிரி ஞானமாக பேசவேண்டும் என்றுதான் உனக்கு இந்த கதையை சொல்கிறேன். நீ என்ன செய்யலாம் தெரியுமா? லீவுக்கு உன் வீட்டிற்கு வந்திருக்கும் உன் அத்தை பிள்ளை, சித்தி மகன் எல்லோரையும் ஞானமாய் பேசி உன் ஊரில் நடக்கும் VBSக்கு கூட்டிக்கொண்டு போய் அவர்களின் ஆத்துமாவை நரகத்திற்கு செல்லாமல் காப்பாற்றி விடு. சரியா? 

- Mrs. ஜீவா விஜய்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al