By Village Missionary Movement
Wednesday, 21-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 21-07-2021 (Bible Characters Special)
யோசியா ராஜா
“...(யோசியா) மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை...” – 2 இராஜாக்கள் 23:25
வேதத்திலுள்ள இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறுகள் மிகவும் விறுவிறுப்பானது. அவர்களின் வெளிப்படையான செயல்கள் மட்டுமல்லாது இருதயத்தின் எண்ணங்களையும் ஆண்டவர் படம்பிடித்துக் காட்டியுள்ளார். அவர்களில் நல்ல முன்மாதிரிகளைவிட, நம்மை எச்சரிக்கப்பண்ணும் முன்மாதிரிகளே அநேகம். அதிலே மிக இளவயதில் ராஜாவாகி, மிகப்பெரிய ஆவிக்குரிய மறுமலர்ச்சியை உருவாக்கினவர் கிங் யோசியா! இவர் வாழ்விலிருந்து நிச்சயமாய் நாம் நிறையக் காரியங்களை கற்றுக்கொள்ள முடியும். இப்போதைய நம் நாட்டு நிலையைப் பார்க்கும்போது காலச்சக்கரம் சுழன்று கி.மு. 639ம் ஆண்டிற்கு நாம் சென்றுவிட்டால் கூட நலமாயிருக்கும். ஆம், அதுதான் யோசியா ராஜாவின் ஆட்சிக்காலம்!
இவர் யூதாவை ஆண்ட ஒரு தேவபயமுள்ள ராஜா. தனது 8 வது வயதில் ராஜாவாகி 31 ஆண்டுகள் (639-608) ஆட்சிபுரிந்தார். அவருக்கு முன்பிருந்த ராஜாக்கள் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கிரம ஆட்சிதான் நடத்தினர். ஆனால் யோசியாவோ தான் இளவயதாயிருக்கும்போதே தேவனைத் தேட ஆரம்பித்து சுரூபங்களையும், விக்கிரகங்களையும் அழித்து, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினார். 18 வயதாகும்போது தேவாலயத்தை பழுதுபார்க்கத்தொடங்கினார். அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவின் கையில் வேதம் (ஆதி. முதல் உபாகமம் வரை) கிடைத்தது. அதிலே நியாயப்பிரமாணத்தின்படி நடக்காவிட்டால் வரும் சாபங்களை யோசியா வாசிக்கக் கேட்டபோது பயந்து, நடுங்கி, தன் வஸ்திரத்தைக் கிழித்துக் கொண்டு தன்னைத் தாழ்த்தினார் (2இரா. 22:19) இவரைக் குறித்து வேதம் கொடுக்கும் நற்சாட்சி என்ன தெரியுமா? “அவனைப் போலொத்த ராஜா அவனுக்கு முன் இருந்ததுமில்லை; அவனுக்குப் பின் எழும்பினதுமில்லை.”
விசுவாசக்கூட்டத்தாரே! யோசியா ராஜா இன்று நம்மை சந்திப்பாரானால் என்ன கூறுவார்? “வேதத்தின் முதல் ஐந்து புத்தகத்தை படித்தபோதே என் இருதயம் இளகினதே, முழு வேதாகமத்தையும் வைத்துக்கொண்டு உங்களால் எப்படி அதை வாசிக்காமல் அதற்கு கீழ்ப்படியாமல் செயல்படாமல் இருக்கமுடிகிறது? ஜனங்களே, எனக்கு முன்னிருந்த ராஜாக்கள் எனக்கு முன்மாதிரிகளாய் இருக்கவில்லை. அவர்கள் வேதத்தை தேடவேயில்லை. வேதம் ஆலயத்திலேயே தொலைந்து போயிற்று. எத்தனை பரிதாபம்! இஸ்ரவேலின் ராஜாவாகிய இரண்டாம் யெரோபெயாமின் நாட்களில் வாழ்ந்த ஓசியா தீர்க்கன் மூலம் ஆண்டவர் உரைத்த எச்சரிப்பு உங்கள் நினைவிலுள்ளதா? “நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய். ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்” ஆகவே வேதத்தை வாசியுங்கள், அதற்கு கீழ்ப்படியுங்கள். அது ஒன்றே இந்த பொல்லாத உலகில் உங்களை காக்க ஒரே வழி! என்னுடைய ஆட்சிக்காலத்தில் ஜனங்கள் சமாதானமாயிருந்தனர். நீங்கள் வேதத்தை நேசிப்பீர்களென்றால் ஆட்சி யார் கையிலிருந்தாலும் உங்களுக்கு சமாதானம் உண்டு.”
- P. ராம்குமார் ஜேம்ஸ்
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு நாளும் தியான செய்தியை எழுதிக்கொடுக்கும் தேவப்பிள்ளைகளை தேவன் தமது அபிஷேகத்தால் நிரப்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250