By Village Missionary Movement
Thursday, 01-Jul-2021இன்றைய தியானம்(Tamil) 01-07-2021 (Bible Characters Special)
ஆபேல்
“...அவன் (ஆபேல்) நீதிமானென்று சாட்சி பெற்றான்;... அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.” – எபிரெயர் 11:4
ஒரே வீட்டில், ஒரே சூழ்நிலையில், தேவனைக் குறித்த ஒரே போதனையில் வளர்ந்து வந்தன இருபிள்ளைகள். அப்படியிருந்தும் இருவரின் குணநலன்களும், எதிரும் புதிருமாய் ஒருவருக்கொருவர் முற்றிலும் வித்தியாசமாகவே இருந்தது. அந்த இரு சகோதரர்கள்தான் காயீனும், ஆபேலும். பூமியில் பிறந்த முதல் குழந்தைகள் இவர்கள்தான். இவர்கள் வாலிபராய் வளர்ந்த நாட்களில் ஆபேல் ஆடுகளை மேய்த்தான், காயீன் நிலத்தைப் பயிரிட்டான்.
சில நாட்களுக்கு பின், இருவரும் கர்த்தருக்கு காணிக்கைகளை கொண்டு வந்தனர். கர்த்தர் ஆபேலையும் அவன் காணிக்கையையும் அங்கீகரித்தார். காயீன் தான் அங்கீகரிக்கப்படாமல் போனதினிமித்தம் தன் சகோதரன் மேல் பொறாமையும், கோபமும் கொண்டான். இதைவிடவும் மோசமான கொலைவெறியின் ஆவி காயீனை பிடித்துக் கொள்ளும்படி வாசற்படியில் தயாராய் காத்திருந்தது. காயீன் நயவஞ்சகமாய் ஆபேலை தன்னோடு வயல்வெளிக்கு வாக்கிங் செல்ல அழைக்கிறான். ஆனால் ஆபேலின் இருதயத்திலோ, “என் அண்ணனை விட நான் விசேஷமானவன்” என்ற பெருமையோ, அவன் தனக்கு தீங்கு செய்துவிடுவானோ என்ற சந்தேகமோ இல்லை. வெள்ளை உள்ளத்தோடு தன் சகோதரனோடு நடந்தான். ஆனால் காயீனோ பொறாமையினால் பொங்கி ஆபேலை கொன்று போட்டான். ஆபேல் அழிந்தான்; இனி போட்டிக்கு ஆளில்லை என காயீன் நினைத்திருப்பான். ஆனால் உண்மையில் அழிந்தது ஆபேலல்ல, காயீனே! ஆபேல் தேவசந்நிதிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டான். காயீனோ தேவசந்நிதியிலிருந்து தூர விலகிப்போனான்.
பிரியமானவர்களே! தன்னைக் கொலை செய்ய தயாராயிருந்த காயீனை கொஞ்சமும் சந்தேகம் கொள்ளாத ஆபேலின் நல்ல இருதயத்தைப் பாருங்கள். இந்த இருதயமல்லவா நமக்கும் தேவை. ஆபேலின் இருதயம் காயீனுக்கு விரோதமாய் பெருமை கொண்டு தன்னை உயர்த்தவே இல்லை! தன்னைக் காயீனோடு ஒப்பிட்டு மகிழவோ அல்லது காயீன் வாழ்விலுள்ள குறைகளைக் காண்பதற்கோ அவன் கடுகளவும் விரும்பவில்லை. நம்முடைய சகோதரர்களோடுள்ள உறவில் நாம் பின்பற்றி நடக்க வேண்டிய பாதையும் இதுவே. ஆபேலுக்கு இந்த குணத்தை சொல்லித்தர வேதமோ, சபையோ, போதகரோ இல்லை. தான் பின்பற்றத்தக்க மாதிரியுமே அவனுக்கு முன் இருந்ததில்லை. இருப்பினும் தேவனை மட்டுமே நோக்கிப்பார்த்து நீதிமானாய் வாழ்ந்தான். அவர்கள் என்மீது பொறாமைப்படுவார்களோ, என் குடும்பத்திற்கு ஏதாகிலும் தீங்கு விளைவித்து விடுவார்களோ என்று எப்போதும் சந்தேகத்தோடே வாழவேண்டாம். வஞ்சகமில்லாமல் கள்ளம் கபடற்று வெள்ளை உள்ளத்தோடு வாழ்வோம். கர்த்தரை நம்பி நன்மை செய்துகொண்டேயிருப்போம். தன்னைக் காட்டிக்கொடுப்பவனையும் கூடவே வைத்திருந்து அவன் கால்களையும் கழுவி, சிநேகிதனே என்று அழைத்த இயேசு கிறிஸ்துவின் சிந்தை நம்மிடமும் காணப்படட்டும்.
- Bro. சகரியா
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறும் ஊழியங்களில் தேவகரம் உடனிருந்து நடத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250