By Village Missionary Movement
Thursday, 08-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 08-07-2021 (Bible Characters Special)
தெபொராள்
“நான் யாபீனின் சேனாபதியாகிய சிசெராவையும், அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்....” – நியாயாதிபதிகள் 4:7
இன்றைய தியானப்பகுதியிலே தெபொராளாகிய நானே உங்களுடன் பேச வந்துள்ளேன். நான் ஒரு வேதாகமப்பெண்மணி. தெபொராள் என்ற என் பெயருக்கு “தேன் ஈ” என்று பொருள். நானும் தேனீயைப் போன்று சுறுசுறுப்புடன் செயல்பட்டேன். என் கணவர் லபிதோத்து. நாங்கள் ராமாவுக்கும் பெத்தேலுக்கும் இடையேயுள்ள எப்பிராயீம் மலை தேசத்தில் ஒரு பேரீச்சை மரத்தின் கீழ் வாழ்ந்தோம்.
குடும்பத்தலைவியான என் பொறுப்புகளையும் கடமைகளையும் விரைவாக முடித்துவிட்டு அனுதினமும் பேரீச்சை மரத்தின் கீழ் வந்து அமர்ந்து விடுவேன். அடுத்தடுத்து மக்கள் கொண்டுவரும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் கர்த்தரின் உதவியோடு நியாயம் விசாரித்து தீர்ப்பு வழங்குவேன். இஸ்ரவேலின் 16 நியாயாதிபதிகளில் நான் ஒருத்தியே பெண். வேதாகமத்தில் 7 பெண் தீர்க்கதரிசிகளில் நானும் ஒருத்தி. யாபீன் என்ற கானானிய ராஜா 20 வருடமாக தேவ ஜனங்களாகிய எங்களை கொடுமைப்படுத்தினான். நாங்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டதின் நிமித்தமாக கர்த்தர் பாராக்கை எழுப்பினார். ஆனால் பாராக்கோ யுத்தத்துக்குப் பயந்து, “நீ என் கூட வந்தால்தான் நான் போவேன்” என்றான். நானும் சென்றேன். நாங்கள் யுத்தத்தில் ஜெயம் பெற்றதால் கர்த்தரை பாடி துதித்தோம். எனக்கு எப்பொழுதும் கர்த்தரைத் துதித்துப் பாடிக்கொண்டே இருப்பதென்றால் அலாதி பிரியம்.
நான் இஸ்ரவேலிலே நியாயாதிபதியாக இருந்த நாட்களில் 40 வருடம் தேசம் அமைதலாயிருந்தது. நான் மக்களின் நலன்கருதி சமுதாயத்திற்கு பல நன்மைகள் செய்ய தேவன் என் கைகளை பலப்படுத்தினார். கொடூர ஆட்சிக்காரனான யாபீனுக்கு பயந்து ஜனங்கள் கிராமங்களை விட்டு ஓடிப்போனார்கள். அவர்களை திரும்ப அழைத்து வந்து அவரவர் கிராமங்களில் குடியேற்றினேன். தேவ பெலத்தால் இப்படி பல நன்மைகளை மக்களுக்கு செய்ததால் அவர்கள் என்னை தாயாகிய தெபோராள் என்று அழைத்தனர்.
என் சகோதர சகோதரிகளே! நீங்களும் தேவனுக்காய் செயல்படும்படி எழும்புங்கள். சூழ்நிலைகள் சாதகமாயில்லை என்கிறீர்களோ? என் வாழ்விலும் சாதகமற்ற சூழ்நிலைகள் இருக்கத்தான் செய்தன. குடும்பத்தின் பொறுப்புகளும் அன்றாட அலுவல்களும் எனக்குமிருந்தன. அவைகளை திட்டமிட்டு செய்து தேவனுக்காகவும் எழும்ப வைராக்கியம் கொண்டேன். தேவனுக்காக எழும்பும் எவரும் சாதிக்காமல் முடங்குவதில்லை. பெலவீனப் பாண்டங்களாகிய பெண்களையும் தேவன் தம் சித்தப்படி பயன்படுத்துவார் என்பது நிச்சயம். ஆம், உங்களைக் கொண்டு சுற்றியுள்ள கிராமங்களுக்கு இரட்சிப்பை தேவன் கட்டளையிட ஆயத்தமாயுள்ளார். எழும்புவீர்களா? இஸ்ரவேலுக்கு தாயாக விளங்கிய நான், இந்தியாவிற்கு தாயாக நீங்கள் மாறவேண்டுமென்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.
- Mrs. ஜெபா டேவிட்கணேசன்
ஜெபக்குறிப்பு:
Lockdown காரணமாக பள்ளிக்குச் செல்லாமல் வீடுகளில் இருக்கும் பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்திற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250