By Village Missionary Movement
Friday, 02-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 02-07-2021 (Bible Characters Special)
ஆபிரகாம்
“ஆபிராம் லோத்தை நோக்கி,… வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்.” - ஆதி.13:8
சொந்தமா, சொத்தா? என்று முடிவெடுக்கவேண்டிய கட்டத்திலிருந்த ஆபிரகாமின் அருகில் லோத்து நின்று கொண்டிருந்தார். எகிப்தை விட்டு வெளியேறிய சமயத்தில் ஆபிரகாமுடன், அவரது அண்ணன் மகனான லோத்தும் வந்தார். ஆபிரகாம் ஏராளமான பொன், வெள்ளி, ஆடு மாடுகளைக் கொண்ட செல்வச்சீமான். அவரோடு கூடவே லோத்துவின் ஆடு மாடுகளும், வேலையாட்களும் இருந்தனர். இருவரின் கூடாரங்களும் அருகருகே இருந்தன. இப்படி ஒருமித்து வாசம் பண்ணிக்கொண்டிருந்த நாட்களில் ஒருநாள் இருவரின் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. இத்தனை நாட்களாய் ஒற்றுமையாய் வாழ்ந்த இவர்களின் வீட்டு பிரச்சனைகளை வேடிக்கை பார்க்க கூடினர் உடன் குடியிருந்த கானானியரும் பெர்சியரும்! பெரிய பூகம்பம் வெடிக்கப்போகிறது என்று பார்த்தால் சின்ன மிளகாய் வெடி கூட வெடிக்கவில்லை. ஆபிரகாம் மிகவும் அமைதியாக லோத்துவிடம் பேசிக்கொண்டிருந்தார், “நாம் சகோதரர், நமக்குள் வாக்குவாதம் வேண்டாம். இவ்வளவு பெரிய தேசம் நமக்கு முன்பாக இருக்கிறது. எனவே நீ இடதுபுறம் போனால் நான் வலதுபுறம் போகிறேன். நீ வலப்புறம் என்றால் நான் இடதுபுறம் செல்கிறேன்” என்று கூறி தன்னோடு ஒட்டிக்கொண்டு வந்த லோத்துவுக்கு தெரிந்தெடுக்கும் உரிமையை பெருந்தன்மையாய் விட்டுக்கொடுத்தார். லோத்தை விட ஆபிரகாம் வயதிலே, வசதியிலே, வாழ்ந்த அனுபவத்திலேயே பெரியவராயிருந்தாலும் தனது உரிமையை பின்னுக்குத் தள்ளிவிட்டு, உறவை உடையாமல் பார்த்துக்கொண்டார்.
பிரியமானவர்களே! நம்மைக் குறித்து என்ன? எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்? உரிமைக்கா, உறவுக்கா? ஒரு அடி நிலத்திற்காக உரிமை பாராட்டி உறவுகளை உடைத்தெரிகிறவர்களாய் இருக்கிறோமா? சிந்திப்போம். உறவிற்காக, உரிமையை விட்ட பழைய ஏற்பாட்டு ஆபிரகாமை புதிய ஏற்பாடும் மறக்காமல் பல இடங்களில் அவரைச் சுட்டிக்காட்டுகிறது. இன்றைக்கு நாமும் அவரைக்குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். ஆம், இவ்வுலகம் நிலையானதல்ல. நம் உயிருக்கும் எந்த கேரண்டியும் கிடையாது. நாளைய தினம் நம்முடையதல்ல. பின் ஏன் குடும்பத்தை போர்க்களமாக்கிவிடுகிறோம். ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்கள், ஒரே ஊரில் எதிரிகளாய் இருக்கலாமா? ஆபிரகாமை நினைத்துக்கொள்வோம். விட்டுக்கொடுத்தால் தேவன் உங்களை தட்டிக்கொடுத்து வாழ வைப்பார்.
- C. ஜெயக்குமாரி
ஜெபக்குறிப்பு:
தினந்தோறும் You tube, Facebook ல் வெளிவரும் வேதபாடத்தை அநேகர் பார்த்து ஆவிக்குரிய வாழ்வில் மேம்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250